(1666)

முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா,

தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன்,

கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்

பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே?

 

பதவுரை

முள் எயிறு ஏய்ந்தில

-

முளைக்கின்ற பற்களும் நிரம்பவில்லை;

கூழை முடி கொடா

-

கூந்தலும் எடுத்து முடிக்கப்போரும்படி வளர்ந்தனவில்லை;

தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள்

-

விவேகமுடையவள் என்று சொல்லும்படியான தேஜஸ்ஸை உடையவளல்லள்

என் செய்கேன்

-

(இப்படிப்பட்ட இவள் விஷயத்தில்) நான் என்ன செய்வேன்!

கள் அவிழ்சோலை

 

மது பெருகுகின்ற சோலைகளையுடைய

கணபுரம்

-

திருக்கண்ணபுரத்தை

கை தொழும்

-

கையெடுத்து வணங்குகிற

பிள்ளையை

-

பிள்ளையை

பிள்ளை என்று எண்ணப் பெறுவரே

-

பிள்ளையென்று நினைக்கலாகுமோ? (கௌரவிக்கப்ராதி யுண்டிறே.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “முலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடியிருக்கின்றாளால்” என்று சொன்ன திருத்தாய்தானே இப்போது “முள்ளெயிறேய்ந்தில கூழை முடிகொடா, தெள்ளியளென்பதோர் தேகிலள்” என்றால், இஃது என்? ; பரகாலநாயகி யௌவன பருவத்தை யடைந்திருப்பதாகப் பல பாசுரங்களால் விளங்கா நிற்க, இன்னம் பற்களும் முளைக்கவில்லை யென்றும், மயிரும் சேர்த்து முடிக்கலாம்படி கூடினவில்லை யென்றும் இங்கே சொல்வது பொருந்துமாறு எங்ஙனே? எனின்; உண்மையில் இவள் யௌவன பருத்தை யடைந்தவளே; ஆயினும் தாய்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையாலே தோற்றுவதென்க.

இப்படி இளம்பருவமுடையளான விவளை நான் எப்படி நியமிப்பேன் என்கிறாள் என் செய்கேன் என்று இவளை நான் நியமிப்பேனோ, அன்றி அநுவர்த்திப்பேனோ என்கிறாள்.  இத்தனை சிறு பிராயத்தில் உனக்கு இவ்வளவு ப்ராவண்யம் கூடாது என்று இவளை அடக்குவேனோ, அன்றி, இத்தனை சிறு பிராயத்திலேயே பகவத் விஷயத்தில் அவகாஹிக்கப் பெற்றவிவள் ஸாமாந்யமானவளல்லள், விண்ணுளாரிலும் சீரியள் என்று கொண்டு இவளைக் கைகூப்பி வணங்குவேனோ என்கிறாள்.

இங்ஙனே அலைபாயந்த நெஞ்சு ஒரு முடிவுக்கு வந்தமையைப் பின்னடிகளில் வெளியிடுகிறாள்.  திருக்கண்ணபுரத்தைக் கைதொழும் பிள்ளை நம் வயிற்றில் பிறந்த சிறு பிள்ளையேயாகிலும் ஈடுபட்ட விஷயத்தின் பெருமையன்றோ நோக்கவேணும்; இவளது சிறுமையால் வருங்குற்றமேது? சிறுமையில்தானே இப்படி பகவத் விஷய ப்ராவண்யமும், உகந்தருளின நிலத்தில் ஊற்றமும் உண்டாகப்பெற்றதே! ; ஆகையாலே இவளை நியமிக்கப் பாராமல் அநுவர்த்திப்பதே நன்று என்றாளாயிற்று.  “விளக்கொளியை மரதகத்தைத் திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப்பாடக்கேட்டு, வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கனாளே” என்றது திருநெடுந்தாண்டகத்தில்.

கூழை – தலைமயிர், தெள்ளியள் – தெளிந்து வார்த்தை சொல்லவல்லவள்.  தேசு – தேஜஸ்.  எண்ணப் பெறுவரே = நெஞ்சால் நினைத்தாலும் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேணுமே யென்றவாறு.

 

English Translation

Her ivory comb can scant gather her hair, he tresses do not form a knot, she has no quality that will quality her to be a clear-headed-one  Alas, what can I do?  She offered worship in the nectar-flowing gardens of Tirukkanapuram and elsewhere.  Alas, I cannot call my child mine any more.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain