(1579)

(1579)

அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை வரையகலத் தமர்ந்து, மல்லல்

கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்,

வம்பலரும் தண்சோலை வண்சேறை வானுந்து கோயில் மேய,

எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும் என்மனத்தே யிருக்கின் றாரே.

 

பதவுரை

அம் புருவம்

-

அழகிய புருவத்தையும்

அரி நெடு கண்

-

செவ்வரி கருவரிபடர்ந்து நீண்ட கண்களையுமுடையளான

அலர் மகளை

-

பெரிய பிராட்டியாரை

வரை அகலத்து

-

மாலைபோன்ற திருமார்பிலே

அமர்ந்து

-

பொருந்தவைத்துள்ளவனும்

மல்லல் கொம்பு

-

தழைத்த கிளைகளை வடிவமாகவுடைய விளாமரத்திலுள்ள

கனி மேல்

-

பழத்தின் மேலே

இள கன்று கொண்டு

-

(அஸுரவடிவாய் வந்த தொரு) சிறு கன்றை(த் தடியாக)க் கொண்டு

எறிந்த

-

வீசியெறிந்த

கூத்தர் ஆம்

-

நடையழகுடையவனும்,

வம்பு அலரும் தண் சோலை

-

பரிமளம் வீசுகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய

வண் சேறை

-

அழகிய திருச்சேறையிலே

வான் உந்து கோயில் மேய

-

ஆகாசத்ததையளாவுகின்ற ஸந்நிதியில் நித்யவாஸம் செய்பவனுமான

எம்பெருமான்

-

ஸாரநாதப்பெருமாளுடைய

தாள்

-

திருவடிகளை

தொழுவார்

-

ஸேவிப்பவர்கள்

எப்பொழுதும்

-

எந்நாளும்

எம் மனத்தே இருக்கின்றார்

-

என்னெஞ்சிலேயே வாஸஞ்செய்கிறார்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அழகிய திருப்புருவங்களோடும் நீண்ட திருக்கண்களோடுங் கூடின பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே வைத்துக் கொண்டிருப்பவனும், முள்ளைக்கொண்டே முள்ளைக் களைவதுபோல,  கன்றினுருவங் கொண்டுவந்த ஒரு அஸுரனைக் கொண்டு விளாமரமாய் நின்ற மற்றோரஸுரன்மேல் வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும், அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருச்சேறையில் ஆகாசத்தளவும் ஓங்கியுள்ள ஸந்நிதியில் நித்யவாஸஞ்செய்தருள்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவிப்பவர்கள் ஒருநொடிப் பொழுதும் எனது நெஞ்சைவிட்டுப் பிரியாதிருக்கின்றனர் என்றாராயிற்று.

“எப்பொழுதும் என்மனத்தேயிருக்கின்றாரே” என்ற விடத்துப் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் – நிதித்யாஸிதவ்ய : என்கிற விஷயத்துக்கு இடங்காண்கிறிலேன்” என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்தி பரமபோக்யம்.  பாகவதர்கள் ஆழ்வாருடை திருவுள்ளத்தின் அவகாசத்தை ஆக்ரமித்துக் கொள்ளவே சிந்தனைக்கினிய பெருமானுக்கு அங்கு இடமில்லையாம்.

அம்புருவவரிநெடுங்கண் = ‘அம் – புருவம்’ என்று பிரிப்பதுதவிர, ‘அம்பு உருவம்’ என்று பிரிப்பதும் பொருந்தும்; ‘அம்புபோன்ற உருவத்தையுடைய’ என்று பொருளாய், கண்ணுக்கு விசேஷணமாகும்.  கண்களுக்கு அம்பை உவமையாகச் சொல்லுதல் கவிமரபு : “அம்பன்னகண்ணாளசோதை” என்றதுங்காண்க.

 

English Translation

The Lord who threw the demon-calf against the wood-apple tree and destroyed both, the Lord who bears the beautiful-eyed lotus-dame Lakshmi on this chest, resides amid fragrant groves in his sky-touching temple in Tan-cherai.  Those who worship him are permanent residents of my heart.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain