(919)

சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி

படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்

மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ

அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே.

 

பதவுரை

சூழ் திசை எல்லாம்

-

கண்டவிடமெங்கும்

சுடர் ஒளி

-

ஸூர்ய கிரணங்களானவை

பரந்தன

-

பரவி விட்டன;

துன்னிய

-

(ஆகாசத்தில்) நெருங்கிய

தாரகை

-

நஷத்திரங்களினுடைய

மின் ஒளி

-

மிக்க தேஜஸ்ஸானது

சுருங்கி

-

குறைவுபட்டது மன்றி

படர் ஒளி

-

மிக்க ஒளியையுடைய

பனிமதி இவன்

-

இக்குளிர்ந்த சந்திரனும்

பசுத்தனன்

-

ஒளிமழுங்கினான்;

பாய் இருள்

-

பரந்த இருட்டானது

அகன்றது

-

நீங்கிற்று;

வைகறை மாருதம் இது

-

இந்த விடியற்காற்றானது

பை

-

பசுமை தங்கிய

பொழில்

-

சோலைகளிலுள்ள

கமுகின்

-

பாக்குமரங்களினுடைய

மடலிடை கீறி

-

மடலைக்கீற

(அத்தாலே)

வண் பாளைகள் நாற

-

அழகிய பாளைகளானவை பரிமளிக்க

(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)

கூர்ந்தது

-

வீசாகின்றது;

அடல்

-

பெருத்த மிடுக்கையுடைத்தாய்

ஒளி திகழ்தரு

-

தேஜஸ்ஸூ விளங்காநின்றுள்ள

திகிரி

-

திருவாழியாழ்வானை

அம் தட கை

-

அழகிய பெரிய திருக்கையிலே யுடைய

அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதற்பாட்டில், கதிரவன் கீழ்த்திசையில் உதயகிரி சிகரத்திலே வந்து சேர்ந்தான் என்றது. இப்பாட்டில் நேராக உதித்துத் தனது தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக்கொண்டு வந்து தோன்றினானென்கிறது.

கண்பார்வை புகுமிடமெங்கும் ஸூர்யகிரணங்கள் பரவிவிட்டன; நக்ஷத்திரங்கள் ப்ரகாசம் குன்றிப்போய்விட்டது; நக்ஷத்ராதிபதியான சந்திரனும் வைவர்ணிய மடைந்தான்; [பகல் விளக்குப் போலாயினன் என்றபடி.] பாக்குச் சோலைகளில் மடல்விரிந்த பாளையின் பரிமளத்தை முகந்துகொண்டு விடியற் காற்றானது மிகுதியாக வீசாநின்றது; கையுந் திருவாழியுமான தேவரீருடைய அழகை நாங்கள் கண்டுகளிக்கும்படி திருப்பள்ளியுணர்ந் தருளவேணு மென்கிறது. “பனிமதி, படரொளி பசுத்தனன்” என்றும் அந்வயிக்கலாம்.

வியாக்கியாந ஸ்ரீஸூக்தி –  “ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலேயிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து; தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன்பரிகரமும்தானும் வேற்றுருக்கொண்டான்.”

பாயிருள் =பாய்தல் – வியாபித்தல். பசுமை + பொழில்-பைம் பொழில்; “ஈறு போதல் இடையுகரம் இய்யாதல், ஆதிநீடல் அடியகரம் ஐயாதல், தன்னொற்றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல், இனமிகலினையவும் பண்பிற்கியல்பே” என்பது நன்னூல். “வண்பானைகள்” என்றவிடத்து, பாளைக்கும் வண்மையாவது ஒளதார்யம்= தன்பக்கலுள்ள மணத்தைக்கொடுக்கை என்றும் கொள்ளலாம். வைகறை -விடியற்காலம்.

 

English Translation

Twilight spreads all over the horizon; the little stars disappear. The tender dew Moon is fading. Darkness is dispelled. Areca fronds burst spilling their golden inflorescence, blown by the wind O Lord of Arangam, pray wake up.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain