(2113)

இமையாத கண்ணால் இருளகல நோக்கி,

அமையாப் பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல்,

ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்

நாகத் தணையான் நகர்.

 

பதவுரை

இமையாத கண்ணால்

-

[ஞானத்தில் குறைவில்லாதநெஞ்சு என்னும்] உட்கண்ணாலே

இருள் அகல

-

[அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும்படியாக

நோக்கி

-

(தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு

அமையா

-

த்ருப்திபெற்று அடங்கியிராத

பொறி புலன்கள் ஐந்தும்

-

பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்சவிஷயங்களையும்

நமையாமல்

-

அடக்காமலே

ஆகத்து அணைப்பார்

-

(மாதர்களின்) தேஹத்தை அணைத்துக்கொண்டு கண்டபடி திரிபவர்கள்

ஆயிரம் வாய் நாகத்து அணையான்

-

ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப்படுக்கையாகவுடைய எம்பெருமானது

நகர்

-

நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை

அணைவரே

-

கிட்டப்பெறுவர்களோ?.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டுக்கு இரண்டு வகையாகக் கருத்துரைக்க இடமுண்டு. மூன்றாமடியில், அணைவரே என்ற விடத்து ஏகாரத்தைத் தேற்றப் பொருளதாகக் கொண்டால், அணைவர்-கிட்டப்பெறுவர்கள் என்று பொருளாய்விடும். அன்றி ஏகாரத்தை எதிர்மறைப் பொருளதாகக் கொண்டால், அணைவரே?- சேருவர்களோ? சேரமாட்டார்கள் என்றதாகும். ஒன்றோடொன்று முரண்படுகின்ற இரண்டு பொருள்களும் பொருந்துமோ எனின்; கேண்மின்: இந்திரியங்களைப் பட்டிமேயவொட்டாமல் அடக்கி ஆளாதே ஸ்த்ரீகளின் உடம்போடே அணைத்து மனம் போனபடியே திரியுமவர்கள் பரமபதத்தைக் கிட்டமாட்டார்கள்; இவ்வுலகத்துக்கும் நரகத்துக்குமே போக்குவரத்தாயிருப்பர்கள் என்பது ஒரு கருத்து. இந்திரியங்களை அடக்கி ஆளாவிட்டாலும் எம்பெருமான் தானாகவே கடாக்ஷிக்கும்போது அவனை விலக்காதவர்களுக்கு உஜ்ஜீவிக்க வழியுண்டு என்கை மற்றொரு கருத்து. இதில், “ஆகத்து அணைப்பார்” என்பதற்கு – எம்பெருமானாலே அந்தரங்கத்தில் விஷயீகரிக்கப் பெறுமவர்கள் என்று பொருள் கொள்ளுதல் நன்று. இவ்விரண்டு கருத்துகளில் முந்தின கருத்து சேதநஸ்வ ரூபத்துக்குப் பொருந்தினது; பிந்தின கருத்து பகவந்நிர்ஹேதுக க்ருபாவைபவோக்திக்குப் பொருந்தினது: இதுவே ஆழ்வார்க்கும் ஆசாரியர்கட்கும் அபிமதமாயிருக்கும்.

இமையாதகண் என்றது-ஞானக்கண். அது திறந்தால் அஜ்ஞானவிருள் அகலுமாதலால் இருளகலநோக்கி என்றார். பொறிபுலன்களைந்தும்—பொறியைந்தும் புலனைந்தும் என்ற படி: சப்தாதிவிஷயக்களைக் கவர்கின்ற செவி வாய் கண் மூக்கு உடலென்னும் பஞ்சேந்திரியங்களும், இவ்விந்திரியங்களுக்கு இலக்காகின்ற சப்தம் ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் என்னும் பஞ்ச விஷயங்களும்.

இந்திரியங்களுக்கு ‘அமையா’ என்றிட்ட விசேஷனம் – பெற்றவற்றைக் கொண்டு த்ருப்திபெற்று அடங்கியிராமையைக்காட்டும்.

 

English Translation

All the while contemplating him, dispelling doubt, keeping the sense unaffected by outside inpulses, those who hold him dear in their hearts will attain the thousand-hooded-snake-reclining lord's abode.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain