(1249)

யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய்

மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்,

மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை

தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே.

 

பதவுரை

யாவரும் ஆய்

-

சேதனப் பொருள்கள் எல்லவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்

யாவையும் ஆய்

-

அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்

எழில் வேதம் பொருள்களும் ஆய்

-

அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய்

மூவரும் ஆய்

-

(பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய்

முதல் ஆய

-

முழுமுதற் கடவுளான

மூர்த்தி

-

எம்பெருமான்

அமர்ந்து உறையும் இடம்-;

மா வரும்

-

குதிரை மேல் ஏறிவருகிற

திண் படை

-

திடமான ஆயுதங்களையுடைய

மன்னை

-

ராஜலோகத்தை

வென்றி கொள்வார்

-

தோற்கடித்து வெற்றிபெறும் மந்தணர்கள்

மன்னு

-

நித்யவாஸம் பண்ணுகிற

நாங்கை

-

திருநாங்கூரில் உள்ளதாய்,

தேவரும் சென்று இறைஞ்சு

-

நித்யஸூரிகளும் வந்து வணங்கப் பெற்றதாய்

பொழில்

-

சோலைகளை யுடைத்தான

திருத்தேவனார் தொகையே -.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யாவர் என்ற சொல் உயர்திணைவிகுதி யேற்றதாதலால் ஸகல சேதநப்பொருள்களையுஞ் சொல்லுகிறது.  யாவை என்ற சொல் அஃறிணை விகுதியேற்றதாதலால் ஸகல அசேதநப் பொருள்களையுஞ் சொல்லுகிறது.  ‘ஆய்’ என்ற இவற்றோடு எம்பெருமானுக்கு ஐக்கியஞ்சொன்னது – சரீரசரீரிபாவத்தா லென்க.

மூவருமாய் - பிரமன் என்கிற வேஷம்பூண்டு படைத்தல் தொழிலைச் செய்தும், தானான தன்மையில் காத்தல் தொழிலைச்செய்தும், ருத்ரனான தன்மையில் ஸம்ஹாரத்தொழிலைச் செய்தும் போருகிறவன் என்க. மூர்த்தி - ஸ்வாமி.

மாவருந்தின்படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை – பண்டொருகால் பாண்டியராஜன் படைதிரட்டிக்கொண்டு ஆக்ரமிக்க அங்கு வந்தபோது  அத்திருநாங்கூரிலுள்ள ப்ராஹ்மணர்கள் தாமே எதிரே புறப்பட்டோடித் துரத்தியடித்து வெற்றிகொண்டதாக அதிஹாஸப்ரஸித்யியுண்டு;  “ஒண்டிறல் தென்னனோட வடவர சோட்டங்கண்ட, திண்டிறலாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே” என்பர் மேல் ஐந்தாந் திருமொழியிலும்,  ஒண்டிறல் தென்னனை ஓட்டினகதை தவிர வேறொரு கதையும் பெரியவாச்சான் பிள்ளை காட்டுகிறார் காண்மின் :- “உடையபிள்ளை யென்கிறவன் அங்குத்தையாலயத்தைக் கவிபாடவென்று வர, அவனை எதிரே சென்று அடித்தோட்டிப் பின்னை பாடப்றெதே போனான் என்றொரு ப்ரஸித்தியுமுண்டிறே” என்பது வியாக்கியானவாக்கியம்.  உடையபிள்ளை யென்பது ஞானசம்பந்தருடைய மறுபெயராம்.

 

English Translation

He stands as everything and everyone, and as the substance of Vedas. He is the first-cause Lord, he is the Three too. He resides permanently at Nangur surrounded by fields, worshipped by the gods, attended by Vedic seers who win over strong-armed horse-riding kings, in Tiruttevanar Togai.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain