(1663)

வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம்,

இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்,

மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள்

கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே.

 

பதவுரை

வட வரை நின்றும் வந்து

-

‘வடக்குத் திருமலையில் நின்றும் புறப்பட்டு வந்து

இன்று

-

இப்போது

கணபுரம்

-

திருக்கண்ணபுரத்தை

இடவகை கொள்வது யாம்

-

இருப்பிடமாகக் கொண்டிருப்பது நானே’

என்று பேசினாள்

-

என்று (சௌரிப் பெருமாளோடு ஐக்கியமாகத் தன்னைச்) சொல்லிக் கொண்டாள்;

இவர்

-

இந்த சௌரிப்பெருமாள்

இன்று

-

இன்றைக்கு

கண் துயில்

-

(இவளுடைய) கண்ணுறக்கத்தை

கொள்ள

-

கொள்ளை கொள்வதற்கு,

மடவரல்

-

மடப்பமென்னும் குணத்தை யுடையவளும்

மாதர்

-

விரும்பப்படும் அழகையுடையவளுமான

என் பேதை இவள்

-

என் சிறுமியாகிய இவள்

இவர்க்கு கடவது என்

-

இப்பெருமாளுக்குக் கடமைப்பட்ட விதம் என் கொல்!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அநுகாரத்தாலே தரிப்பது என்று ஒன்றுண்டு.  பண்டு திருவாய்ப்பாடியிற் பெண்கள் கண்ணபிரானைப் பிரிந்து ஆற்றமாட்டாமல் மாமியார் மாமனார் முதலானாருடைய காவலையுங் கடந்து யமுனையாற்றின் கரையிலே அப்பிரானை அநுபவிப்பதாக வந்தவளவிலே அங்கு அவனைக் காணாமல் முன்னிலும் ஆற்றாமை விஞ்சி, ஏதேனு மொருபடியாலே தரிக்கப்பார்த்து =துஷ்ட காளிய! திஷ்டாத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா”  இத்யாதிப்படியே, அடா காளியனே! நில்; நான் கண்ணன்; உன்  மேலேறித் துவைத்து நர்த்தனம் செய்யப்போகிறேன்’ என்றும் மற்றும் பலவிதமாகவும் கண்ணபிரான் போலவே தங்களை அநுகாரஞ் செய்துகொண்டு பேசித் தரித்தார்கள்; நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் “கடல் ஞாலஞ் செய்தேனும் யானே யென்னும்”
என்று தொடங்கிப் பத்துப் பாசுரங்களாலே தம்மை எம்பெருமானாகப் பேசித் தரித்தார்.  அந்த நிலைமை பரகாலநாயகிக்கும் நிகழ்கின்றமை இப்பாசுரத்தில் விளங்கும்.  மற்றை ஆழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வார்க்கு அர்ச்சாவதாரத்தில் ப்ராவண்யம் அளவற்றதாகையாலே இவ்வநுகாரமும் அர்ச்சாவதார விஷயமாகவே செல்லுகின்றது.  வடக்குத்திருமலையாகிய திருவேங்கடமலையில் வாஸத்தை விட்டுக் கீழை வீடாகிய திருக்கண்ணபுரத்திலெ நித்யவாஸம் பண்ண இன்று இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் யாம் என்று தன்னைச் சௌரிப்பெருமாளாகவே சொல்லிக்கொள்ளுகிறாள் என்பதைத் திருத்தாய் விளம்புகின்றாள்.

இச்சிறுமியை இப்பாடு படுத்துதல் ஈச்வரனக்குத் தகாது என்கிறாள் பின்னடிகளில்.  இதற்கு முந்தின க்ஷணம் வரையில் பந்துவர்க்கங்களில் சொல்தவறாது நடந்துகொண்டிருந்தவளும் மிகச் சிறிய பருவமுள்ளவளும் அழகிற் சிறந்தவளுமான இவளை இங்ஙனே கண்ணுறக்கங் கெட்டு வருந்தவைப்பது அவர்க்கு ப்ராப்தமோ? என்கிறாள்.

 

English Translation

"Leaving our Northern hill-abode, we have come to stay in kannapuram today", she says, playing her Lord. My daughter is an innocent child.  Of what use can she be to him, that he should steal her sleep now?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain