(2060)

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய். பேராய்,

கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,

பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா,

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே.

 

பதவுரை

வங்கத்தால்

-

கப்பல்களினால்

மா மணி

-

சிறந்த ரத்னங்களை

வந்து

-

கொண்டு வந்து

உந்து

-

தள்ளுமிடமான

முந்நீர்

-

கடற்கரையிலுள்ள

மல்லையாய்

-

திருக்கடன் மல்லையில் வாழ்பவனே!

மதிள் கச்சி ஊராய்

-

மதிள்களையுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே!

பேராய்

-

திருப்பேர்நதராளனே!

கொங்குஆர்

-

தேன்நிறைந்ததும்

வளம்

-

செவ்விபெற்றதுமான

கொன்றை அலங்கல்

-

கொன்றை மாலையை

மார்வன்

-

மார்விலே யுடையனும்

குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான்

-

பர்வதராஜபுத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை

பங்கத்தாய்

-

(வலது) பக்கத்திலுடையவனே!

பால் கடலாய்

-

திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே!

பாரின் மேலாய்

-

ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே!

பனி வரையின் உச்சியாய்

-

குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே

எங்கு உற்றாய்

-

எங்கிருக்கிறாய்?

பவளவண்ணா

-

திருப்பவளவண்ணனே!

எம்பெருமான்

-

எம்பிரானே!

ஏழையேன்

-

மிகவும் சபலனாகிய அடியேன்

உன்னை நாடி உன்னைத் தேடிக்கொண்டு

இங்ஙனமே

-

இவ்வண்ணமாகவே

உழிதருகேன்

-

அலைச்சல்படாநின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானே! நீ திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்குமழகையும் அஹங்காரிகளுக்கும் திருமேனியிலே இடங்கொடுத்திருக்கும் சீலத்தையும் வாய்வெருவிக் கொண்டு திரிவேன் நான் என்கிறார்.

(வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சியூராய்) பரவாஸுதேவனாகிய ஒரு சிறந்த விலையுயர்ந்த ரத்னத்தை அவனது வாத்ஸல்யமென்கிற ஒரு கப்பலானது (த்வீபாந்தரத்தில் நின்றும் த்வீபாந்தரத்திற்குச் சரக்குகளைக் கொண்டு தள்ளுவது போல) திருக்கடல் மல்லை யென்கிற ஒரு தீவிலே கொணர்ந்து தள்ளிற்றாம்; “கானத்தின் கடல் மல்லை“ என்றபடி காட்டுநிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்னத்தைப் பேணுவார் இல்லாமையாலும் ரத்னம் விலைபோவது மஹா நகரங்களிலாகையாலும் அந்தக்கப்பலானது அந்த ரத்னத்தை அங்கிருந்து கொணர்ந்து காஞ்சீபுரத்திலலே திருவெஃகாத்துறையிலே தள்ளிற் றாம்- என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது. ஆழ்வார் தாமும் இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம்பற்றியே பெரியதிருமொழியில் திருக்கடல்மல்லைப் பதிகத்திலும் ”கச்சிக்கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்” என்றருளிச் செய்தது.

புண்டரீகர் என்கிற ஒரு பரம பக்தர், கடலின் இக்கரையிலே ஒரு பெரியதோட்டம் ஏற்படுத்தி அதில் சிறந்த புஷ்பங்களையுண்டாக்கி அவற்றைத் தொடுத்தெடுத்துக் கொண்டு போய் எம்பெருமானுக்கு ஸமர்க்கிக்கவேணுமென்று பாரித்தார்; கடலைக்கடந்து செல்ல வேண்டியிருந்தமையால் இக்கடலைக் கையாலிறைத்துவிட்டு வெறுந்தரையாக்கி நடந்தே செல்லுவோமென்று துணிந்து கடலை இறைக்கத் தொடங்கவே, எம்பெருமான் அவருடைய ஆதராதிசயத்தைக் கண்டு வியந்து உவந்து, தானே கடற்கரையிலே ஓடி வந்து அவரது தோப்பிலே தலைக்கிடை கிடந்து அவருடைய வழிபாடுகளை ஸ்வீகரித்தருளினன் என்பது திருக்கடல்மல்லைத் தலசாயிப் பெருமாளைப் பற்றின புராண வரலாறு.

பேராய்!=பேரில் உள்ளவன் பேரான்; பேராய் என்பது விளி; திருப்பேர் நகரிலுள்ளவனே! என்றபடி.

(கொங்கத்தார் இத்யாதி) கொன்றை மாலையை யணிந்த மார்வையுடையவனும் பார்வதியைத் தனக்கு மனைவியாகக் கொண்டவனுமான ருத்ரனைத் தனது திருமேனியின் ஒரு புறத்திலே இடங்கொடுத்து இருத்தியிருக்குமவனே! என்றபடி.

“கொங்கத்தார்“ என்ற பாடத்தில் ‘கொங்கு அத்து ஆர்‘ என்று பிரித்து ‘அத்து‘ என்பதைச் சாரியையாகக் கொள்ளவேணும். ‘கொங்குத்தார்‘ என்ற பாடத்தில், கொங்கு- தேனையும், தார்-பூக்களையும், வளம்-அழகையுமுடைத்தான, கொன்றையலங்கல்- என்றுரைத்துக்கொள்க. பங்கத்தாய்=‘பங்கு‘ என்று பார்ச்வத்திற்குப் பெயர்; திருமேனியின் கூறு. பங்கில் உடையவன்-பங்கத்தான்; அதன் விளி்.

பாற்கடலாய்=அஹங்காரியான ருத்ரனுக்குத் திருமேனியில் இடங்கொடுத்தவளவேயோ? பிரமன் முதலானோர்க்கு ஓர் ஆபத்து வந்தபோது ரக்ஷகரான நாம் நெடுந்தூரத்திலிருக்க வொண்ணாதென்று பரமபதத்தில் நின்றும் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!.

பாரின்மேலாய்=அஸுரர்களாலும் ராக்ஷஸர்களாலும் குடியிருப்பிழந்து ஸகலதேவதைகளும் வந்து சரணம் புக, ராமக்ருஷ்ணாதி ரூபத்தாலே தன்னை அழியமாறிவந்தவதரித்து இப்பூமண்டலத்தின்கண் உலாவினவனே! என்கை.

பனிவரையினுச்சியாய்!=ஸம்ஸாரதாபத்தை ஆற்றும்படியான குளிர்ச்சி பொருந்திய திருவேங்கட மலையினுச்சியிலே வாழ்பவனே!.

பவளவண்ணா!= பவளம் போல் விரும்பத்தகுந்த்தான வடிவுபடைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று; கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது. இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையேயென்று சிலர் நினைக்கக்கூடுமேலும் இங்ஙனே பொருள்கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;- பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86) “கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-பண்டைத்தவளவண்ணா கார்வண்ணா சாமவண்ணா! கச்சிப், பவளவண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால் கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது; பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர்திருபடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆபத்தமருமான அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம். திருமங்கையாழ்வாருடைய இப்பாசுரத்திலுள்ள ‘பவளவண்ணா!‘ என்கிற விளியைக் கொண்டே ஐயங்கார் அச்செய்யுள் இயற்றியருளின ரென்பது மறுக்கத்தக்கது.

(எங்குற்றாய் இத்யாதி.) அடியார்களுக்காகவே திருப்பதிகளில் ஸந்நிதி பண்ணியிருந்தும் பாவியேனுக்குத் தோற்றா தொழிவது என்னோ; “வருந்திநான் வாசகமாலை கொண்டு, உன்னையே யிருந்திரந்து எத்தனைகாலம் புலம்புவனே” என்றாற்போலே உன்னைக் கூவிக்கூவிக் கதறுவதே எனக்குப் பணியாயிற்றே!, என்படியைக் கண்டாயோ; இன்னமும் இரங்கியருளத் திருவுள்ளமில்லையோ? என்றாராயிற்று.

 

English Translation

O Lord of Mallai on the shores of the sea that washes out heaps of gems!  O Lord of kanchi surrounded by high walls! O Lord of per-nagari the Lord Siva who is spouse of Parvati, -daughter of the mountain-king Malay, -stands by you.  Lord reclining in the milk-ocean, O Lord of the Earth, O Lord standing on high snow-clad peaks! where are you? I wander piteously searching for you.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain