(2112)

புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,

அரியுருவும் ஆளுருவுமாகி, - எரியுருவ

வண்ணத்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால்,மற்

றெண்ணத்தா னாமோ இமை?

 

பதவுரை

ஒரு கை புரி பற்றி

-

ஒரு திருக்கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி

(மற்றொரு திருக்கையிலே)

ஓர் பொன் ஆழி ஏந்தி

-

ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி

ஆள் உருவம் அரி உருவம்

-

நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு

எரி உருவம் வண்ணத்தான்

-

அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக்காண முடியாத] வடிவத்தையுடையனான இரணியனுடைய

மார்பு

-

மார்பை

இடந்த

-

நகத்தால் குத்திப்பிளந்து போட்ட

மால்

-

திருமாலினுடைய

அடியை அல்லால்

-

திருவடிகளைத்தவிர

மற்று

-

வேறொரு விஷயத்தை

இமை

-

க்ஷணகாலமேனும்

எண்ணத்தான் ஆமோ

-

நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியவர்கள் திறத்தில் எம்பெருமானுக்குண்டான பாரதந்திரியத்தையும் வாத்ஸல்யத்தையும் அநுஸந்தித்தால் அப்பெருமானைத் தவிர்த்து வேறொருவிஷயத்தை ஒரு நொடிப்பொழுதாகிலும் நினைக்க வழியுண்டோ? என்னவேண்டி, அப்பெருமான் பரமபக்தனாகிய ப்ரஹ்லாதனிடத்துள்ள வாத்ஸல்யத்தாலே செய்தருளின செயலையெடுத்துப் பேசுகிறார்.

புரியொருகைபற்றி = ‘வலம்புரி ‘ என்னும் பதத்தில்  ‘வலம்’ என்பதை நீக்கி, புரியென்பதை  மாத்திரம் இங்குப் பிரயோகித்திருப்பது நாமைகதேசத்தைகொண்டு நாமத்தை க்ரஹிக்கும் முறையாலென்க: ஸத்யபாமையைப் பாமையென்பதுபோல. எம்பெருமானுடைய அவதாரங்களெல்லாவற்றிலும் திவ்யாயுதங்களின் சேர்த்திக்குக் குறையில்லாமையாலே “புரியொருகைபற்றியோர் பொன்னாழியேந்தி” எனப்பட்டது. இத்திவ்யாயுதங்கள் சில அவதாரங்களில் மறைந்திருப்பதும் சில அவதாரங்களில் வெளித்தோன்றியேயிருப்பதும் காரணார்த்தமாகவாம் .

அசுரர்களுடைய உடல் நெருப்புநிறமா யிருக்குமாதலால் எரியுருவ வண்ணத்தான் என்ற சொல்லால் இரணியனைக் கூறினர். பாசுரத்தினிறுதியுலுள்ள இமை என்பதை வினைமுற்றாகக்கொண்டு உரைக்கவுமாம்; இதை ஆராய்ந்துபார் என்கை: நெஞ்சே!’ என்று வருவித்துக்கொள்க.

 

English Translation

The lovable Lord who bears a conch in one hand and a discus in the other, came as half-man-half-lion and destroyed the fierce Asura Hiranya's mighty chest.  Other than his feet, Is there anything to contemplate, worth the while?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain