(2052)

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,

பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்

பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,

தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.

 

பதவுரை

முன் உருவில்

முன்னேயுள்ள (கண்ணாற் காணத்தக்க) பிராகிருத பதார்த்தங்களில்

மின் உரு ஆய்

மின்னின் தன்மையைக் காட்டிக் கொடுத்தவனாய்

வேதம் நான்கு ஆய்

நால் வேதங்களையும் உபகரித்தவனாய்

விளக்கு ஒளி ஆய்

இருளை அகற்றும் விளக்கொளி போலே அஜ்ஞானாந்தகாரத்தைப்போக்கித் தன்ஸ்வரூபத்தைப்ரகாசிப்பித்தவனாய்

முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய்

(மலையில்) தோன்றி (ஆகாசத்திலே) கிளம்பின சந்திரனைப்போலே ஆஹலாதகரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்,

பின் உரு ஆய்

இருபத்தினான்கு தத்துவங்களுக்குப் பிற்பட்ட தத்துவமாகி

முன் உருவின் பிணி மூப்பு இல்லா பிறப்பு இலி ஆய்

முன்னே தோன்றுகிற பிராகிருத வஸ்துக்களுக்குப் போலே வியாதியும் கிழத்தனமுமின்றியே பிறப்பு மில்லாதவனான ஜீவாத்மாவுக்கு நிர்வாஹகனாய்

இறப்பதற்கே எண்ணாது

கைவல்ய மோக்ஷத்தை ஆச்ரிதர்கட்குக் கொடுக்கநினையா தவனாய்

எண்ணும் பொன் உரு ஆய்

எண்ணத்தக்க பொன்போன்ற ஸ்வரூபத்தையுடையவனாய்

மணி உருவின் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய்

திவ்யமங்கள விக்ரஹத்திலே பஞ்சோநிஜந்மயனாய்

புனல் உரு ஆய்

கண்ணீர்போலு ஸர்வஸுலபனாய்

அனல் உருவின் திகழும்

அக்னிபோலே ஒருவர்க்குங் கிட்டவொண்ணாத வடிவையுடையனாய்

சோதி தன் உரு ஆய்

ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்

என் உருவில் நின்ற

என் சரீரத்திலே நின்றவனாய்

எந்தை

எனக்குத் தந்தையான ஸர்வேச்வரனுடைய

தளிர்புரையும் திரு அடி

தளிர் போன்ற திருவடிகள்

என் தலை மேல

எனது தலையிலே இரா நின்றன;

ஆச்சரியம்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேஹாத்மாபிமானத்தைப் போக்கினது முதலாகத் திருவடிகளோடு ஸம்பர் தந்தை யளித்தளவாகவுள்ள உபகார பரம்பரைகளைப் பேசி மகிழ்கிறார் இப்பாட்டில். முன்னுருவில் மின்னுருவாய் = கண் முன்னே பரத்யக்ஷமாகக் காணப்படுகின்ற பொருள்களெல்லாம் முன்னுரு எனப்படுகின்றன. ‘அப்பொருள்கள் மின்னின் தன்மைபோன்ற தன்மையுடையன‘ என்னும் உணர்வைப் பிறப்பித்தவன் என்கிறார். “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்“ என்கிறபடியே ப்ராக்ருதப் பொருள்களெல்லாம் நிலை நிற்கமாட்டாதவை யென்று அறிவித்தானென்றவாறு.

ஜீவாத்மாவுக்கு தேஹ ஸம்பந்தம் இரண்டுவகையான காரணங்களினாலுண்டா கின்றது; புண்யபாபரூபகருமங்கள் காரணமாகவும் எம்பெருமானது அருள் அடியாகவும். கருமமடியாக ப்ரக்ருதிபந்தமுண்டாமளவில், ஜீவாத்ம பரமாத்மாக்களுடைய ஸ்வரூபத்தைத் தெரிந்துகொள்ள வொண்ணாமற்  செய்கையும் தன்பக்கலில் அஸ்தைர்யத்தையும் அபோக்யதையையும் மறைத்து ஸ்தைர்ய புத்தியையும் போக்யதாபுத்தியையும் ப்ரக்ருதியானது பிறப்பிக்கும்; இனி எம்பெருமானருளடியாக ஸம்ஸாரபந்தமுண்டாமளவில், ஸ்வவிஷயத்திலும் ஸ்வகீய விஷயத்திலும் கிடக்கிற அஸ்தைர்யத்தையும் அபோக்யதையையும் பிரகாசிப்பிக்கக் கடவதுமாய் ஆத்மபரமாத்மஸ்வரூபத்தை ப்ரகாசிப்பிக்கக் கடவதுமாயிருக்கும். ஆழ்வார் இவ்விபூதியிலே பிறந்தது கருமமடியாகவல்லாமல் எம்பெருமானருளடி யாகவாதலால் ப்ராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசித்து த்யாஜ்யதாபுத்தி யுண்டாயிற் றென்க.

வேதம் நான்காய் = தேஹமே ஆத்மாவென்றும், இந்த்ரியமே ஆத்மாவென்றும் மாஸ்ஸே ஆத்மாவென்றும், ப்ராணனே ஆத்மாவென்றும், புத்தியே ஆத்மாவென்றும் கொள்வாருடைய கொள்கைகளைத் தள்ளி ‘அஹம்‘ (நான்) என்று வியவஹரி்ப்பதற்கு இலக்கான வஸ்துவே ஆத்மாவென்றும் அவன் நித்யனென்றும் தெரிந்து கொள்வதற்கு சாஸ்த்ரம் அபேக்ஷிதமாகையாலே, சாஸ்த்ரங்களில் தலையான வேதங்களை அருளினபடி சொல்லுகிறது. இங்கு ‘வேத நான்காய்‘ என்றது, நால்வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் என்ற கருத்தினாலன்று; நான்கு வேதங்களையும் உபகரித்தருளினவன் என்ற கருத்தினாலென்க.

ஆக, “மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்“ என்றவளவுக்குத் தேறின கருத்தாவது, - ஆத்மாவிற்காட்டிலும் வேறுபட்ட அசேதனப் பொருள்களில் க்ஷணிகத்வ புத்தியைப் பிறப்பித்தவனும், அங்ஙனல்லாத ஆத்ம வஸ்துவின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்வதற் குறுப்பாக சாஸ்த்ரங்களைத் தந்தருளினவனும் எம்பெருமான் என்றதாயிற்று.

விளக்கொளியாய் = சாஸ்திரங்களைக் கொடுத்தருளின மாத்திரத்தால் என்னாகும்; அவற்றால் $ மருள் நீங்கித் தெருள் பிறந்தாலன்றோ பயனுண்டாவது; அங்ஙனம் அஜ் ஞானத்தையகற்றி நல்ல ஞானத்தை யுண்டாக்கி ஸ்வரூபத்தைப் பிரகாசிக்கச் செய்தருளின வன் என்கிறது விளக்கொளியாய் என்று. விளக்கொளியின் ஸ்வரூம் போன்ற ஸ்வபாவத்தை யுடைத்தாகையாலே சாஸ்த்ரஞானத்தை விளக்கொளி யென்கிறது. விளக்கானது இருளைப் போக்கிப் பொருள்களை விளங்கச் செய்யுமாபோலே அகவிருளைப்போக்கி ஸ்வரூபத்தைப் பிரகாசிக்கக் கடவதா யிருக்குமன்றோ சாஸ்த்ர ஞானம். இப்படிப்பட்ட சாஸ்த்ர ஞானத்தை யுண்டாக்கியருளினவன் எம்பெருமான் என்க. எம்பெருமானருள் இல்லாவிடில் உண்மையான சாஸ்த்ரார்த்த ஜ்ஞானம் உண்டாகமாட்டாதென்று உணர்க.

முளைத்தெழுந்த திங்கள்தானாய்  = மலைநுனியில் தோன்றி ஆகாசத்திலே கிளம்பின சந்திரனைப்போலே ஸந்தோஷகரமான ஞானத்தைக் கொடுத்தருளினவன் என்றபடி. கீழ் ‘விளக்கொளியாய்‘ என்றவிடத்திலும் இவ்வர்த்தந்தானே சொல்லிற்று; மீண்டும் இங்குச் சொல்லுகிறது என்னென்னில்; கேண்மின்; எம்பெருமானைப் பற்றின ஞானங்கள் பல வகைப்படும்; எம்பெருமானைக் காதால் கேட்டுணர்வது, நெஞ்சில் ஊன்ற மநநஞ்செய்துணர்வது, உபாஸநம் செய்துணர்வது கண்ணாரக்கண்டுணர்வது என்றிப்படிப்பட்ட ஞானங்களுள் ச்ராவண ஜ்ஞானம் (காதால் கேட்டுணர்தல்) பெற்றமை மாத்திரம் ‘விளக்கொளியாய்‘ என்றதனால் சொல்லிற்று; மநந – நிதித்யாஸந-தர்சந ஜ்ஞானங்களைப் பிறப்பித்தமை இங்குச் சொல்லப்படுகிறது என வாசி காண்க. விளக்கனாலுண்டாகிற ஆநந்தரூபமாக இருப்பதுபோல, ச்ராவண ஜ்ஞானத்திற்காட்டிலும் மநந நிதித்யாஸந தர்ச நங்களாலுண்டாகும் ஞானம் மிக்க ஆஹலாதரூபமாக இருக்குமாதலால், விளக்கொளியா யென்றதனால் மற்றஞானங்களைச் சொல்லிற்றென்றும் முளைத்தெழுந்த திங்கள்தானா யென்றதனால் மற்றஞானங்களைச் சொல்லிற்றென்றும் பகுத்துரைத்தல் மிகப்பொருந்தும். இதுதன்னிலும் முளைத்து என்றதனால் மநந தசையும், எழுந்த என்றதனால் நிதித்யாஸந தசையையும், திங்கள்தானாய் என்றதனால் ஸாக்ஷாத்கார தசையும் சொல்லப்பட்டன வென்றுணர்க.

பின்னருவாய் முன்னுருவிற்பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் = இவ்வளவும் ஜீவாத்மாவைச் சொல்லுகிறதாய் (ஸாமாநாதி கரண்யத்தாலே) இப்படிப்பட்ட நியாமகன் எம்பெருமான் என்றதாகிறது. “பொங்கைம்புலனும் பொறியைந்துங் கருமேந்திரிய மைம்பூதம், இங்கிவ்வுயிரேய் பிரகிருதிமானாங்கார மனங்களே“ என்கிறபடியே இருபத்தினான்காகிய தத்துவங்களுக்குப் பிற்பட்டவனாய் இருபத்தைந்தாம் தத்துவமாகச் சொல்லுப்பட்டவனான ஜீவாத்மாவைப் பின்னுருவாய் என்றதனாற் சொல்லுகிறது; முன்னுருவிற் பிணிமூப்பில்லாப் பிறப்பலி யென்பது அந்த ஜீவாத்மாவையே; ப்ரத்யக்ஷத்திற் காணப்படுகின்ற ப்ராக்ருத பதார்த்தங்களை முன்னுரு வென்கிறது. அந்தப் பொருள்களுக்கு ஸம்பானுவிற் பிணிமூப்பில்லாப் பிறப்பிலி“ யென்று ஜீவாத்மாவைச் சொல்லிற்றாயிற்று. ஆக பின்னுருவாயும் முன்னுருவிற்பிணிமூப்பி்ல்லாப் பிறப்பிலியாயு மிராநின்ற ஜீவாத்மாவைச் சொல்லி, ஆய் என்ற ஸாமாநாதி கரண்யத்தாலே அப்படிப்பட்ட ஜீவாத்மாவை நிர்வஹிப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.

இறப்பதற்கே யெண்ணாது = இறப்பாவது மரணம்; ஆத்மஸ்வரூபாநுபந்தியான மரணம் இங்கு விவக்ஷிதம்; அதாவது கைவல்யமோக்ஷம். தேஹாநுபந்தியான மரணம் ஆத்மாவுக்கு இல்லையாயினும் ஸ்வரூபாநுபந்தியான மரணம் உண்டாதலால், அப்படிப்பட்ட மரணமாகிய கைவல்யமோக்ஷத்தை அந்தரங்கமான அடியார்க்குக் கொடுக்க நெஞ்சிலும் நினையாதவனெம்பெருமான் என்றவாறு. ஸ்வத : ஸுகியான ஆத்மாவினுடைய அநுபவ் ஸ்வரூபமாய்த் தனியே ஒரு புருஷார்த்மாய் மீட்சியில்லாததான கைவல்யத்தை இறப்பு என்ன லாமொவென்னில்; சரீரமானது ஆத்மாவின் வியோகத்தையடைந்தால் அது மரணமாக ப்ரத் யக்ஷத்தில் வியவஹரிக்கப்படுகிறது; இதுவும் அப்படியே ஸாக்ஷாத் ஆத்மாவாகிய பரமாத்மாவின் வியோகத்தாலே மரணமாகக் குறையில்லை. ப்ரத்யக்ஷத்தில் மரணமடைந்த சரீரம் நஷ்டமாகிறாப்போலே ஆத்மா நசிப்பதில்லையே; அப்படி இருக்க மரணமென்னலாமோ வென்னில், ஸ்வரூபாநுரூபமான போகமில்லாமையாலே ஆத்மாவை நஷ்டனாகவே கொண்டு மரணமென்னலாம். “ம்ருதோ தரித்ர: புருஷ:“ (ஏழையான மனிதன் செத்தவனே) என்கிறாப் போலே இதனைக் கொள்க. இடைவிடாது கவதநுபவஞ் செய்பவர்களின் ஹ்ருதயத்தாலே இது மரணமேயாகும். இதனைத் திருவாய் மொழியில் ‘இறுகலிறப்பு என்றது முணர்க. ஆக இறப்பதற்தேயெருண்ணா என்றதனால் சொல்லிற்றாவது – வைவல்ய மோக்ஷத்தைப் புருஷார்த்தமாக அபேக்ஷிப்பவர்களுக்குக் கொடுக்கவல்லவனான எம்பெருமான் இப்போது என்னை இப்படுகுழியிலே வீழ்த்த நினையானென்பதாம்.

இப்படிப்பட்ட உபகாரத்திற்குமேலே தன்னுடைய ஸ்வரூபரூபகுணங்களை ப்ரகாசிப் பித்தருளினா னென்கிறார் எண்ணும் பொன்னுருவாய் என்று. போக்யதையின் மிகுதியாலே ஒருநொடிப்பொழுதும் விடமுடியாமல் எப்போதும் சிந்திக்கவுரியதும் பொன்போல் விரும்பத்தக்கதுமான திவ்ய ஸ்வரூபத்தை யுடையவன் என்றபடி.

மணியுருவிற் பூதமைந்தாய் = இங்குப் ‘பூதமைந்து‘ என்கிறது பஞ்சோப நிஷத்துக்களை; பரமேஷ்டீ புமாந் விச்வோ நிவ்ருத்தஸ் ஸர்வ ஏவ ஹி“ என்கிறபடியே பஞ்சோப நிஷத்தை வடிவாயுடைத்தாயிருக்கும் எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹம். அஸ்ம தாதிகளின் தேஹங்களுக்குப் பஞ்சபூதங்கள் உபாதாநமாயிருக்குமாபோலே எம்பெருமானுடைய திருமேனிக்குப் பஞ்சோபநிஷத்துக்கள் உபாதாநமாயிருக்குமென்று பாஞ்சராத்ர சாஸ்த்ரம் கூறும். இனி, ‘மணியுருவிற் பூதமைந்தாய்‘ என்பதற்கு மற்றொருவகையாகவும் பொருள் கூறுவர்; தனக்கு அஸாதரணமான மணியுருவிலும் எழுந்தருளி யிருப்பவனாய், ப்ராக்ருதமான பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியுள்ளவன் என்று.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைச் சொல்லுகிறது புனலுருவாய் என்று. வஸிஷ்டனென்றும் சண்டாளளென்றும் வாசியில்லாமல் ஒரு துறையிலே படித்தாடுதற்குரிய தண்ணீர்ப்போலே அனைவர்க்கும் ஒருதன்மைப்பட எளியனாயிருக்குமவன் என்றவாறு. இப்படி அனைவர்க்கும் எளியனானால் எந்த சத்ருவினால் எந்த வேளையில் என்ன கேடு விளைகிறதோவென்று அஞ்சியிருக்க வேண்டாதபடி பிரதிகூலர்க்கு நெருப்புப்போலே கிட்ட வொண்ணாதிருக்குமவன் என்கிறார் அனலுருவின்திகழும் என்று. அநுகூலர்க்குப் புனலுருவினன்; பிரதிகூலர்க்கு அனலுருவினன் என்க.

சோதிதன்னுருவாய் = நாட்டில் சோதிப்பொருள்களென்று விளங்குகின்ற அக்நி சந்திரன் ஸூரியன் முதலியவர்கட்கும் தன்னுடைய ஸம்பந்தத்தாலே ஜ்யோதிஸ்ஸு உண்டாம்படி பரஞ்சோதியாயிருப்பவனென்கை. “தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி“ என்று உபநிஷத்தும் ஓதிற்று.

என்னுருவில் நின்ற = மிகவும் ஹேயமான என்னுடைய சரீரத்திலே வந்து நின்றானென்கிறார். கீழே இவ்வாழ்வார் மடலெடுக்கையாலே எம்பெருமான் தன்னுடைய ஸத்தைக்கு ஹாநிவிளைந்திடு மென்றஞ்சி ஓடிவந்து இவருடைய சரீரத்திலே பொருந்தித் தரிப்புப் பெற்றான் போலும். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய தளிர்போன்ற திருவடிகள் என் தலைக்கு அலங்காரமாய்க் கிடக்கிறபடிபாரீர் என்றாராயிற்று.

 

English Translation

The tender feet, of the Lord are on my head.  He is the subtle essence of all these forms, the four Vedas, light of the lamp, the rising Moon, the more sublime, the ageless, disease-less, birth less, deathless one, the golden image, the gem-form, the five elements, the fluid, the fiery, the radiant form within me.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain