(1556)

தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,

தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,

ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட

வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே!

 

பதவுரை

தூயாய்

பரிசுத்தனானவனே!

சுடர்

ஒளிவிடுகின்ற

மா மதி போல்

பூர்ண சந்திரன் போலே

உயிர்க்கு எல்லாம்

ஸகலப்ராணிகளுக்கும்

தாய் ஆய் அளிக்கின்ற

தாய்போன்று அருள்புரிகின்ற

தண் தாமரை கண்ணா

குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனே!

ஆயா

கோபாலனே!

அலை நீர் உலகு ஏழும்

அலைகடல் சூழ்ந்த ஸப்த லோகங்களையும்

முன்

முன்னொருகால்

உண்டவாயா

அமுது செய்த திருப்பவளத்தை யுடையவனே!

உன்னை

இப்படிப்பட்ட வுன்னை

நான் எங்ஙனம் மறக்கேன்

நான் எப்படிமறப்பேன்!


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தூயாய்! என்று திருவுள்ளத்திலுள்ள பரிசுத்தியைச் சொன்னபடி.  அநுகூலர் பிரதிகூலர் என்னும் பாசிபாராதே எல்லார் திறத்திலும் நன்மையையே சிந்திக்கையாகிற திருவுள்ளத் தூய்மையை யுடையவனே! என்றபடி.  இப்படியாகில், கம்ஸ சிசுபால ராவணாதிகளைக் கொன்றது ஏனென்னில்; விளக்கிலே விட்டில் பூச்சிகள் விழுந்து முடியுமா போலே அவர்கள் விழுந்து மாண்டு போனவளவால் எம்பெருமானது திருவுள்ளத்தூய்மைக்கு ஒரு குறையுண்டோ? அவர்களும் அடிபணிந்து வாழ்ந்து போகவேணு மென்று இவன்தான் செய்த க்ருஷிகளுக்கு எல்லையில்லையே.

(சுடர்மாமதிபோல் இத்யாதி.) பூர்ணசந்திரன் ஸகலதாபங்களையும் தணிக்குமாபோலே ஸகல ப்ராணிகள் விஷயத்திலும் தாய்போன்று குளிர அருள்செய்கின்ற திருக்கண்களையுடையவனே! “திங்களுமாதித்தியனு மெழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபமிழிந்தேலோ ரெம்பாவாய்” என்றது காண்க.

ஆயா! – உன்னுடைய விபூதியானவர்களிலே சிலர்  ‘இவன் என்னுடைய பிள்ளை’  என்று அபிமாநிக்கலாமபடி இடைப்பிள்ளையாய் வந்து பிறந்தவனே!.  (அலைநீர் இத்யாதி.) ஆபத்து கரைபுரண்டால் எல்லாரையு மொக்கக் காத்தருளு மியல்வினனே! இப்படி ஆபத்பந்துவான வுன்னை அடியேன் எங்ஙனே மறக்க வல்லேன்?  ஒருநாளும் மறவேன்.


English Translation

O Pure-as-the-radiant-full-Moon! Mother to all the living souls! O Lotus-eyed protector! O Cowherd! O Lord who swallows the seven worlds!  How can I ever forget you?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain