(2046)

முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து,

அன்பினா லனுமன் வந்தாங் கடியிணை பணிய நின்றார்க்கு,

என்பெலா முருகி யுக்கிட் டென்னுடை நெஞ்ச மென்னும்,

அன்பினால்  ஞான நீர்கொண் டாட்டுவ னடிய னேனே.


பதவுரை

முன்

-

முன் பொருகால்

பொலா

-

பொல்லாதவனான

இராவணன் தன்

-

இராவணனுடைய

முது மதிள் இலங்கை

-

வலிய மதிள்களையுடைத்தான இலங்காபுரியை

வேவித்து

-

சுடுவித்து

அனுமன்

-

சிறியதிருவடி

அன்பினால் வந்து

-

மகிழ்ச்சியுடனே வந்து

ஆங்கு

-

கிஷ்கிந்தையாலே

அடி இணை பணிய

-

உபய பாதங்களையும் தொழும்படியாக

நின்றாற்கு

-

நின்ற பெருமானுக்கு

அடியனேன்

-

அடியேன்

என்பு எலாம்

-

எலும்பெல்லாம்

உருகி

-

உருகி

உக்கிட்டு

-

இற்றுப்போய்

என்னுடை

-

என்னுடைய

நெஞ்சம் என்னும்

-

நெஞ்சென்று சொல்லப்படுகிற

அன்பினால்

-

ஆர்வத்தினால்

ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன்

-

ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக உகப்பித்து உய்ந்தாள் யசோதைப்பிராட்டி; அவள் செய்தபடிகளை அநுகரித்துப்பேசி உய்ந்தார் பெரியாழ்வார்; இவ்வாழ்வார்தாமும் அங்ஙனே சிலவழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப்பாட்டிலும் மேற்பாட்டிலும்.

எம்பெருமான் பரம ஸந்தோஷமாக எழுந்தருளியிருந்த ஒரு ஸமய விசேஷத்தை யெடுத்துரைத்து அந்த நிலைமையிலேயே நீராட்டங் கொண்டருளச் செய்கிற னென்கிறார். பிராட்டியிருக்கும் இடத்தைத் தேடித் தெரிந்துவருமாறு ஸ்ரீராமபிரானால் நியமித்து விடுக்கப்பட்ட வாநர முதலிகளிலே தலைவரான சிறிய திருவடி இலங்கையிலே வந்து கண்டு அப்பிராட்டி கையிலே “இத்தகையாலடையாளமீதவன் கை மோதிரமே“ என்று ஸ்ரீராம நாமாங்கிதமான மோதிரத்தைக்கொடுத்து, சூடாமணியையும் பெற்று, ‘எதிரிகளி்ன் வலிமை எப்படிப்பட்டது? என்று பெருமாள் கேட்டால் அது தெரியாதென்று சொல்லவொண்ணாதாகையால் அதையும் தெரிந்து கொண்டு செல்வோமென்று கருதி அதற்காகச் சில சேஷ்டிதங் களைச் செய்து தன்வாலில் நெருப்பாலே இலங்கையைச் சுடுவித்து “கண்டேன் சீதையை“ என்று மீண்டுவந்து விண்ணப்பஞ்செய்த ஸமயத்திலே ஆனந்தக்கடலிலே ஆழ்ந்துகிடந்த பெருமாளுக்கு, அந்நிலையை நினைத்து ஈடுபட்டவனாகி, அப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமான ப்ரேமமே எனது நெஞ்சாக வடிவெடுத்திருப்பதனால் என்னுடைய நெஞ்ச மென்னு மன்பினால் ஞானமாகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் என்கிறார். தீர்த்தத்திற்குப் பரிமள த்ரவ்யம் ஸம்ஸ்காரமாவதுபோல் இங்கு ஞான நீருக்கு அன்பு ஸம்ஸ்காரமாகக் கொள்ளப்பட்டது. இதனால் மாநஸிகமான திருமஞ்சனத்தைனச் சொன்னவாறு.

“முன் = அதுவுமொரு காலமே! என்று வயிறு பிடிக்கிறார்“ என்ற வியாக்யமான ஸ்ரீஸூக்தி உணரத்தக்கது.

பொலா – பொல்லா என்றபடி தொகுத்தல் * சுரிகுழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யாக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிகை யாக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே கொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.

 

English Translation

In the yore, Hanuman went to the wealthy city of walled Lanka and burnt it to ashes, then returned to serve the Lord Rama's feet. I, this devotee-self, shall melt myself to the bones and bathe and anoint the Lord with the water of knowledge flowing from my love-laden heart!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain