(1552)

வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,

கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,

நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி,

சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே.

 

பதவுரை

வில் ஏர் நுதல்

வில்போன்ற நெற்றியையும்

வேல் நெடு கண்ணியும்

வேல்போன்று நீண்ட கண்களையுமுடையளான பிராட்டியும்

நீயும்

நீயுமாக

கல் ஆர் கடு கானம்

கற்கள் நிறைந்த கொடிய காட்டிலே

திரிந்த

ஸஞ்சரித்

களிறே

மதயானைபோன்றவனே!,

நல்லாய்

ஆச்ரிதவத்ஸலனே!

நரநாராயணனே

நரநாராயணவதாரம் செய்தருளினவனே!

எங்கள் நம்பீ

எங்கள் குறைதீர்க்கவல்ல பரிபூர்ணனே!

உன்னை யான் வணங்கி தொழும் ஆறு

அப்படிப்பட்டவுன்னை அடியேன் திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும் முறைமையை

சொல்லாய்

அருளிச் செய்யவேணும்.


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டியுந் தானுமாகக் கானக முலாவினபடிமையப் பேசுகிறார் முன்னடிகளில்.  வில்போல் வளைந்த நெற்றியையும் வேல்போற் கூரிய கண்களையும்  உடையளாய் உனக்குங் கூட ஆகர்ஷகமான ஸௌகுமார்யத்தை யுடையளான ஸீதா பிராட்டியும், அவள் தானும் துணுக்குத் துணுக்கென்னும்படியான ஸௌகுமார்யத்தையுடைய நீயும் துஷ்ட ஜந்துக்கள் ஸஞ்சார யோக்யமல்லாத காட்டிலே, ஒரு யானை பிடியோடே கூடக் களித்துலாவுமாபோலே உலாவினவனே!  என்கை.  கீழ்ப்பாட்டில் வள்ளால்! என்ற ஸம்போதனத்தை விவரிக்கிறதுபோலும் இது : நித்யஸூரி ஸேவ்யமான திருமேனியை எல்லாப் பிராணிகளும் கண்டு அநுபவிக்குமாறு ஸர்வஸ்வதாநம் பண்ணினவனே! என்றவாறு.

நல்லாய்! = ‘நல்லான்’ என்பதன் ஈறு திரிந்த விளி; ஆச்ரித வத்ஸலனே! என்கை (நர நாரணனே!.) முன்னொருகாலத்தில் குருசிஷ்யக்ரமத்தை உலகத்தில் அனைவர்க்கும விளக்குதற்பொருட்டு ஸ்ரீபதரிகாச்ரமத்தில் நரனென்னும் சிஷ்யனும் நாராயண னென்னும் ஆசாரியனுமாகத் திருமால் தானே திருவவதரித்துத் திருமந்திரத்தை வெளியிட்டருளினமை உணர்க.  “நர நாரணனாயுலகத்தறநூல் சிங்காமை விரித்தவ னெம்பெருமான்” என்பர் மேல் பத்தாம்பத்திலும்.  “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து ஈச்வர கைங்கர்யத்தையு மிழந்து இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, சர்வேச்வரன் தன்க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரைமரஞ் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்.  சிஷ்யனாய் நின்றது சிஷ்யனிருக்கு மிருப்பு நாட்டாரறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக.” என்ற முழுக்ஷுப்படி திவ்யஸூக்தியுங் காண்க.

சொல்லாய் = கடற்கரையிலே விபீஷணாழ்வானுக்கும் திருத்தேர்த்தட்டிலே அர்ஜுநனுக்கும் சோதிவாய் திறந்து அருளிச்செய்தது போலே அடியேனுக்கும் ஒன்றருளிச் செய்யவேணுமென்கிறார்.


English Translation

O Elephant!  You roamed the dense rocky forest with your bow-eye browed lance-eyed dame.  O Good one, Nara-Narayana, my very own Lord! Pray tell me how I must worship you property.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain