(1962)

குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை யாரொடும்

மன்றில் குரவை யிணைந்த மாலென்னை மால்செய்தான்,

முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்கிடந் தீர்கின்ற

அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவ ரார்கொலோ.


பதவுரை

குன்றம்

கோவர்த்தனமலையை

எடுத்து

குடையாக வெடுத்துப்பிடித்து

மழை தடுத்து

மழையைத்தடை செய்தவனாயும்

இளையாரொடும்

இளம் பெண்களோடே

மன்றில்

நாற்சந்தியிலே

குரவை பிணைந்த

கைகோத்துக் குரவைக் கூத்தாடினவனாயுமுள்ள

மால்

கண்ணபிரான்

என்னை மால் செய்தான்

என்னை மதிமயங்கப் பண்ணிவிட்டான்

முன்றில்

வாசலிலே

தனி நின்ற

தனியேநின்ற

பெண்ணைமேல்

பனைமரத்தின் மீது

கிடந்து

இருந்துகொண்டு

ஈர்கின்ற

ஹிம்ஸிக்கின்ற

அன்றிலை

அன்றிற்பறவையை

கூட்டின்

கூட்டில் நின்றும்

பிரிக்ககிற்பவர்            ஆர்கொலோ

பிரித்துவிடவல்லவர் யாரோ? (அறியேன்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்து ஏழுநாள் ஒருபடியாகத் தாங்கிநின்று கோவலரைக் காத்தருளினவனும், ஆயர்மங்கையரோடே பலர் காணக் குரவைக் கூத்தாடினவனுமான எம்பெருமான் என்னை இப்படிப்பட்ட வியாமோஹத்திற்கு ஆளாக்கிவிட்டான் என்பன முன்னடிகள். ஆனைத்தொழில் செய்தும் அடியார்களைக் காத்தருளினவனன்றோ? உகந்தாரோடே ஒரு நீராகக் கலந்து பாரிமாறுவதற்குப் பாங்காகப் பல வடிவுகள் கொண்டு ராஸக்றீடை செய்தருளின ரஸிகனன்றோ? இப்படிப்பட்டவன் நம்மைக் கைவிடுவனோவென்று நம்பியிருந்து மோசம் போனேன் என்பது உட்கருத்து. தன்னுடைய திருக்குணங்களைக் காட்டி என்னை யீடுபடுத்தி இங்ஙனே சந்தியில் நின்று திணடாட வைத்தானென்கிறாள்.

இதுவே ஸமயமாகக் கண்ணெதிரே பனைமரத்தி லிருந்துகொண்டு அன்றிற்பறவையும் மெல்லிய தழுதழுத்த குரலாலே ஓய்வின்றி நலிகின்றது; எம்பெருமானைக் கொண்டுவந்து என்னோடே கூட்டாதொழியினும் இவ்வன்றிற்பறவையைக் கூட்டிலிருந்து துரத்தவல்லாரையாவது கிடைக்கப்பெறுமொ வென்பன பின்னடிகள்.

அன்றிலின்கூட்டை:- உருபுபிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது. அன்றிலைக்கூட்டில் நின்றும் பிரிக்கவேணுமென்கை.

 

English Translation

The Lord who lifted a mount and stopped the rains, and danced the Rasa with cowherd girls in the streets, has infatuated me.On the solitary Palm tree in the front yard, the mating calls of the April pair pierce my heart, Is there anyone who can separate them? Slas!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain