(1103)

புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும்

நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து,

கலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்,

வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே.

 

பதவுரை

புலன் கொள்

-

இந்திரியங்களைக் கவர்கின்ற (மநோஹரமான)

நிதி குவையோடு

-

பொற்குவியல்களையும்

புழை கை மா களிறு இனமும்

-

துதிக்கையையுடைய பெரிய யானைக் கூட்டங்களையும்

நலம் கொள் நவமணி குவையும்

-

நல்ல நவரத்னக் குவியல்களையும்

சுமந்து

-

தாங்கிக்கொண்டு

நான்று ஒசிந்து

-

(ஏறின சரக்குகளின் கனத்தாலே) மிகவும் உள்ளழிந்து

கலங்கள்

-

கப்பல்களானவை

எங்கும்

-

பார்த்தவிடமெங்கும்

இயங்கும்

-

ஸஞ்சரிக்கப்பெற்ற

மல்லை

-

பெருமையையுடைத்தான

கடல்

-

கடலின் கரையிலுள்ள

மல்லைத் தலசயனம்

-

மல்லாபுரியை

வலம் கொள் மனத்தாரவரை

-

பிரதிக்ஷணம் பண்ணவேணுமென்கிற விருப்பமுடைய பாகவதர்களை,

என் மட நெஞ்சே

-

எனக்கு விதேயமான மனமே!

வலம் கொள்

-

நீ அநுவர்த்திப்பாயாக.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கடல்மல்லை  கடற்கரையிலே உள்ளதாகையாலும், அக்கடலில் த்வீபாந்தரங்களிலிருந்து சிறந்த வஸ்துக்களை ஏற்றிக்கொண்டுவரும் கப்பல்கள் பெரும்பான்மையாகக் காணப்படுதலாலும் இந்த நிலைமையைப் பேசுகிறார் இப்பாசுரத்தில்.

நிதி என்னும் பல பொருளொருசொல் இங்கு, பொன் என்ற பொருளில் வந்தது.  சிறந்த பொற்குவியல்களையும் யானைக் கூட்டங்களையும் நவமணித்திரள்களையும் அளவு மீறித் தாங்கிக் கொண்டு வருகையாலே பாரம் கனத்துத் துவண்டிரா நின்றனவாம் மரக்கலங்கள்.  அப்படிப்பட்ட நற்சரக்குக்களமைந்த பல கப்பல்கள் உலாவப்பெற்ற கடலின் கரையிலேயுள்ள மல்லாபுரியை வழிபட நினைக்கும் பாகவதர்களையே அடியேன் வழிபடக்கடவேன் என்றாராயிற்று.

“நான்றொசிந்த” என்ற பாடமும் பொருந்தும்.  நான்று = ‘நால்’ என்னும் வினையடியாப் பிறந்த இறந்தகால வினையெச்சம்;  தொங்கலாடி என்றபடி.  ஒசிதல்-தளர்தல்.  ஏறின சரக்கின் கனத்தாலுண்டான நிலையைச் சொன்னபடி.  கலம் = மரக்கலம்; அதாவது-கப்பல்.

 

English Translation

Heavy boats carrying eye-catching heaps of gold, and elephant-loads of gems, cruise the shores of Kadal Mallai where our Talasayanam Lord resides. O Heart, worship those who offer worship here!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain