(2092)
வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தாந்தொழா – பேய்முலைநஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
காணாகண் கேளா செவி.
(2093)
செவிவாய் கண்மூக் குடலென் றைம்புலனும்
செந்தீபுவிகால் நீர்வண் பூதமைந்தும் -அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே
ஏனமாய் நின்றாற் கியல்வு.
(2094)
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம், – இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர்.
(2095)
அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி, இவரிவ
ரெம்பெருமா னென்று, – சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த
மூர்த்தி யுருவே முதல்.
(2096)
முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன், – முதலாய
நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,
பல்லார் அருளும் பழுது.
(2097)
பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு – தொழுதேன்,
கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்
அடலோத வண்ணர் அடி.
(2098)
அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,
முடியும் விசும்பளந் ததென்பர், – வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா னுலகளந்த நான்று
(2099)
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை – ஊன்றி,
பொருது டைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால்.
(2100)
மாலுங் கருங்கடலே என்நோற்றாய், வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான், – கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று.
(2101)
பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,
செற்றார் படிகடந்த செங்கண்மால், – நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,
நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.
