பத்தாந் திருமொழி

(741)

அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி

வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றிவிண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை

செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே.

விளக்க உரை

(742)

வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி

மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்

செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே.

விளக்க உரை

(743)

செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி

வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றிகொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை

தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே.

விளக்க உரை

(744)

தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தொன்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை

பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து

சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே.

விளக்க உரை

(745)

வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி

கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி

சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.

விளக்க உரை

(746)

மனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி

வனமருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்

சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே.

விளக்க உரை

(747)

குரைகடலை யடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேரி

எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து

திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன்மற் றரசு தானே

விளக்க உரை

(748)

அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்

றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்

செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே.

விளக்க உரை

(749)

செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த

நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத் தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட

திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

உறைவானை மறவாத வுள்ளந் தன்னை உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே.

விளக்க உரை

(750)

அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி அடலரவப் பகையேறி யசுரர் தம்மை

வென்றுஇலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி

சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும் இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே.

விளக்க உரை

(751)

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை

எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா

கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த

நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain