(2119)

ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,

பேர எறிந்த பெருமணியை, - காருடைய

மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்

என்னென்ற மால திடம்.

 

பதவுரை

ஊரும்

-

திரிகின்ற

வரி அரவம்

-

(உடம்பில்) கோடுகளையுடைய ஸர்ப்பமானது,

ஒண் குறவர்

-

அழகிய குறவர்கள்

மால் யானை பேர

-

(பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக

எறிந்த

-

(அவ்யானைகளின்மேல்) வீசியெறிந்த

பெரு மணியை

-

பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)

கார் உடைய மின் என்று

-

மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)

புற்று அடையும் வேங்கடம்

-

புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,

மேல சுரர்

-

மேற்பட்டவர்களான நித்யஸூரிகள்

எம் என்னும் மாலது

-

‘எங்களுடையவன்’  என்று அபிமாநிக்கும்படியாகவுள்ள எம்பெருமானது

இடம்

-

திவ்யதேசமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவேங்கடமலையே நித்யஸூரி நிர்வாஹகனான எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமென்கிறார். திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள் முற்றும் மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாயிருக்கும். ஸ்ரீகுலசேகராழ்வார் தம்முடைய பிரபந்தத்திலே * நான்காந்திருமொழியிலே “வேங்கடத்துக்கோனேரிவாழுங் குருகாய்ப்பிறப்பேனே” என்று தொடங்கித் திருமலையிற் பலவகை பிறவிபிறக்கக் குதூஹலித்து, கடைசியாக “ எழில் வேங்கடமென்னு மெம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாவேனே” என்று தலைக்கட்டியிருப்பதற்கேற்ப, இக்குலசேகராழ்வாரைப் போன்ற அத்யவஸாயமுடைய மஹான்களே திருமலையில் பாம்பாகவும் குறவராகவும் யானையாகவும் புற்றாகவும் பிறந்திருப்பர்களாகையாலே அப்பொருள்களையும் எம்பெருமானைப் போலவே உத்தேச்யமாகக்கொண்ட இவ்வாழ்வார் இப்பாசுரத்தாலே தம்முடைய ப்ரதிபத்தியை வெளியிடுகின்றாரென்க.

குறவர்களுக்குப் புனங்காப்பது தொழில்; புனங்களிலே யானை முதலிய ஜந்துக்கள் பட்டிமேயப் புகும்; அவற்றைத் துரத்திப் புனத்தைக் காவல்செய்து கொள்ளவேண்டிய குறவர் தாங்கள் பரண்களிலேயிருந்தபடியே தங்கள் கையிலுள்ள பெரிய மாணிக்கக்கட்டியை யானையின்மீது எறிவர்கள் – யானை புனத்தைவிட்டு அப்பால்போவதற்காக. அப்போது அங்குத்திரியாநின்ற மலைப்பாம்புகளானவை யானையின்மேற்பட்ட ரத்னத்தைக்கண்டு, யானையை மேகமாகவும் ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து மேகத்தில் மின்னலுண்டானவுடனே இடி உண்டாகுமாகையாலும் , பாம்புகள் இடிக்கு அஞ்சி ஒளிக்கு மியல்புடையனவாகையாலும் அப்பாம்புகள் புற்றினுள்ளே புகாநிற்கும். இப்படிப்பட்ட தன்மைவாய்ந்த திருமலை எம்பெருமானது திருப்பதியாம் என்றாராயிற்று.

 

English Translation

Worshipful celestials descend saying, "Our Lord's abode", where gypsies hurl brilliant gemstones to drive away wild elephants, that striped serpents mistake for lightning clouds and creep into hiding in venkatam.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain