(1548)

கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,

மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,

நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,

பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே!

 

பதவுரை

நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி

தேன்மிக்க சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமிந்!,

கறவா மடநாகு

பால்சுரவாத இளம்பசுவை

அது தன்னுடைய கன்றானது

தன் கன்று உள்ளினால் போல்

நினைத்துக் கத்துமாபோலே

அடியேன்

அடியேன்

மறவாது

ஓயாமல்

உன்னையே அழைக்கின்றேன்

உன்னையே சொல்லிக் கூப்பிடா நின்றேன்;

எந்தை பிரானே

எனக்குத் தந்தையான பெருமானே!

எனை

என்னை

பிறவாமை

(இனி ஸம்ஸாரத்தில்) பிறவாதபடி

பணி

செய்தருளாய்.


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருநறையூர்ப் பெருமானே! உன்னை இடைவிடாது அநுபவிப்பதற்கு அடைவூறான ஸம்ஸார ஸம்பந்தத்தைக் கழித்தருளாய் என்கிறார்.  கன்றுக்குட்டியானது தனது தாய்ப்பசு பால் சுரவாவிடில் அதனையே நினைத்துக் கதறுமாபோலே பேறு பெறாத அடியேன் ஓயாது உன்னையே சொல்லிக் கதறுகின்றேன்; இன்னமும் எத்தனை காலம் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து அநர்த்தப் படுவேன்? பட்டதெல்லாம் போதாதோ? இனி எனக்குப்பிறவி நேராதபடி கடாக்ஷித்தருளாய் என்றாராயிற்று.

 

பிள்ளையமுதனார் என்னுமாசிரியர் இப்பாட்டின் முதலடிக்குப் பொருள் சொல்லப்புகுந்து, “கறவா மடநாகு – கறவாத மடநாகானது, தன்கன்று உள்ளினாற் போல் – தன் கன்றை நினைக்குமாபோலே” என்று பொருள் சொல்லப்பார்த்து, இவ்வர்த்தம் இரண்டாமடியோடு சேராமையாலும் வேறு வகையாகப் பொருள் சொல்ல ஸ்புரியாமையாலும் சிறிது வருத்தப்பட்டார்; (நாகானது தன் கன்றை நினைக்குமா போலே என்றால் நாகின் ஸ்தானத்திலே ஆழ்வாரான தம்மையும் கன்றின் ஸ்தானத்திலே எம்பெருமானையும் கொள்ளவேண்டி வருகையாலே இது அஸங்கதமென்று மிடிபட்டார்.)  அவ்வளவிலே, பட்டரிடத்தில் பொருள்கேட்ட ஒருவர் அவ்வமுதனார் கோஷ்டியிலே இருக்கக் கண்டு அவரை நோக்கி “இவ்விடத்திற்கு பட்டர் நிர்வஹிப்பது எங்ஙனே?” என்று கேட்க; ‘நாகு’ என்பதை இரண்டாம் வேற்றுமையாகக் கொண்டு, கறவாமட நாகைத் தன்கன்று உள்ளினாற்போல் என்று பட்டர் நிர்வஹிக்கும்படி என்றாராம்.  ‘நாகுதன் – நாகினுடைய, கன்று – கன்றானது, உள்ளினாற் போல் – தாயையே நினைத்துக் கத்துமாபோலே’ என்றுரைப்பது முண்டு.  நாகு – இளம்பெண்மாடு.  பால்கறவாத பசுவின் ஸ்தானத்தில் அருள்புரியாத எம்பெருமான் கொள்ளப்பட்டான்; கத்துகின்ற கன்றின் ஸ்தானத்திலே தம்மை வைத்துக்கொண்டார்.

உன்னை அறப்பதற்கு ஹேதுவான இந்நிலத்தில் பிறந்துவைத்தும் மறவாதே, இயற்றையான அடிமையை உணர்ந்து உன்னையே அழைக்கின்றேனென்பது இரண்டாமடி.

நறவு – தேனுக்கும் வாஸனைக்குப் பெயர்.  பிறவாமை எனைப்பணி = பிறப்பது என்பதும் (எம்பெருமானை) மறப்பது என்பதும் பரியாயம் போலுமாதலால், இனி யொருகாலும் உன் திருவடிகளை நான் மறவா திருக்கும்படி அருள்புரியவேணுமென்றவாறு,


English Translation

O Lord of Naraiyur surrounded by nectared groves! Like a calf constantly calling for its unmilked mother cow, I keep calling for you, Pray ensure that I am not born again.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain