(1582)

(1582)

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின் வல்லமணர் தமக்கு மல்லேன்,

முந்திசென் றரியுருவா யிரணியனை முரணழித்த முதல்வர்க் கல்லால்,

சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை எம்பெருமான் தாளை, நாளும்

சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக் கும்மே.

 

பதவுரை

அரி உரு ஆய்

-

நரஸிம்ஹரூபியாய்

முந்தி சென்று

-

முந்துற வெளிப்பட்டு

இரணியன் முரணை

-

இரணியாசுரனுடைய வலியை

அழித்த

-

பாழ்படுத்தின

முதல்வற்கு அல்லால்

-

ஜகத்காரணபூதனான எம்பெருமானுக்கல்லது,

மாசு உடம்பின்

-

அழுக்கேறின உடம்பையுடையராய்

வல்

-

வலிந்து வாது செய்பவர்களான

அமணர் தமக்கும்

-

ஜைநர்கட்கும்

வந்திக்கும் மற்றவர்க்கும்

-

‘வந்தே’ என்று சொல்லிக் கொண்டு திரிகிற பௌத்தர்கட்கும்

அல்லேன்

-

கூட்டுப்படக் கடவேனல்லேன்;

சந்தம் பூமலர்

-

சந்தநப் புஷ்பங்களையுடைய

சோலை

-

சோலைகளையுடைத்தான

தண் சேறை

-

குளிர்ந்த திருச்சேறையிலுள்ள

எம்பெருமான்

-

ஸாரநாதப் பெருமாளுடைய

தாளை

-

திருவடிகளை

நாளும்

-

நாள்தோறும்

சிந்திப்பார்க்கு

-

தியானம் செய்யும் பாகவதர்திறத்தில்

என் உள்ளம்

-

என் மனமானது

தேன் ஊறி

-

அமுதம் சுரக்கப்பெற்று

எப்பொழுதும்

-

இடைவிடாது

தித்திக்கும்

-

திக்திக்கின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தமக்கு பாகவத பக்தி மிக்கிருக்கக் காண்கையாலே அது காரணமாகப் பகவத்பக்தி குறையற்றிருக்கு மென்கிறாரிதில்.  ப்ரஹ்லாதாழ்வானைக் காத்தருளவேண்டி நரசிங்கமூர்த்தியாய்த் தூணில் தோன்றி ஹிரண்யாஸுரனுடைய மிடுக்கை யொழித்த முழுமுதற்கடவுளான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதனாயிருப்பே னத்தனையன்றி இப்படியிருக்ககில்லாத ஜைநர் பௌத்தர் முதலானாருடைய திரளிலே சேரக்கடவேனல்லேன் என்றார் முன்னடிகளில்.

இங்ஙனே உம்மால் தி்ண்ணிதாகச் சொல்லக்கூடுமோ? எது கொண்டு இங்ஙனே நீர் சொல்லுகிறீர்? என்று கேட்பார்க்கு உத்தரமாகப் பின்னடிகளருளிச் செய்கிறார்;- பரமபோக்கியமான திருச்சேறையிலெழுந்தருளியிருக்கின்ற ஸாரநாதப்பெருமாளுடைய திருவடிகளைத் தினந்தோறும் சிந்திக்கின்ற பாகவதர்களை நினைத்த மாத்திரத்தில் என்னுள்ளமானது தேனூறித் தித்திக்கின்றதே, இஃது ஒன்றே போராதோ? ஜைந பௌத்தாதிகளின் திரளிலே புகுதற்குரிய விதி எனக்கு இருக்குமானால் இப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவ ப்ராவண்யம் எனக்கு உண்டாகக்கூடுமோ? பாக்ய விசேஷத்தால் இஃது உண்டாகக் காண்கையினால் முன்னடிகளிற் சொன்னபொருள் கல்வெட்டுக் காண்மின் என்கை.

‘வந்திக்கும் மற்றவர்’ என்றால் எங்ஙனே பௌத்தர்களைக் காட்டும்? என்னில்; பௌத்தர்கள் புத்ததேவதையின் விஷயமாகச் சில ஸ்தோத்ரங்கள் சொல்லுவர்கள்; அவற்றில் ‘வந்தே, வந்தே’ என்று மிகையாகக் காணப்படுதலால் ‘வந்திருக்குமவர்’ என்ற சொல் பௌத்தர்களைக் குறிக்குமென்ப.

மாசுடம்பின் வல்லமணர் உடம்பிலுள்ள அழுக்கைக் கழற்றலாகா தென்றும், மலங்களைத் தேஹத்திலேயே தரித்துக் கொண்டிருப்பதனால் தான் மோக்ஷ முண்டாகுமென்றும் அமணர்களின் கொள்கை யென்றுணர்க.  ‘பெத்தர்களுக்கும் ஜைநர்களுக்கும் அல்லேன்’ என்றது அவர்களைப்போலே பகவத் விமுகர்களாக ஒருகாலும் ஆகமாட்டேனென்றவாறு.

 

English Translation

I do not esteem those who do not worship the Lord who came as a man-lion and destroyed the mighty Hiranya. The Lord resides amid fragrant Sandal groves in cool Tiruccherai.  For those who worship him, my heart flows like ever-sweet honey.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain