(1551)

புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,

உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,

கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,

வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே.

 

பதவுரை

புள் வாய் பிளந்த

பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்த

புனிதா

பரமபவித்திரனே!

என்று அழைக்க

என்று நான் கூப்பிட்ட வளவிலே

உள்ளே நின்று

என்னுள்ளே பொருந்தி

என் உள்ளம் குளிரும் ஒருவா

என் மனத்தில் தாபந்தணிக்க வல்ல அத்விதீயனே!

கள்வா

ஒருவருமறியாமல் பெருநன்றிகள் செய்பவனே!

கடல்மல்லை கிடந்த கரும்பே

திருக்கடன் மல்லையில் பள்ளிகொண்டிருக்கிற பரமபோக்யனே!

வள்ளால்

உதாரனே!

உன்னை

இப்படிப்பட்டவுன்னை

நான் எங்ஙனம் மறக்கேன்

நான் எப்படிமறப்பேன்? (ஒருநாளும் மறவேன்.)


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘விரோதிகளை நிரதஸிப்பதையே விரதமாகக் கொண்டவன் நீ’ என்றுணர்த்தும் திருநாமங்களை நான் வாயாரச் சொல்லவிரும்பிப் ‘புள்வாய் பிளந்தபுனிதா!’ என்றழைத்தேன்;  அவ்வளவிலே நீ என்னுள்ளத்தே வந்து புகுந்து ஸ்தாவரப்ரதிஷ்டையாக நிலைத்து ஸகல தாபங்களையும் ஆற்றிக் குளிர்ச்சியை யுண்டாக்கினாய் என்கிறார் முன்னடிகளில்.

புனிதனென்றது பரிசுத்தனென்றபடி.  விரோதிகளைக் களைந்தொழிக்க வேண்டில் அதற்கு வேறு யாரேனையும் ஏவிவிடாமல் தானே கைதொட்டுக் களைந்தமையாகிற பரிசுத்தியை நினைக்கிறது.

(கள்வா!.) பிறர் அளியவொண்ணாதபடி காரியம் செய்பவனைக் கள்வனென்பது; எம்பெருமானும் ‘இராமடமூட்டுவாரைப் போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போருமவனாகையாலே கள்வனெனப்படுகிறான்.  கச்சிமாநகரிலுள்ள பல திவ்யதேசங்களுள் திருக்கள்வனூர் என்பது ஒரு திவ்யதேசம்;  அவ்விடத்தெம்பெருமானது திருநாமம் கள்வன்; அவனை விளிக்கிறாராகவுமாம்; “ உலகமேத்துங் காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!” என்பர்.  திருநெடுந்தாண்டகத்திலும்.  ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் பேசும் பாசுரங்காண்மின் :–   “பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று கூறாதே – மண்டலத்தோர், புள்வாய் பிறந்த புயலே! உனைக் கச்சிக், கள்வாவென்றோதுவதென்கண்டு.”  என்று.  (அதாவது) ஒருவர்க்கு உரியபொருளைத் தன்னதாகக் கொள்வது கள்ளமெனப்படும்; ஆகவே அநாதியாக உனக்கே உரியதாய்க்கிடந்த உயிரை நான் என்னுடையதென்று கொண்டிருக்கிறேனாதலால் என்னைக் கள்வனென்று சொல்லத்தகும்; உலகத்திலுள்ள பொருள்கள் யாவும் நின்னுடையனவேயாதலால் வெண்ணெய் கொள்ளுதல் முதலிய தொழில்களைச் செய்யினும் உன்னைக்கள்வனென்று கூறுதல் தகாது; இவ்வாறு இருக்க, உலகத்தார் இத்தன்மையை ஆய்ந்து அறியாமலே என்னை யானே திருடிக்கொண்ட பெருந்திருடனாகிய என்னைக் கள்வனென்னாமல் ஸர்வஸ்வாமியான உன்னைக் கள்வனென்கின்றனரே, இஃது என்ன பேதைமை என்று சமத்காரந் தோன்றக் கூறியவாறு.

கடன் மல்லைக் கிடந்தகரும்பே =  இப்படிப்பட்ட விளிகள் ஆழ்வார் திருவாக்கில் நின்று தானே ; எம்பெருமானை நோக்கி இங்ஙனே விளிக்கவல்லார் மற்று ஆரேனுமுண்டோ? ஆழ்வாருடைய ஹ்ருதயம் பரிபக்குவாமாயிருக்கையாலே இப்படிப்பட்ட இன்சொல் வெளிவரப் பெறுகின்றது.  “கரும்பே! என்றது – கைதொட்டு நெருக்குதலால் வரும் செவ்வியழிகைபின்றிக்கே யிருக்கை” என்பது பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செயல்.

வள்ளால் – ‘வள்ளல் என்பதன் ஈற்றயல் திரிந்தவிளி.  ஆச்ரிதர்கட்குத் தன் வடிவை முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுக்குமவனே! என்கை.  மஹோபகராகனாயிருக்கிறவுன்னை உன்னாலே உபகாரங் கொண்டிருக்கிற நான் ஒருபடியாலும் மறக்கமுடியா தென்றாராயிற்று.


English Translation

O sweet Lord of Kadalmallai while I called "O pure one who tore apart the horse kesin's Jaws you stole my heart and took residence in it, filling me with joy!  How can I ever forget your generosity?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain