(2164)

வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்

நிரைவிடையேழ் செற்றவா றென்னே, - உரவுடைய

நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,

பேராழி கொண்ட பிரான்?

 

பதவுரை

உரவு உடைய

-

மிடுக்கை யுடைத்தான

நீராழியுள்

-

நீரையுடைய திருப்பாற்கடலிலே

கிடந்து

-

திருக்கண்வளர்ந்து,

நேர் ஆ(ன)

-

எதிரியாகவந்த

நிசாசரர் மேல்

-

மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின்மீது

(அவர்கள் நீறாகும்படி)

-

பேர் ஆழி

-

பெரிய சக்ராயுதத்தை

கொண்ட

-

கையிற் கொண்டிருக்கிற

பிரான்

-

உபகாரகனே!

(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கைநிற்க வல்ல திருவாழியாழ்வானிருக்கவும் அவனைக்கொண்டு காரியங்கொள்ளாமல்)

வரை குடை ஆக

-

(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.

தோள் காம்பு ஆக

-

தனது திருத்தோளே அந்தக்குடைக்குக் காம்பாகவும் ஆக்கி

ஆ நிரை காத்து

-

பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,

(நப்பின்னைப் பிராட்டிக்காக)

ஆயர் நிரை விடை ஏழ்

-

இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்

செற்ற ஆரு

-

முடித்த விதம்

என்னே

-

எங்ஙனே?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானே! ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதும் ஆச்ரித விரோதிகளை சிக்ஷிப்பதுமாகிய இரண்டு காரியங்கள் உனக்கு உண்டு; ஆச்ரிதவிரோதிகளை சிக்ஷிப்பதுதானே ஆச்ரித ரக்ஷணமாகத் தேறுமாதலால் விரோதிகளைத் தொலைப்ப தென்கிற ஒரு காரியமே போதுமாயிருக்கின்றது; அக்காரியஞ் செய்ய உனக்கு முக்கியமான ஸாதநம் திருவாழி; அத்திருவாழியைக் கொண்டே ஆச்ரித விரோதிகளைப் பொடிபடுத்துகின்றாய்; மதுகைடபர் முதலிய துஷ்டவர்க்கங்களைப் பொடிபடுத்தின அவ்வாயுதம் கையிலேயிருக்கவும், ஆநிரையைக் காக்க மலையையெடுப்பதும் நப்பின்னையைக் காக்க விடையேழடர்ப்பதும் முதலியனவாக உடம்புநோவக் காரியஞ்செய்த்து என்னோ? திருவாழியை ஏவினால் இந்திரனது தலை அறுபடுமே; கல்மழை ஓயுமே; ஆயர்களும் ஆநிரைகளும் இனிது வாழ்ந்து போமே; மலையை யெடுத்துப் பரிச்ரமப்பட்டிருக்க வேண்டாவே; இங்ஙனமே, நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்கு விரோதியாயிருந்த எருதுகளின் மேலும் திருவாழியைப் பிரயோகித்திருந்தால் உனக்கொரு சிரமமின்றியே காரியம் இனிது நிறைவேறியிருக்குமே; இப்படி அநாயாஸமாக ஆச்ரித விரோதிகளை நிரஸிக்கும் முகத்தாலேயே ஆச்ரித ரக்ஷணத்தை மிக எளிதாகச் செய்யலாமாயிருக்கவும் நீ உடம்புநோவக் காரியஞ்செய்தது வெறுமனேயோ? ஆச்ரித பாரதந்திரியத்தால் அவர்கள் காரியத்தைச் செய்வதைப் பெறாப்பேறாக நினைப்பதனாலன்றோ? – என்று ஆழ்வார் எம்பெருமானது ஆச்ரித பாரதந்திரியத்திலீடுபட்டுப் பேசினரென்க.

மூன்றாமடியில் ‘நேரான’ என்றிருக்க வேண்டிய பெயரெச்சம் ‘நேரா’ என்றிருக்கிறது.

‘நிசாசரர்’- வடசொல்; இரவில் திரிகின்றவர்கள் என்று காரணக்குறி.

 

English Translation

The hill became an umbrella, the arm became its stem, when the lord protected the cows. Oh! How he killed seven mighty bulls in the contest! Reclining in the deep ocean wielding his sharp discus on warring Asuras, he is the lord of all.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain