(1586)

கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால் போதொருகால் கவலை யென்னும்,

வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள் கருநீலம் களைஞர்

தாளால் தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை எம்பெருமான் தாளை,

நாளும் உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர் என்னுள்ள முருகு மாறே!

 

பதவுரை

விளை வயலுள்

-

பயிர்தழைத்த கழனிகளில் (முளைத்திருக்கிற)

கரு நீலம்

-

கருநெய்தலை,

களைஞர்

-

களைபிடுங்குகிற உழவர்

தாளால்

-

(தங்கள்) கால்களாலே

தள்ள

-

ஒதுக்கித்தள்ள,

தேன்

-

(அதில்நின்று மொழுகின) தேனினுடைய

மணம் நாறும்

-

பரிமளம் வீசப்பெற்ற

தண் சேறை

-

திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற

எம்பெருமான்

-

ஸாரநாதப் பெருமாளுடைய

தாளை

-

திருவடிகளை

நாளும்

-

நாள்தோறும்

உள்ளத்தே

-

நெஞ்சிலே

வைப்பாருக்கு

-

வைத்துச் சிந்தைசெய்கின்ற பாகவதர் விஷயத்தில்

என் உள்ளம் உருகும் ஆறு காணீர்

-

என்மனம் நீர்ப்பண்டமாக உருகும் விதத்தைப் பாருங்கோள்;

கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதாலால்

-

ஆத்மாபஹாரக்கள்வனும் வஞ்சநெஞ்சையுடையனுமாய் அடியேனிருப்பதால்

போதருகால்

-

ஒரு நொடிப் பொழுதும் இடைவிடாதே

கவரை என்னும் வெள்ளத் தேற்கு

-

துக்கமாகிற பெருங்கடலில் அழுந்திக்கிடந்த எனக்கு

இது என் கொல்

-

இப்படிப்பட்ட பேறு எங்ஙனே உண்டாயிற்றோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாகவதர்களை ஸேவிக்கப் பெற்றதனால் தமக்குண்டான எல்லை கடந்த ஆனந்தத்தைப் பேசி, அயோக்யனான எனக்க இப்படிப்பட்ட ஆனந்தத்தை யநுபவிக்கும்படியான பாக்கியம் எங்ஙனே வாய்த்ததோ, தெரியவில்லையே! என்று தம்மில் தாம் விஸமயப்படுகிறார்.

நெற்பயிர்கள்விளையங் கழனிகளிலே இடையிடையே கருநெய்தல்கள் முளைத்திருக்கும்; களைபிடுங்கித்திரியும் உழவர்கள் அவற்றைப் பிடுங்கியெறிய, அவற்றின்றும் ஒழுகாநின்றதேனின் மணம் ஊரெங்கும் வீசுகின்றதாம்;  இப்படிப்பட்ட போக்யதைபொருந்திய திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற ஸாரநாதப் பெருமாளுடைய திருவடிகளில் அன்புடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலே என் உள்ளம் நீர்ப்பண்டமாக உருகுகின்றதே! ; இப்படிப்பட்ட ஹ்ருதயபரிபாகத்திற்கு நான் உரியேனோ?  நானோ ஆத்மாபஹாரக்கள்வன்; *வஞ்சக்கள்வன் மாமாயனான எம்பெருமானையும் வஞ்சிப்பவனாயிருக்கின்றேன்; இப்படியிருக்கையாலே மேன்மேலும் துக்கங்களையே அநுபவிக்கவுரியேன் நான்; அப்படியிருந்தும் ஒரு துக்கத்துக்கும் ஆட்படாமல், ஸ்ரீவைஷ்ணவர்களை ஸேவிப்பதும் அதனால் நெஞ்சு உருப்பெறுவதுமாய்ச் சதிர்த்தேனே!, இஃது என் கொல்! என்கிறார்.

கள்ளத்தேன் – கள்ளத்தனமுடையேன். யோந்யதா ஸந்தமாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே – கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா?” என்ற ப்ரமாணம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.  பகவத்சேஷமான ஆத்மவஸ்துவை அங்ஙனம் உணரப்பெறாதவன் பெரிய கள்ளன்; அவன் எல்லாவகையான பாவங்களையும் செய்தவனாவன் எனபது இந்த ச்லோகத்தின் கருத்து.  ஆழ்வார் தம்மை அப்படிப்பட்ட கள்வனாக அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.  ‘போதொருகால்’ என்றபாடம் மறுக்கத்தக்கது.  போதரு கால் – நிழுங்கால மெல்லாம் என்றபடி.

கவலை – மறப்பும் துக்கமும்.

 

English Translation

I am false, wicked, constantly living in a flood of misery. Yet I have received his grace, what a miracle! See my heart melts for devotees of the Lord of Tiruccherai, where tillers of the land weed out blue waterlily from their fields with their feet, and the nectar from the flowers spills over their feet!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain