(698)
ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் எனைப்பல ருள்ளவிவ் வூரில்உன்றன்
மார்வு தழுவுதற் காசையின்மை அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதலெய்திக் கூசி நடுங்கி யமுனையாற்றில்
வார்மணற் குன்றில் புலரநின்றேன் வாசுதே வாஉன் வரவுபார்த்தே
(699)
கெண்டையொண் கண்மட வாளொருத்தி கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் தாமோத ராமெய் யறிவன்நானே
(700)
கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்
மருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து
புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை
மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே
(701)
தாய்முலைப் பாலி லமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென் றேபிற ரேசநின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே
(702)
மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு வீங்கிருள் வாயென்றன் வீதியூடே
பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன்
கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்
என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னமங் கேநட நம்பிநீயே
(703)
மற்பொரு தோளுடை வாசுதேவா வல்வினை யேன்துயில் கொண்டவாறே
இற்றை யிரவிடை யேமத்தென்னை இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்
அற்றை யிரவுமோர் பிற்றைநாளும் அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்
எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய் எம்பெரு மான்நீ யெழுந்தருளே
(704)
பையரவிண்ணைப்பள்ளியினாய் பண்டையோமல்லோம்நாம் * நீயுகக்கும்
மையரியொண்கண்ணினாருமல்லோம் வைகியெம்சேரிவரவொழிந்*
செய்யவுடையுந்திருமுகமும் செங்கனிவாயுங்குழலுங்கண்டு*
பொய்யொருநாள்பட்டதேயமையும் புள்ளாவம் பேசாதேபோகுநம்பீ!
(705)
என்னை வருக வெனக்குறித்திட் டினமலர் முல்லையின் பந்தர்நீழல்
மன்னி யவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்
பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்
இன்னமென் கையகத் தீங்கொருநாள் வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே
(706)
மங்கல நல்வன மாலைமார்வில் இலங்க மயில்தழைப் பீலிசூடி
பொங்கிள வாடை யரையில்சாத்திப் பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து
கொங்கு நறுங்குழ லார்களோடு குழைந்து குழலினி தூதிவந்தாய்
எங்களுக் கேயொரு நாள்வந்தூத உன்குழ லின்னிசை போதராதே
(707)
அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன் றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினி லேமத்தூடி எள்கி யுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் குலசே கரனின் னிசையில்மேவி
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும் சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே
