(2059)

நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி

ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே.

 

பதவுரை

நீரகத்தாய்

-

நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!

நெடு வரையின் உச்சி மேலாய்

-

திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!

நிலாத் திங்கள் துண்டத்தாய்

-

நிலாத்திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!

நிறைந்த கச்சி ஊரகத்தாய்

-

செழிப்புநிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருவ்வதியிலுள்ளவனே!

ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்

-

அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!

உள்ளுவார் உள்ளத்தாய்

-

சிந்திப்பாருடைய நெஞ்சி லுறையபவனே!

உலகம் ஏத்தும் காரகத்தாய்

-

உலகமெல்லாம் துதிக்கும்படி யான திருக்காரகயத்திலுள்ளவனே;

கார்வானத்து உள் ளாய்

-

திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!

கள்வா

-

கள்வனே!

காமரு

-

விரும்பத்தக்கதாய்

பூ

-

அழகியதான

காவிரியின்

-

திருக்காவேரியினது

தென் பால்

-

தென் புறத்திலே

மன்னு

-

பொருந்தியிருக்கிற

பேரகத்தாய்

-

திருப்பேர்நகரில் உறை பவனே!

என் நெஞ்சில் பேராது உள்ளாய்

-

எனது ஹ்ருதயத்திலே பேராமலிருக்பவனே!

பெருமான்

-

ஸர்வஸ்வாமியானவனே!

உன் திரு அடியே

-

உனது திருவடிகளையே

பேணினேன்

-

ஆசைப்படா நின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்.

நீரகத்தாய் = திருக்கச்சிமாநகரில் திருவூரகமென்று ப்ரஸித்தமான ஸ்ரீ உலகளந்த  பெருமாள் ஸந்நிதியிலுள்ள திருநீரமென்கிற திவ்யதேசம்; அவ்விடத் தெம்பெருமானை விளித்தபடி. நீரின் ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குந் தலமாதல்பற்றி இத்தலத்திற்கு நீரக மென்று திருநாமமாயிற்றென்பர். நீர்க்கும் எம்பெருமானுக்கும் ஸ்வபாவ ஸாம்யம் பலபடிகளாலுண்டு. அது நமது ஸ்வாதேசார்த்த ஸாக ரத்தில் காணத்தக்கது.

நெடுவரையீனுச்சிமேலாய்=பூமண்டலத்திலுள்ளார் அநுபவிப்பது மாத்திரமன்றியே மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கலாம்படி ஓங்கியுள்ள திருமலையிலே நின்றருள்பவனே! “வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“ “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“ “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற அருளிச் செயல்களறிக.

நிலாத்திங்கள் துண்டத்தாய் = தொண்டை நாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டினுள் ‘நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது ஒரு திருப்பதி; இது பெரிய காஞ்சீபுரத்தில் தேவதாந்தா ஆலயத்தினுள் உள்ளது.

நிறைந்தகச்சியூரகத்தாய்=ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி. எம்பெருமான் உரகரூபியாக இத்தலத்தில் ஸேவை ஸாதிப்பதனால் ஊரகமென்று திருநாமமாயிற்றென்ப.

(உரகம்-ஆதிசேஷன்) நிறைந்த கச்சி யென்றது திவ்ய தேசங்களால் நிறைந்த காஞ்சீ க்ஷத்ரமென்றபடி. திருவூரகத் தெம்பெருமான் தன் திருமேனியொளியாலே திருக்கச்சிமாநகர் முழுவதையும் நிரப்பியிருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்.

ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்=இவ்விடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியங்களின் பரம போக்யதை காண்மின் ;- “திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண்வளர்ந்தருளினவனே!. அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே அழகிய துறை யென்கிறது. தத்ஸம்பந்தத்தாலேயிறே அத்துறையைப்பற்றிக் கிடக்கிறது. (கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா- துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்.”- “கணிகண்ன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா!  நீ கிடக்க வேண்டும் – நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.” என்ற விடுதிப் பாசுரங்களைத் திருமழிசைப்பிரான் வைபவத்திற்காண்க. ஆச்ரிதன் போனபோது அவன் பின்னேபோயும் அவன் வந்தவாறே வந்து கால்நடை தலைமாடாக் கிடந்தும் இப்படியிறே அங்குத்தை ஆச்ரித பாரதந்திரிய மிருப்பது. ‘இந்த வூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார்கொலோ‘ என்று வைஷ்ணவனிருந்த தேசம் வைஷ்ணவனுக்கு உத்தேச்யமாயிருக்குமாபோலே ஆச்ரித ஸ்பர்சமுள்ளதொருதுறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யமா யிருக்கிறபடி.

உள்ளுவபருள்ளத்தாய்! – காஞ்சீக்ஷரத்தில் ‘உள்ளுருவாருள்ளம்‘ என்று ஒரு திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டம்போலவே தேவதாந்திர ஆலயத்தின் உள்ளிருப்பதாகவும், அத்தலத்து எம்பெருமானையே இங்கு ‘உள்ளுருவாருள்ளத்தாய்!‘ என விளித்திருப்பதாகவும் பலர் சொல்லிப் போருவதுண்டு ; இஃது ஆதாரமற்ற வார்த்தையாகும். பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் இங்ஙனே காணவில்லை யென்பதுந்தவிர, பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளின நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் உள்ளுவாருள்ள மென் றொரு திருப்பதி பாடல் பெற்றிராமையும் நோக்கத்தக்கது. தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருக்குமவனே! என்றபடி. எம்பெருமானுக்கு, பரமகதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்ய மென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறானென்றும் நம் ஆசார்யர்கள் நிர்வஹித்தருள்வது இங்கு உணரத்தக்கது.

உலகமேத்துங் காரகத்தாய் = காரகமென்கிற திவ்யதேசமும் திருக்கச்சிமாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கியது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் வாழுமிடமாதல் பற்றி இத்தலத்திற்குக் காரக மென்று திருநாமமாயிற்றென்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஸாம்யம் பலபடிகளால் உய்த்துணரத்தக்கது. (இதுவும் நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விசதம்.)

கார்வானத்துள்ளாய்! = கார்வானமென்பதும் தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கிய திவ்யதேசங்கள் நான்கிலொன்று. கள்வா! = ‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்திலுறைபவனே : பிறர் அறியாதபடி காரியஞ் செய்பவனைக் கள்வனென்பது; எம்பெருமானும் ‘இராமடமூட்டு வாரைப்போலே உள்ள பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரு‘ மவனாகையாலே கள்வனென்ப்படுகிறான்.

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்! = ‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளிகொண்டருள்பவனை விளிக்கிறபடி.

 

English Translation

O Lord who resides in the water, on the lofty peaks, in Nila-Tinga! Tundam, in prosperous kanchi, in the port city of Vehka, in the hearts of devotees in Karvanam , on the Southern banks of beautiful kaveri in Perakam, and forever in my Heart! O trickster, I desire your lotus feet.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain