(2048)

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி,

ஏசினார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம்,

பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு,

ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே.

 

பதவுரை

பேர் உளான்

-

திருப்பேர் நகரில் எழுந்தருளி

பெருமை

-

பெருமையை

பேசினார்

-

பேசினவர்கள்

உய்ந்து போனார்

-

உஜ்ஜீவித்தார்கள்.

என்பது

-

என்று சொல்வது

இ உலகின் வண்ணம்

-

சாஸ்த்ரமர்யாதையாகும்;

பேதையேன்

-

அறிவுகேடனான நானோவென்

பேசியேன்

-

(அவன் பெருமையைப் பேசவல்லவனொ!)

ஏச மாட்டேன்

-

(சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும்மாட்டேன்;

பிறவி நீத்தார்

-

ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்;

பேசி ஏசினார்

-

அப்பெருமையைப் பேசிப்பரிஹஸித்த சிசுபாலாதிகளும்

பிறவி நீத்தற்கு

-

இந்த ஸம்ஸாரத்தைவிட்டு நீங்குதற்கு

அலை கடல் வண்ணர் பால்

-

அலையெறிகின்ற கடல்போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே

ஆசையோ பெரிது

-

ஆதரமோ அதிகமாயிருக்கின்றது;

கொள்க

-

இதனை உணர்க.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்; அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல்வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது; இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை; எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப்போகிறேன்; என்னால் பேச முடியுமோ? முடியாததால் * பேருளான்  பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான். இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில், ஏசிப்பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன், எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்; சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா; ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று; ஆயினும், மோக்ஷம் பெறவேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது; அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார்.

(பேருளான் பெருமை பேசினார் பிறவி நீத்தார்) ‘அப்பக்குடத்தான் ஸந்நிதி என்று ப்ரஸித்தபெற்ற திருப்புர் நகர் ஒன்றைச் சொன்னது மற்றெல்லாத் திருப்பதிகட்கும் உபலக்ஷணம். திருப்பேர் முதலான திவ்யதேசங்களில் நித்ய ஸந்நிதிபண்ணி யிருக்குமவனான எம்பெருமானுடைய பெருமையைப் பேசுமவர்கள் உஜ்ஜீவித்தமைக்கு உதாரணம் காட்டவேணுமோ?

(ஏசினார் உய்ந்து போனார்) ‘ஏசினாரும்‘ என்று உம்மைதொக்கிற்றாகக் கொள்க. “காற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான், பற்றியுரலிடையாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக்கொலோ“ என்று ஆண்டாள் வயிறெரிந்து பேசும்படியாக தூஷித்தவர்களில் தலைவனான சிசுபாலன் முதலானவர்கள் ‘ஏசினார்‘ என்பதாற் கொள்ளப்படுவர்; வைகிறவனுக்கும் பேர்சொல்லி வையவேண்டி யிருப்பதால் ஏதேனுமொரு படியாலே நம்முடைய திருநாமத்தைச் சொன்னானென்றுகொண்டு எம்பெருமான் ஏசுகிறவர்களுக்கும் நற்கதி நல்குவதுண்டு. சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைத்தென்பதைப் பராசர மஹர்ஷி பகர்ந்துவைத்தார், என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘கேட்பார் செவிசுடு  கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன், திருவடி தாட்பாலடைந்த“ என்றார் நம்மாழ்வாரும். என்றார் ஆளவந்தாரும்.

என்பது இவ்வுலகின் வண்ணம் = லோகமென்கிற சொல்லால் சாஸ்த்ரத்தைவ் சொல்லுகிற வழக்கமுண்டு. “எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே“ என்ற திருவாய்மொழி வியாக்கியானங்களிலும், என்ற ஆளவந்தார், ஸ்தோத்ர வியாக்யானங்களிலுங் காணலாம். ஆகவே இங்கு உலகின் வண்ண மென்று சாஸ்த்ரமர்யாதையைச் சொன்னபடி. (சாஸ்த்ரமறிந்த) உலகத்தவர்கள் சொல்லுவார்கள் என்று பொருள் கொண்டாலுங் கொள்ளலாம்.

பேசினேன் – எம்பெருமானுடைய பெருமையை நான் பேசினேனென்பதாகப் பொருள்படுவதன்று; ‘ஆ! நாம் வெகு நன்றாகப் படித்துவிட்டோம் என்றால், படிக்கவில்லை யென்று பொருளாவது போல இங்கும் எதிர்மறையாகக் கொள்ளத்தக்கது. எம்பெருமான் பெருமையைப் பேசவல்ல அதிகாரி நானோ என்று இழித்துச் சொல்லுகையில் திருவுள்ளம். இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்கதிகாண்மின்;- ‘உண்ணப்புக்கு மயிர்ப்பட்டு அழகிதாக உண்டெனென்னுமாபோலே“ என்பதாம். ஏசமாட்டேன் – ஏசி்ப் பெறக்கூடிய மோக்ஷம் வேண்டா என்றபடி.

மோக்ஷம் பெறுவதற்கு இரண்டு வழிகளே சாஸ்த்ரங்களிற் காண்கின்றன; எம்பெருமானது பெருமைகளைப் பேசியாவது மோக்ஷம் பெறவேணும், சிசுபாலதிகளைப் போலே ஏசியாவது மோக்ஷம் பெறவேணும்; எனக்கோ பேசத் தெரியாது; ஏசவோ இஷ்டமில்லை; அந்தோ! இழந்தேபோமித்தனையோ. மோக்ஷம் பெறவேணுமென்கிற ஆசையோ அளவு கடந்திருக்கின்றது! நான் செய்வதேன்? என்றதாயிற்று.

 

English Translation

Those who offered praise to the Lord of Tirupper found their salvation.  Those who offer abuse also found their salvation, as is seen in history.  A fool though I am, I shall not offer abuse, but only praise the Lord of ocean hue.  Alas, my love for him is enormous, know it.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain