(1967)

ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள்தாம்,

பாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார்,

தோழியும் நானு மொழிய வையம் துயின்றது,

கோழியும் கூகின்ற தில்லைக் கூரிரு ளாயிற்றே.

 

பதவுரை

ஆழியும் சுங்கும் உடைய

திருவாழி திருச்சங்குகளை யுடையரான

நங்கள் அடிகள் தாம்

அஸ்மத்ஸ்வாமியான ஸர்வேச்வரன்

நம்மை

நம்மை

பாழிமையான கனவின்

மிகப்பெரிதாய் ஸ்வப்நதுல்யமான ஸம்ச்லேஷத்தினால்

பகர்வித்தர்

இப்படி கூப்பிடும்படியாகச் செய்துவிட்டார்

தோழியும் நானும் ஒழிய

தோழியும் நானும் தவிர

வையம்

மற்ற உலகத்தாரெல்லாரும்

துயின்றது

உறங்கிவிட்டார்க்ள்

கோழியும்

கோழிகூட

கூகின்றது இல்லை

(விடிவுக்கு அறிகுறியாகக்) கூவுகினறதில்லை

கூர்இருள் ஆயிற்றே இன்னமும்

நள்ளிருளா யிருக்கின்றதே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அங்கைத்தலத்திடை யாழிகொண்டானவன் முகத்தன்றி விழியேனென்று, செங்கச்சுக் கொண்டு கண்ணாடையார்த்துச் சிறுமானிடவரைதக காணில் நாணுங், கொங்கைத் தலமிவை” என்றாற்போலே திருவாழி திருச்சங்குகளாகிற அஸாதாரண லக்ஷணங்களோடே கூடின தலைவனையாயிற்று இப்பரகாலநாயகி காதலிப்பது; அப்படியே அவர்வந்து ஸ்வப்நம் போன்ற ஸம்ச்லேஷத்தைச் சிறிது போது தந்தருளி உடனே பிரிந்து போயினராதலால் நான் இங்ஙனே கதற வேண்டியதாயிற்று என்கிறாள் முன்னடிகளால்.

பாழிமையான கனவின் = இங்குக் கனவு என்கிறது ஸம்லேஷத்தையென்று கொள்க. எப்போதோ நடந்த கலவி இவளுக்கு இப்போது ஸ்வப்ந துல்யமாயிருப்பதால் கனவு என்கிறது. பாழிமையாவது வலிமை வலிதான ஸம்ச்லேஷத்தினாலென்றபடி.

“பெரிய மேன்மையுடையவர் கையைக் காலைப் பிடித்துத் தாழ நின்று பாரிமாறின பாரிமாற்ற மாகையாலே அநுஸந்திக்கப்புக்கால் கரைகாண வொண்ணாத படியாயிருக்கிற அபர்யாப்த ஸம்ச்லேஷஸுகத்தாலே” என்ற வியாக்கியான வாக்கியங்காண்க.

நானும் என்னுடைய தோழியுந்தவிர மற்ற வுலகர்களெல்லாரும் அன்யபரர்களாதலால் அவர்களனைவரும் சுகமே உறங்கிக் கிடக்கிறார்க்ள், எனக்கோ ஓரிரவு ஏழு வழியாய் நெடுகிச்செல்லா நின்றது; கோழி கூவினாலாவது பொழுது விடியப்போகிறதென்று சிறிது ஆறியிருக்கலாம்; கோழியும் உறங்கிப் போயிற்றுப் போலும் என்கிறாள் பின்னடிகளில்.

 

English Translation

Our Lord and master, wielder of the conch and discus, invited us in a dream that seemed like it would never end.  Except me and my girl friend, the whole world sleeps soundly.  The cock also does not crow; it is pitch-dark, alas!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain