நம்மாழ்வார் வைபவம்.

நெடியானருள் சூடும் படியான் சடகோபன்

அடிசே ரடியார்கட்கடையா விடர்தானே!

 

“நலமந்தமில்லதோர் நாடு” என்னப்படுகிற ஸ்ரீவைகுண்ட நகரிலே செம்பொன் செய் கோயிலிலே திருமாமணி மண்டபத்திலே * ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்கிற ஆதிசேஷனது ஸ்வரூபமான சீரிய சிங்காசனத்திலே ஸ்ரீ பூமி நீளைகனென்னும் தேவிமார் மூவரொடுங் கூடி வீற்றிருந்து நித்ய முக்தர்களுக்கு அளவிலாத ஆனந்தத்தை அதுபவிப்பித்தருளுகிற ஸகல கல்யாணகுண பரிபூர்ணனை ஸர்வேச்வரன் அவ்விபூதியிலுள்ளார் எப்போதும் பரமாநந்தத்தையே அநுவித்து வருதல் போல, இந்நிலவுலகத்திலுள்ள உயிர்களும் தம்தம் ஆத்மகுண பரிபூர்த்தியால் அப்பெரும் பதவியைப் பெதற்று இன்புற்று வாழலாம்படியிருக்க, இதற்கு உபயோகமாகவே தான் கொடுத்தருளின கரண களேபரங்களையும் சப்தாதி விஷயாந்தரங்களிலே செல்லவிட்டு * மாரநார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்து, மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து இறந்து கரையற்ற கருமப் பெருங் கடலினுள் அமிழ்ந்து வருந்தி அலைவதை உற்றுநோக்கி அவ்வான்மாக்களையும் அழிவில் வீட்டை அடைவித்துக்கொள்ள வேண்டுமென்று இயல்பாக எழுந்த இன்னருளாலே அவ்வுயிர்கள் நல்வழி தீவழிகளை நன்றாகப் பகுத்துணர்ந்து நடக்குமாற்றை அறிவித்தற் பொருட்டு, தன் கட்டளை ரூபமான வேதங்களை வெளியிட்டருளி, அரிய பெரிய அவ்வேதங்களின் ஆழ்ந்த மறைப் பொருளைச் சில்வாழ்நாட் பல் பிணிச் சிற்றறிவினராகிய நம்போன்றவர்களும் தென்ளிதில் தெரிந்துகொள்வதற்கு உபயோகமாம்படி அவற்றிற்கு அங்கமான அனேக சாஸ்திரங்களையும் முனிவர் முதலானரைக்கொண்டு வெளியிட்டருளினான்.

 

பேரிருளிலே திரிவார்க்குப் பொருள் விளக்கம் பிறக்குமாறு கைவிளக்குக் கொய்த்தாற்போல, அநாதி அக்ஞாந்தரகாரத்தில் அகப்பட்டவர்க்கு அர்த்தஜ்ஞாந ப்ரகாச முண்டாகுமாறு இப்படி, சாஸ்திர தீபத்தைக் காட்டிக் கொடுக்கவும், விழியிலார்க்கு விளக்கு பயன்படாதவாறு போல, பகவத் பக்தி யாகிற சித்தாஞ்ஜனத்தினால் நெஞ்சென்னும் உட்கண்ணின் குருடு தீராத உலகத்தார் பலர்க்கு அந்தப்ரமண ப்ரதீபமும் முழுப்பயன் படாதாயிற்று. அவர்கள் சாஸ்திரங்களின் ஸித்தாந்தத்தைத் தீரத்தெளிய ஆய்ந்து ஓய்ந்து உணராமல் நுனிப்புல் மேய்ச்சலாக மேல் நோக்காகப் பார்த்தறித்து நிலையில்லாதவற்றை நிலையுடையன வென்றும், நிலையினவற்றை நிலையிலவென்றும் விபரீதமாகத் துணிந்து அர்த்த காமங்களில் மிகவும் அபிமுகரும் மோக்ஷத்தில் அபி விமுகருமாய் அழிந்துபோவதை ஆலோசித்து, கருணைக்கடலான எம்பெருமான், தன் ஆணை செல்லாத இடங்களில் அரசன் தானே நேரிற்சென்று தண்டம் நடத்துதல் போலவும், கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை யெடுக்கத் தாய் தானும் அதனுட்குதித்தல் போலவும் தானே ராம க்ருஷ்ணதிரூபத்தால் “ஆதியஞ்சோதி யுருவை யங்கு வைத்திங்ப் பிறந்து பரத்வத்தை இருந்தது தெரியாதபடி விட்டு ஸௌலப்யத்தையே தலைமைக்குனமாகக் கொண்டு உலகத்தோடொத்து வாழ்ந்து துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனஞ்செய்து அறத்தை நிலைநிறுத்தித் தன் வடிவழகாலும் உபதேச முகத்தாலும் அனுட்டான மூலமாகவும் பிரஜைகளைத் தன் வசப்படுத்தத் தொடங்கியவளவிலும், பலர் அநாதி கரும வாசணையாலே சீர்திருத்தாமல் அத்திருவவதார மூர்த்திகள் திறத்து மநுஷ்ய  புத்தியையேபண்ணித் தம்மைப் போலவே அவர்களைப் பாவித்து எதிரம்புகோத்துப் போருக்கு நின்றும் * கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளையே வைதும் விச்வரூபத்தையுமுட்பட இந்திர ஜாலமென்று இகழ்ந்தும் அதமகதிகளை அடையலாயினர். 

 

அதுகண்டு திருமால் திருவுள்ளமிரங்கி “இனி இவர்களை வசிகரித்தற்கு வழி யாதோர?” என்று திருமகளோடு தீர்க்காலோசனை செய்து ஸஜாதீய மிருகங்களைக்கொண்டே மிருகங்களைப் பிடிப்பது போல, இவர்களினத்தவரென்னலம்படியான சேதநரைக்கொண்டு இவர்களைக் கைப்பற்றுவதே உத்தமமான உபாயம்” என்று அறுதியிட்டு ஸ்ரீ பூமி நீளாதேவிகளையும் ஸ்ரீபஞ்சாயுதங்களையும் ஸ்ரீவத்ஸ கௌஸ்துப வநமாலாதி சிஹ்னங்களையும் அநந்த கருட விஷ்வக்ஸேநாதியரையும் பார்த்து “நீங்கள் ஏற்றபடி பூலோகத்தில் பல சாதிகளிலும் பிறந்து பிரபஞ்சத்தவரைப் பிறவிப் பெருங்கடலினின்று கரையேற்றிவாருங்கள்” என்று ஆணையிட்டனுப்ப, அவர்கள் அப்பணியைச் சிரமேற்கொண்டு ஆழ்வாராதியராக அவதரித்தார்கள். 

 

இவர்கள், எம்பெருமானுடைய ஸகல மங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவராதலால் இவர்களுக்கு “ஆழ்வார்’ என்று திருநாமம் வழங்குதல் மரபு.

 

இவர்கள் ரிஷிகள்போலத் தாமாக மிகமுயன்று  தத்துவஞானத்தைப் பெறுதலின்றி எம்பெருமான் தானே வந்து தன்னைக்காட்டிக் கொடுக்கக்கண்டு ஞான பக்தி விரக்திகளை, எளிதிற் பெற்று, சிலர்க்கு விலக்காக மறுக்கப்படுகிற வேதம் போலன்றி யாவர்க்கும் ஒருங்கே உதவும்படி, ஸகல வேத வேதாங்க ரஹஸ்யதார்த்தங்களை தமிழ்த் திவ்ய ப்ரபந்தங்களாக அருளிச்செய்து தம்முடைய அநுபவத்தைப் பிறர்க்கு உணர்த்தி உலகத்தை வாழ்வித்தருளுதலால் கூறுதற்கரிய வீறு பெறுவர்.

 

ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திற் சிறந்த மெய்யடியார்களென்று கொண்டாடப்படுகின்ற இவ்வாழ்வார்கள் பதின்மர்.

 

திருமாலின் வேறு தசாவதார மென்னலாம்படியான வீறுபாடுடைய இங் வாழ்வார்களது திருவவதாரக் கிரமம், 

++“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை 

அய்ய னருள்மாறன் சேரலர்கோன் – துய்யப்பட்ட – 

நாதனன்பர் தாள் தூளி நற்பாணன் நன்கலியன்

ஈதிவர் தோற்றத்தடைவா மிங்கு.” – ++உபதேசரத்தினமாலை 

என்று முறைமை பெற்றிருக்கும். நம்மாழ்வார் திருவடிகளான ஸ்ரீமதுரகவிகளையும், பட்டர்பிரா னென்னும் பெரியாழ்வாரது திருமகளாரான சூடிக்கொடுத்த நாச்சியாரையுஞ் சேர்த்து ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுஞ் சொல்லுவதுண்டு.

 

புறவிருளைப் போக்குகின்ற துவாதசாதித்யர்களிற்காட்டிலும் பெருமை பெற அகவிருளொழித்த இவ்வாழ்வார்களுடைய சரிதவிபவங்களுக்கு ஓர் எல்லையில்லை.

 

இவர்களுள் நம்மாழ்வார், மற்றையாழ்வார்களைப்போல இவ்வுலகவுணர்ச்சி நடையாடாநிற்க எம்பெருமானருளால் ஒரு காலவிசேஷத்திலே தத்துவஞான முதலியன தோன்றப்பெற்று அநுபவித்தவரன்றி, திருத்துழாய் மணத்தோடே முளைக்குமாபோலே அவதரிக்கும்போதே இயற்கையில் ஞானபக்திகளை யுடைபவராய் அந்நிலை என்றும் மாறாதிருந்ததனால் தலைவராகக் கூறப்பட்டு இதுவே காரணமாக அவரை அவயவியாகவும் மற்றையாழ்வார்களை அவர்க்கு அவயவமாகவும் பூருவர்கள் நிரூபித்தார்கள். 

 

அங்கனம் உருவகப்படுத்துமிடத்து, நம்மாழ்வாருக்கு, பூதத்தாழ்வாரைத் திருமுடியாகவும், பொய்கை பேயாழ்வார்களைக் கண்களாகவும்,  பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரைச் கழுத்தாகவும், குலசேகராழ்வாரையும், திருப்பாணாழ்வாரையும் கைகளாகவும், தொண்டரடிப்பொடியாழ்வாரை மார்பாகவும், திருமங்கையாழ்வரரைக் கொப்பூழாகவும், மதுரகவியாழ்வாரைத் திருவடியாகவும் உரைத்தனர். இதற்கேற்ப, “பூதம் சிரோ ஹ்ரத மஹாஹ்வயமக்ஷியுக்மம் பட்டார்யமா ஸ்யமத பார்க்கவமஸ்ய கண்டம் – பாஹு வதந்தி குலசேகரயோகிவாஹௌ தோர் மத்யநாபி சரணார்  இதராந் சடாரே:” என்றும், “பூதம் மஸ்தகமக்ஷிணீ ஹரதமஹத்ஸூரீ  ச பட்டேச்வரம், வக்த்ரம் பத்திகநம் களம் குலசிரோபூஷம் முநிம் காயகம்; தோர்யுக்மம் ஹரிதா ஸபத்ரஜ உரோ நாபிம் கலித்வம்ஸிநம் ஸ்ரீபாதம் மதுரம்கவிம் யதிபதிஞ் சாஹுச் சடாரேர் புதா:” என்றுமுள்ள ச்லோகங்கள் திருவவதரித்தன. 

 

ஆக, பொய்கையார் முதலான ஆழ்வார்களை அவயவபூதராகக்கொண்டு அவயவியாய் ப்ரபந்நஐநகூடஸ்தரான நம்மாழ்வாருடைய சரித்திரம் எங்ஙனேயென்னில்:–

  

+ “பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து” என்ற முதியார் மொழியின்படி முத்துவளத்தை மிகுதியாகவுடையதும் செந்தமிழ் நாடென்று சிறப்புற்றதும், ++ “ஈரொன்பதாம் பாண்டி” என்கிறபடியே பதினெட்டுத் திருப்பதிகளை யுடையதுமான பாண்டிய நாட்டிலே, கங்கை யமுனை முதலிய புண்ணிய நதிகள் பலவற்றிலும் விஞ்சிய வீறுபெற்ற தாமிரபரணி யென்னும் பொருநையாற்றின் கரையிலே திருநகரி யென்பது ஒரு திவ்ய தேசம். அத்திருக்குருகூரிலே வேளாளவருணத்திலே வம்ச பரம்பரையாகத் திருமாலடிக்கே தொண்டுபூண்டொழுகுஞ் சிறந்த குலத்திலே திருவழுதி வளநாடரென்னும் பாகவதரது அறந்தாங்கியாரீன்ற  சக்கரபாணியாரது தனயராகிய அச்சுதரைத் தந்தையாக வுடையவர் செந்தாமரைக் கண்ணர். அவர்பாலுதித்த செங்கண்ணரது குமாரரான பொற்காரியார் தமது புதல்வராய்த் தோன்றிய காரியாருக்குக் கலியாணஞ் செய்விக்கக்கருதி மலையமா நாட்டில் திருவண்பரிசாரமென்னும் திருப்பதியிலுள்ள 

 

+ வேழமுடைத்து மலைநாடு மேதக்க, சோழவளநாடு 

சோறுடைத்துப் பூழியர்கோன் தென்னாடு 

முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டை 

நன்னாடு சான்றோ  டுடைத்து.” — (ஒளவையார் தனிப்பாடல்.)

++ ஈரிருப தாஞ்சோழ மீரொன்ப தாம்பாண்டி

ஓர்பதின்மூன் றாமலைநா டோரிரண்டாம் – சீர்நடுநா

டாறோடீ ரெட்டுத்தொண்டை யவ்வட‌நா டாறிரண்டு

கூறுதிரு நாடொன்றாக் கொள். (6 நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி)

 

திருவாழ் மார்பனென்னும் பகவத் பக்தரது திருமகளான உடைய நங்கையாரை மணம் பேசி முடிக்க, பின்பு இருவர்க்கும் அவ்வூரில் வெகு ஸம்பிரமமாக விவாஹாமஹோத்ஸவம் நடந்தேறியது. பின்னர் இத்தம்பதிகள் திருக்குருகூருக்கு வந்து சிறப்பாகப் பலவாண்டு இல்லறம் நடத்தி வருகையில் ஒரு நாள் மாமனார் வேண்டுகோளின்படி, காரியார், தமது வாழ்க்கைத்துனைவியுடனே திருவண்பரிசாரத்தை யடைந்து  அங்குச் சிலகாலம் வஸித்திருந்தார், பிறகு தமது தருமபத்தினியுடனே தம் ஊருக்கு மீண்டு வருகையில் திருக்குறுங்குடியென்னும் திருப்பதியை யடைந்து அங்கு எழுந்தருளியிருக்கிற நம்பி யென்னும் திருநாமமுடைய எம்பெருமானை வந்தித்து வாழ்த்தி அடியோங்களுக்கு “ஒரு புத்ரஸந்தானத்தை அளித்தருளவேணும்” என்று பிரார்த்திக்க, அவ்வாதிமூர்த்தி ‘நாமே வந்து பிறக்கிறோம்’ என்ற பொருள் பொலிந்து அர்ச்சக முகமாகச் சொல்லியருளித் தனது தீர்த்தம், திருமாலை, திருப்பரியட்டம் முதலானவற்றை ப்ரஸாதித்தருளினான்.
இங்ஙனம் பெற்ற அவர் திருநகரியிற்சென்று வாழ்கையில், உடைய நங்கையார் கர்ப்பவதியாக, அவரது திருவயிற்றினின்று பகவானது அம்சமும் ஸ்ரீ கௌஸ்துபத்தினது அம்சமும் ஸேனை முதலியாரது அம்சமுமாக ஒரு குமாரர் வைகாசி விசாகத்திலே திருவவதரித்தார். 

 

இப்படி ஒருவர் மூவாது அம்சமாக இருக்கக்கூடுமோ? எனில்; சக்கரவர்த்தியான அரசன் அஷ்டதிக்பாலகர்களின் அம்சங்கள் கூடிப் பிறந்தவனென்றும், லக்ஷ்மணனும் பலராமனும் தனித்தனி ஆதிசேஷாம்சத்தோடு பகவானது அம்சமும் பொருந்தியவரென்றும், ஹநுமான் வாயுவின் அம்சத்துடன் ருத்திராம்சமும் உடையவரென்றும் நூல்கள் கூறுகையால் அவை போலவே இதுவும் ஒக்குமென்ப. இங்ஙனம் கூறுவது புராணப்ரக்ரியையை அடியொற்றி யென்பர். 

 

பூருவாசாரியர்களின் திருவுள்ளத்தை ஆராய்ந்து பேசுமிடத்துப் பலபடியும் பேசலாயிருக்கும். ஆசார்யஹ்ருதயத்தில் 

 

“அத்ரி ஜமதக்நி பங்க்திரத வஸூநந்தஸுநுவானவனுடைய 

யுகவர்ணக்ரமாவதாரமோ? வ்யாஸாதிவத் ஆவேசமோ? 

மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ? முன்னம் 

நோற்ற அனந்தன் மேற் புண்ணியங்கள் பலித்தவரோ வென்று 

சங்கிப்பர்கள்.” 

 

என்றுள்ள சூர்ணிகையின் கருத்தை விவரிப்போ மிங்கு. கிருதயுகத்திலே அத்ரியும் ஜமதக்நியுமாகிற ப்ராஹ்மணோத்தமர்களுக்குப் பிள்ளையாய்க்கொண்டு தத்தாத்ரேயனும் பரசுராமனுமாய், திரேதாயுகத்திலே க்ஷத்ரியனாய் தசரத சக்ரவர்த்திக்குப் பிள்ளையாய், த்வாபரயுகத்தில் ராஜ்யப்ராப்தியில்லாத யது குலத்திற் பிறந்து க்ஷத்ரியரில் தண்ணியரும் வைச்யப்ராயருமான வஸுதேவர்க்கும் கோரக்ஷணத்தாலே லாக்ஷாத் வைச்யரான ஸ்ரீநந்தகோபர்க்கும் பின்ளையாய் ஆகவிப்படி கிருதம் முதலிய யுகங்களினடைவே ப்ராஹ்மணாதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த ஸர்வேச்வரன் நான்காவதான கலியுகத்திலே நான்காவது வருணத்திலே ஆழ்வாராக வந்து அவதரித்தபடியோ! என்றும், வேதங்களைப் பகுத்தல் முதலிய காரியங்களுக்காக வியாஸர் முதலிய மஹர்ஷிகள் பக்கலில் ஆவேசித்தது போலே தமிழ் வேதத்தை வெளியிடுதற்காக இவர் பக்கல் ஆலோசித்தபடியோ! என்றும், இவ் விபூதியைத் திருத்துகைக்காக ஈச்வர நியமநந்தாலே நித்யஸூரிகளிலொருவர் வந்தவதரித்தபடியோ!, அன்றியே , முக்தரிலே ஒருவர் வந்தவதரித்தபடியோ!, அன்றியே ச்வேதத்வீபவாஸிகளிலொருவர் வந்தவதரித்தபடியோ! வென்றும், அல்லது கீழ்ச்சொன்னவர்களொருவரு மன்றியே ஸம்ஸாரிகள் தம்மிலே ஜந்மாந்தர ஸஹஸ்ர ஸஞ்சிதமான தம்முடைய ஸுக்ருத பலமாகக்கொண்டு இங்ஙனம் திருந்தினாரொருவரோ! என்றும், அன்றியே நிர்ஹேதுகக் கடாக்ஷ விசேஷத்தாலே நித்ய ஸம்ஸாரியை நித்யஸூகல்பமாக்கவல்ல அநந்தசாயியான ஸநாதந புண்யம் முழுநோக்காகப் பலித்தபடி திருந்தினாரொருவரோ! என்று மிப்படிப்பட்ட வகைகளாலே இவரை இன்னாரென்று. நிச்சயிக்கமாட்டாமல் ஜ்ஞானிகள் சங்கிப்பார்கள் – என்றவாறு. அதன் மேலுள்ள சூர்ணிகைகளின் போக்கையும் அவற்றின் வியாக்கியான ப்ரக்ரியையையும், மற்றும் நம்பிள்ளை பெரியவாச்சான்பிள்ளை முதலானோர் அருளிச்செயல் வியாக்கியானங்களில் அருளிச்செய்யும் புடைகளையும் நோக்குமிடத்து, நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தாரொருவர் நிர்ஹேதுக பகவத்கடாக்ஷ விசேஷத்தாலே இங்ஙனே திருந்தினாரென்னுமதுவே ஸம்ப்ரதாய நிர்வாஹமாகத் தேறுகின்ற தென்று பெரியோர் பணிக்கக் கேட்டிருக்கை. ”சேமங் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ, நாமம் பராங்குசமோ நாரணமோ – தாமந், துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு முளவோ பெருமானுனக்கு” என்றிவை முதலான பல பாசுரங்கட்கிணங்க ஆழ்வாரை பகவதவதாரமென்று கொள்ளுதலும் இவரது மிக்க பெருமைக்குப் பொருந்தியதேயாகும். இது நிற்க.

 

இப்படி பகவான் அவதாரஞ்செய்தற்கு முன்னமே, அவனுக்குப் பலவாற்றாலும் அடிமை செய்வதையே உறுதொழிலாகக்கொண்ட திருவனந்தாழ்வான், இக்குமாரர்மீது வெயில் மழை முதலியன படாதிருக்குமாறு ஒரு பெரிய புளிய மரமாக வந்து அவதரித்திருந்தார். 

 

நம்பி தந்தருளின வரத்தின்படி உதித்த குமாரர் பிறந்த பொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலிய லோக வியாபாரமொன்று மின்றியும் வாட்டமில்லாது பரிபூர்ணராயிருக்கிற அதிசயத்தைக் கண்டு தாய் தந்தையர் எம்பெருமான் பக்கலிலே பாரத்தைவைத்திட்டுத் தாம் சிறிதுங் கவலைப்படாமல் பிறந்த பன்னிரண்டா நாளில் அத் திருநகரியிலுள்ள திருக்கோயிலுக்கு அக்குழந்தையை யெடுத்துக்கொண்டு போய் அங்கு எழுந்தருளியிருக்கிற பொலிந்து நின்றபிரானைச் சேவிக்கப் பண்ணுவித்து அப்பெருமாளது திருமுன்பே அந்தத் தெய்வக் குழந்தைக்கு, உலக நடைக்குமாறாக இருந்ததனால் மாறன் என்று திருநாமஞ்சாத்தி, அருகிலிருந்த திருப்புளியமரத்தினடியிலே * ஆணிப்பொன்னாற் செய்த வண்ணச் சிறுத்தொட்டிலிலே வளர்த்தி ஓம்பி வந்தார்கள். 

 

கர்ப்பத்திலிருக்கும் பொழுது ஞானமுடையனவாயிருக்கிற குழந்தைகளைப் பிறந்தவுடனே தனது ஸ்பர்சத்தால் அஜ்ஞானத்துக்கு உள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணிவிடுந் தன்மையதான சடமென்னும் வாயு இவரையும் பிறந்தபொழுது தொடுதற்குவர, அப்பொழுது இவர் அதனை உங்காரத்தால் ஒறுத்து ஓட்டி யொழித்ததனால் இவர்க்கு ‘சடகோபர்’ என்றுந் திருநாமமாயிற்று. 

 

  1. “நஞ்சடகோபனைப் பாடினையோ”வென நம்பெருமாள், விஞ்சிய வாதரத்தாற் கேட்ப” என்று பின்புள்ளாருங் கொண்டாடும்படி இவர் நம்பெருமாளால் ‘நம் ஆழ்வார்’ என்று அபிமானித்து விசேஷ கடாக்ஷஞ்செய்யப்பட்டு மற்றை யாழ்வார்களனைவரினும் உயர்வு பெற்றதனால் ‘நம்மாழ்வார்’ என்று ஒரு திருப்பெயர் பெற்றனர். 
  2. சடகோபரந்தாதி – பாயிரம் 3. 

 

இப்படிப்பட்ட ஆழ்வார் பதினாறு பிராயமளவுங் கண் விழியாமல் மௌனத்தோடு எழுந்தருளியிருக்க, அது நோக்கிய நங்கையாரும் அவர் கொழுநரும் ‘இவர், தம்மைப் போன்ற நிலையுடையாரெவரையும் உலகத்தில் காணாமையால் யாரோடும் பேசாமலிருக்கிறார்’ என்று அறியாமல் ‘எம்பெருமான் விஷயத்தில் நாம் செய்த அபராதம் ஏதேனும் உண்டோ ?’ என்று கருதிக் கலங்கியிருந்தனர். 

 

அப்பொழுது பரமபதநாதனது நியமனத்தால் சேனை முதலியார் என்கிற விஷ்வக்ஸேநர் ஏகாந்தமாக எழுந்தருளி இவருக்குத் +திருவிலச்சினை செய்து ஸகலமந்த்ரார்த்தங்களையும் உபதேசித்தருளினார். +பஞ்ச ஸம்ஸ்காரம்.

 

இப்படிப் பெற்ற இவர் பதினாறு கலைகளும் நிறைந்த சந்திரன் போலப் பதி னாறு பருவம் நிரம்பி உறங்காப்புளி நிழலிலே பத்மாஸநங்கொண்டு வீற்றிருந்து பரதத்துவத்தைத் தியானஞ்செய்து ஞான முத்திரை கைக்கொண்டிருந்த காலத்தில் திவ்யதேச யாத்திரையாகச் சென்றிருந்த மதுரகவியாழ்வார், இவரது வைபவத்தைக் கேட்டும் இவரது திவ்ய ஒளியைக் கண்டும் திருவயோத்தியி னின்று புறப்பட்டு வந்து அருகில் நின்று இவர்க்கு உணர்ச்சி உளதோ? இலதோ?’ என்று சோதிக்கும் பொருட்டு இவர் முன்னிலையிலே ஒரு சிறு கல்லை யெடுத்துப்போட அது விழுந்த வொலியைக் கேட்டவுடனே இவர் திருக்கண்களை விழித்துப் பார்த்தருளினார். உடனே மதுரகவிகள் இவர்க்கு வாக்கு உண்டோ? இன்றோ? அறிவோம்’ என்று எண்ணி இவரை நோக்கி – அசித்தாகிய சரீரத்திலே அணுவளவினதான ஆத்மா ஸம்பந்தித்தால் அது எதை அநுபவித்து எங்கு இருக்கும்?’ என்னுங் கருத்தையமைத்து, ‘செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று வினாவ, ஆழ்வார் அச்சரீரத்தைச் சார்ந்த சுகதுக்கங்களை அனுபவித்துக்கொண்டு அதனையே ஆச்ரயித்திருக்கும்’ என்ற கருத்தை யமைத்து “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று விடையருளிச் செய்தார். 

 

[சிறியதின் வயிற்றிற் பெரியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று மதுரகவிகள் வினாவியதாகவும், ”அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று ஆழ்வார் விடை யளித்ததாகவுங் கூறுவாருமுளர்; அணு ரூபமான சீவனிடத்து விபுரூபமான ஞான விகாஸ முண்டானால் எதை அனுபவ யோக்கியமாகக்கொண்டு எங்குச் சேரும்?” என்பது வினாவின் கருத்தாகவும், ‘அகாரவாச்யமான பரப்ரஹ்மத்தை அனுபவித்து அதன் பக்கலிலே பற்றும்’ என்பது விடையின் கருத்தாகவுங் கொள்ளத்தக்கது.]

 

அது கேட்டு மதுரகவிகள் மிக மகிழ்ந்து சடகோப முனிவரது ஞானத்தைக் கொண்டாடி இவரை யடைந்து தாம் கடைத்தேறக்கருதி, இவர் திருவடிகளிலே ஸாஷ்டாங்க ப்ரணாமமாகத் தாளுந் தடக்கையுங்கூப்பி விழுந்து தண்டனிட்டு இவரது இணையடித் தாமரைகளைத் தியானித்தலும் திருநாமங்களை வழுத்துதலும் செய்துகொண்டு இவரை ஆசிரயித்து அடியேனுக்குத் தத்வ ஹித புருஷார்த்தங்களை விளக்கியருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தனர்.

 

அவ்வாறிருக்கையில், ஸ்ரீவைகுண்டநாதன் ஆழ்வாரது ஞானக்கண்ணுக்குச் சேவைசாதிக்கத் திருவுள்ளங்கொண்ட வளவிலே பெரிய திருவடியும் தனது பக்ஷபாதந்தோன்ற முன்வந்து நிற்றலும் பெருமாள் பிராட்டியுடனே கருடவாஹநாரூடனாய் எழுந்தருளி எதிர்வந்து நிற்க, ++”கருமுகில் தாமரைக்காடுபூத்து நீடிரு சுடரிருபுறத்தேந்தி யேடவிழ் திருவொடும் பொலிய ஓர் செம்பொற்குன்றின்மேல் வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றிய” அம் முகில்வண்ணனது திருமேனியழகைச் சேவித்துக் கண்கள் ஆனந்தவருவி சொரிய உடம்பு உரோமாஞ்சங் கொள்ள ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தார். அநந்தரம் நூற்றெட்டுத் திருப்பதி யெம்பெருமான்களும் அங்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்க, அவர்களை ஸேவித்து அவர்களது திவ்ய குணங்களை அனுபவித்து அவ்வனுபவத்தாலுண்டான ப்ரீதி உள்ளடங்காமல் அதனைப் பிரபந்த முகமாக வெளியிடக் கருதி நான்கு வேதங்களுள் ருக்கு, யஜுஸ், ஆதர்வணம் என்ற மூன்று வேதங் களின் ஸாரப்பொருளைத் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்ற மூன்று பிரபந்தங்களின் மூலமாக வெளியிட்டு, அவ்வேதங்களுட் சிறந்ததும் பகவானது ஸ்வரூபமாகவே யுள்ளதுமான ஸாமவேதத்தின் தத்துவப்பொருளைச் சரம ப்ரபந்தமான திருவாய்மொழியால் அருளிச்செய்து அவற்றை மதுரகவிகளுக்கு உபதேசித்தருளினார். 

++கம்பராமாயணம் – திருவவதாரப் படலம் 13. 

 

அக்காலத்தில் நித்யஸுரிகளும் ச்வேதத்வீபவாஸிகளான ஸ்ரீவைஷ்ணவ ச்ரேஷ்ட்டர்களும் காரிமாறப்பிரானது மஹிமையைக் காணும் பொருட்டு முன் வந்து சேர, அவர்களைத் தமது பிரபந்தத்திலே “பொலிக பொலிக” என்று வாழ்த்தியருளினார். 

 

தம் பக்கல் திருவுள்ளமுவந்து பொலிந்து நின்ற பிரான் ப்ரஸாதித்தருளின மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர் என்றும், பிறமதஸ்தர்களாகிய யானைகளைத் தமது திவ்ய ப்ரபந்தங்களிற் கூறிய தத்துவார்த்தங்களாற் செருக்கடக்கி அவர்களுக்கு மாவெட்டி யென்னுங் கருவிபோல இருத்தலால் பராங்குசர் என்றும் திருநாமம் பெற்ற குருகைப்பிரான், பரப்ரஹ்மஸ்வரூபமும் ஜீவாத்மாவினது தன்மையும் பரமாத்மாவை அடையும் உபாயமும் அங்ஙனம் அடைதலின் பயனும் அடைதற்கு உள்ள பிரதிபந்தகமும் என்று ஸகல வேத சாஸ்திரங்களிலும் ஸாரமாகச் சொல்லப்பட்ட அர்த்தபஞ்சகத்தையும், மந்த்ர ச்ரேஷ்ட்டமான த்வயமென்னும் சரணாகதி மந்திரத்தின் அர்த்தத்தையும் பிரபந்த ரூபமாக யாவரும் எளிதில் அறியத் தெரிவித்தருளி 

  1. “தளிர்மதிச்சடையனும் நான்முகக் கடவுளும் 

தளிரொளியிமையவர் தலைவனு முதலா 

யாவகையுலகமும் யாவருமகப்பட 

நிலநீர் தீகால் சுடரிருவிசும்பும் 

மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க 

ஒருபொருட் புறப்பாடின்றி முழுவதும் 

அகப்படக்கரந்தோராலிலைச் சேர்ந்தவெம் 

பெருமா மாயனையல்லது 

ஒருமாதெய்வம் மற்றுடைய மோயாமே.” 

  1. திருவாசிரியம் – 7. 

என்று தமது ஸித்தாந்தத்தின் தத்துவத்தை நன்கு வெளியிட்டு, தமது வாழ் நாள் முழுவதிலும் பிறிதொன்றிற் சிந்தை செலுத்தாது பரமனையே சிந்தித்து பரபக்தி பரஜ்ஞான பரமபக்திகளை யுடையராய்க்கொண்டு உலக நடையாட்டம் சற்றுந் தொடரப் பெறாமல் முப்பத்தைந்து திருநக்ஷத்திரம் வாழ்ந்திருந்து, அப்பால், இமையவர் எதிர்கொள்ள, கின்னர கந்தர்வாதியர் கீதம்பாட, தேவர்கள் தோத்திரஞ்செய்ய, வைகுந்தமாநகர்புக்குத் திருமாமணி மண்டபத்தில் அந்தமில் பேரின்பத்தில் அமர்ந்தனர். 

இப்படி ஒப்புயர்வற்ற இவ்வாழ்வார் எம்பெருமானது திருவடிகளுக்கு மிகவும் அந்தரங்கராக இருந்ததனால் பெருமாளது பாதுகை “ஸ்ரீசடகோபன்” என்று இவரது திருநாமத்தையிட்டு வழங்கப்படுகின்றது. 

                                   ⇌⇌⇌⇌⇌⇌⤪⤭ ⇌⇌⇌⇌⇌⇌

 

 

நம்மாழ்வார்க்கு அந்தரங்கரான மதுரகவியாழ்வாரது வரலாறு$

பாண்டிய நாட்டிலே திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு அருகி லுள்ள திருக்கோளூரிலே, துவாபரயுகத்தில், எட்டுலக்ஷத்து அறுபத்து மூவாயிரத்து எண்ணூற்றெழுபத்தொன்பதாவதான ஈச்வர வருஷத்தில் சித்திரை மாதத்திலே சித்திரை நக்ஷத்திரத்திலே கணேசரான குமுதருடைய அம்சமும் கருடாழ்வானுடைய அம்சமுமாய் ஒருவர் அவதரித்தார். ஸூர்யோதயத்திற்கு முன் கிழக்கிற் காணப்படுகின்ற அருணோதயம்போலப் பராங்குசர் உதிப்பதற்கு முன் தென்தேசத்தில் தோன்றிய இவர், வேதசாஸ்திரங்களை இளமையிலேயே பயின்று செவிக்கினிய செஞ்சொற்கவிகளைப் பாடவல்லவராய் அதனால் மதுரகவி என்று திருநாமம் பெற்று மெய்யுணர்வினால் அவாவற்று மஹாவிரக்தராய் விஷ்ணுபக்தி விஞ்சி யோகநிஷ்ட்டையிலும் தேர்ந்து தீர்த்தயாத்திரை திவ்யதேச யாத்திரைகளிலே திருவுள்ளமுடையராய்ப் புறப்பட்டுச் சஞ்சரிக்கலுற்று வடநாட்டுத் திருப்பதிகளைச் சேவித்துக்கொண்டு திருவயோத்தியை அடைந்து அங்கு அர்ச்சாவதாரரூபமாய் எழுந்தருளி யிருக்கின்ற இராமபிரானையும் பிராட்டியையும் ஸேவித்துத் திருவடி தொழுது அந்தப் பரிசுத்த பூமியில் நித்ய வாஸஞ் செய்யக்கருதிச் சிலகாலம் வசித்திருந்தார். 

$நம்மாழ்வார் வரலாற்றோடு தொடர்ச்சியுள்ளதனால் இவ்வாழ்வார் வரலாறும் இங்குக் காட்டப்படுகிறது. 

 

அக்காலத்தில் ஒருநாளிரவில் இவர் திருக்கோளூ ரெம்பெருமானைத் திசை நோக்கித் தொழக்கருதித் தெற்குத்திக்கில் கண்செலுத்தியபொழுது. அப்பக்கத்திலே வானுற வளர்ந்து விளங்குகின்றதொரு திவ்யமான பேரொளியைக் கண்ணுற்று அது இன்னதென்றறியாமல் கிராமநகரங்கள் வேகின்றனவோ? காட்டுத் தீயோ? என்று சங்கித்துத் திகைத்து நின்றார். நின்றவர், இங்ஙனமே அடுத்த இரண்டு மூன்று நாள்களிலுங்கண்டு, அச்சுடர்த்திரள் முச்சுடரொளியினும் மிக்கு விளங்கியதனால் வெகுவியப்புற்று, அதனை அருகிற்சென்று பார்த்துத் தெளியத் துணிந்து புறப்பட்டு, அச்சோதியையே குறியாகக்கொண்டு அதிவிரைவாக நெடுவழிகடந்து, நடந்துவந்து ஆழ்வார் திருநகரியை அடைந்து அகில் அவதரித்தருளியுள்ள சடகோபமுனிவரது திருமேனி விளக்கத்தைச் சேவித்து இதுவே அத்தனை நெடுந்தூரம் பிரகாசித்ததென்று அறிந்து வியந்து, அவ்வாழ்வாரது நிலைமையை முன்பு தாம் கேள்வியுற்றிருந்தபடியே அப்ராக்ருத மாயிருக்கக்கண்டு, அவர்க்குக்கட்புலனும் வாய்ப்புலனும் உள்ளனவா வென்பதைச் சில உபாயங்களால் பரிசோதிப்பவரானார். அப்பொழுது காரிமாறப்பிரான் கண் திறந்து காக்ஷித்து, இவர் கேட்ட கேள்விக்கு ஏற்ற விடை சொல்லியருள, அதுகேட்டு மதுரகவியாழ்வார் அவரது ஞானவைபவத்துக்கு அதிசயித்து ஈடுபட்டு அவரையே ஆசாரியராகக்கொண்டு சரணம் புகுந்தனர்.

 

அப்பொழுது நம்மாழ்வார் பஞ்சஸம்ஸ்காரம் ப்ரஸாதித்து இவரை ஆட்கொண்டு, பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் என்னும் நான்குநிலைகளுக்கு முறையே வேதம் பாஞ்சராத்ரம் இதிஹாஸம் ஸ்மிருதி என்பன போல அர்ச்சாவதாரத்திற்கு ஏற்ற துதிவடிவமான தமிழ் நூல்களை அருளிச்செய்யத் தொடங்கி, சதுர்வேதத்தின் ஸாரமாக நான்கு திவ்யப்ரபந்தங்களை அருளிச்செய்து, அவற்றை அம்மதுரகவிக்கு உபதேசித்தருளினர். 

 

‘முந்தின மூன்று யுகங்களில் த்யாந யாக அர்ச்சநங்களால் போலக் கடை யுகத்தில் தோத்திரமாத்திரத்தால் உயர்கதி உளதாம்’ என்று நூற்கொள்கைக்கு ஏற்ப மதுரகவிகள் தாம் உபதேசம் பெற்ற திவ்யப்ரபந்தங்களைக் கைத்தாள மெடுத்துப் பண்ணிசையோடு எப்பொழுதும் பாராயணஞ்செய்து கொண்டு திருக்குருகூர் நகர் நம்பிக்கு ப்ரதாந சிஷ்யராய், பரதாழ்வானுக்கே பணிவிடை புரிந்தொழுகின சத்ருக்நாழ்வானைப் போலப் பகவத்பக்தியினும் பாகவதப்ரதிபத்தியையே பரமாநுஷ்டாநமாகத் தலைக்கொண்டு அவ்வாழ்வார் விஷயமாக ‘கண்ணிநுண்சிறுத்தாம்பு’ என்ற திவ்யப்ரபந்தத்தைப் பாடி முமுக்ஷக்களுக்கு உபகரித்தருளி வாழ்ந்திருக்கையில், தேவிற்சிறந்த திருமாற்குத்தக்க தெய்வக் கவிஞரும் பாவிற்சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதருமான காரிமாறர் திரு நாட்டை அலங்கரித்தார்.

 

அப்பால், ஆசிரியரைப் பிரிந்ததற்கு மிக இரங்கி அரிதில் தேறிய மதுர கவிகள் அர்ச்சாரூபமான ஆழ்வார் விக்ரஹத்தை அத்திருக்கரியில் ஏறியருளப் பண்ணிப் பிரதிஷ்டிப்பித்து அவர்க்கு நித்யநைமித்திக உத்ஸவங்களையெல்லாம் சிறப்புற நடத்திக்கொண்டுவந்தார். அத்திருவிழாக்களில் ‘வேதந்தமிழ் செய்த மாறர் வந்தார்; திருமாலுக்குரிய தெய்வப்புலவர் வந்தார்; அளவிலாஞானத்து ஆரியர் வந்தார்!’ என்று இவை முதலாக அனேக விருதுகளைக்கூறித் திருச்சின்னம் முழங்குதலைக் கேள்வியுற்றவளவிலே, மதுரைச்சங்கத்தாரது தூண்டுதலால் அவர்கள் மாணாக்கர்கள் வந்து எதிரிட்டு உங்களழ்வார் பக்தரேயன்றிப் பகவானல்லரே; இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்றே; இவரை வேதந்தமிழ் செய்தவரென்று சிலாகிப்பது தகுதியோ என்று பல குதர்க்கம் பேசி விருதுகளைத் தடுத்திட்டனர். அதற்கு மதுர கவிகள் மனம் பொறாமல் வருந்தி ‘இவர்கட்குக் கர்வபங்கமாம்படி தேவரீர் செய்தருளவேண்டு மென்று ஆழ்வாரையே பிரார்த்திக்க, சடகோபர் ஒரு கிழப்பிராமணவடிவத்தோடு வந்து, திருவாய்மொழியில் ”கண்ணன் கழலிணை நண்னும் மனமுடையீர்! எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே” என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டுபோய்ச் சங்கப் பலகையில் வைத்திட்டால் அவர்கள் செருக்கு அடங்கும்’ என்று கூறியருளினார். அந்த நியமனத்தின்படியே சடகோபபக்தர் கண்ணன் கழலிணையை எழுதிய ஏட்டை எடுத்துப்போய் வைத்திட்ட மாத்திரத்தில், சங்கப் புலவர்கள் ஏறியிருந்த பலகை பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கித் தன் மேலிருந்த புலவர்களை யெல்லாம் நீரில் வீழ்த்தி உடனேமேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக்கொண்டு மிதந்தது. அப்பொழுது நீரில் விழுந்து அமிழ்ந்து தடுமாறி யெழுந்து மெல்ல நீந்திக் கரைசேர்ந்த சங்கப் புலவர்கள், ஸகல வேத சாஸ்திரங்களையும் பிறராற் கற்பிக்கப்படாமல் தாமே யுணர்ந்து பகவதம்சமாகிய ஆழ்வாருடைய தைவிகமான பாண்டித்யத்தைத் தெரிந்து கொண்டு இறுமாப்பொழிந்து, தாம் முன்பு அபசாரப்பட்டதற்கு அநுதாபமுற்று, அதனை  க்ஷமித்தற்பொருட்டு அவரது மஹிமையைக் குறித்துத் தோத்திரமாகத் தனித் தனி * ஒவ்வொரு பாடல் பாடி வெளியிடுபவரானார்கள். அங்ஙனம் வெளியிடுகையில், அப்பாடல்கள் யாவும், 

”சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ 

நாமம் பராங்குசமோ நாரணமோ – தாமந் 

துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு 

முளவோ பெருமா னுனக்கு.” 

என்ற இப்பாடல் வடிவாகச் சிறிதும் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டிருக்க, இதுபற்றி அவர்களனைவரும் இது என்ன அற்புதம்! என்ன அற்புதம்!! இதுவும் ஆழ்வாரது தெய்வத்திருவருளே!!!’ என்று அதிசயப்பட்டு, 

 

“ஈயாவேதோ கருடற்கெதிரே இரவிக்கெதிர் மின்மினியாடுவதோ? நாயாவேதோ உறுமிப்புலிமுன் நரிகேசரிமுன் நடையாடுவதோ ? பேயாடுவதோ அழகூர்வசிமுன் பெருமான் வகுளாபரணன் னருள்கூர்ந் 

தோவாதுரையா யிரமாமறையின்னொரு சொற்பொருமோவுலகிற்கவியே” 

 

என்பது முதலாகச் சிற்சில கவிகள் பாடிப் புகழ்ந்து அன்று முதல் ஆழ்வார்க்கு விருது கூறல் முதலிய ஸகலவிபவங்களையும் முன்னிலும் பலமடங்கு மிகுதியாக நடப்பித்து வந்தனர். 

இப்படி மதுரகவியாழ்வார் தமது ஆசாரியருடைய பெருமைகளை வெளியிட்டுக்கொண்டு அத்தலத்திலே சிலகாலம் எழுந்தருளியிருந்து, பின்பு, சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைத்தான பேரின்பப் பெருவீட்டை அடைந்தனர். 

 

இங்ஙனம் இவ்வாழ்வார் நம்மாழ்வாருக்குத் திருவடித்தொண்டராயொழுகியது பற்றி, அவரது திருவடிநிலை மதுரகவிகள் என இவரது திருநாமத்தை யிட்டு வழங்கலாகும். 

[“மாறனடிபணிந்துய்ந்தவிராமாநுசன்” என்பதற்கிணங்க, நம்மாழ்வார் திருவடிநிலைகளுக்கு இராமாநுசன் என்று பல திவ்யதேசங்களில் வழங்கும் திருநாமமும் பெருத்தமுடையதே.] 

 

“ஏரார் மதுரகலி யிவ்வுலகில் வந்துதித்த 

சீராருஞ் சித்திரையில் சித்திரைநாள் — பாருலகில் 

மற்றுள்ள வாழ்வார்கள் வந்துதித்த நாட்களிலும்

உற்றதெமக்கென்று நெஞ்சே ஓர்” 

 

மதுரகவியாழ்வார் வைபவம் முற்றிற்று. 

 

⇌⇌⇌⇌⇌⇌⤪⤭ ⇌⇌⇌⇌⇌⇌

ஆழ்வார் திருவடிகளே சரணம். 

திருவாய்மொழித் தனியன்கள். 

 

(ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது.) 

 

பக்தாம்ருதம் விச்வஜநாது மோதநம் 

ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம். ஸஹஸ்ரசாகோபநிஷத்ஸமாகமம் 

நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம். 

 

பதவுரை. 

 

பக்த அம்ருதம்

தொண்டர்கட்கு அமுதமா யிருப்பதும்

விச்வ ஜந அநுமோதநம்

ஸகல ஜனங்களையும் ஆனந்திக்கச் செய்வதும்

ஸர்வ அர்த்ததம்

ஸமஸ்த புருஷார்த்தங்க்களையும் அளிக்கவல்லதும்

ஸஹஸ்ர சாக உபநிஷத் ஸமாகமம் 

(ஆயிரக்கணக்கான சாகைகளை யுடைய உபநிஷத்த்துக்களின் திரட்சி 

யாயிருப்பதும் 

ஸ்ரீசடகோப வாங்மயம்

நம்மாழ்வாருடைய ஸ்ரீஸூக்தி மயமுமான

தராவிட 

வேத ஸாகரம்

தமிழ் வேதக் 

கடலை 

அஹம் 

அடியேன்

நமாமி

ஸேவிக்கிறேன்

 

***- திருவாய்மொழி ஒரு கடலாக ரூபணம் செய்யப்படுகின்றது. கடலுக்குள்ள தன்மையடங்கலும் திருவாய்மொழிக்குமுண்டென்று ஐந்து விசேஷணங்களினால் நிரூபிக்கப்படுகின்றது. [பக்தாம்ருதம்.] உலகிற்காணும் கடலானது பண்டொருகால் * வங்கக் கடல் கடைந்த மாதவனாலே கடையப்பட்டுத் தேவர்கட்கு அமுதமளித்தது ஆகையாலே பக்தர்களான தேவர்கட்கு அது அமுதமாயிருந்தது; திருவாய்மொழியோ வென்னில்; ”தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்றும் ”பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம்” என்றும் ஆழ்வார் தாமே அருளிச்செய்தபடியே அநந்ய ப்ரயோஜார்களான பாகவதர்கட்கு நித்ய போக்யமான அமுதமாயிருக்கும். “வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே” என்கிறபடியே திருவாய்மொழியைப் பாடுமவர்களே வானோர்க்கு ஆராவமுதமாகும் போது அந்தத் திருவாய்மொழி ஆராவமுதமாகச் சொல்லவேணுமோ? 

 

[விச்வஜந அநுமோதநம்] கடலைக் கண்டு களியாத ஜனங்களில்லை. யார் எத்தனை தடவை கண்டாலும், ஆராதே அபூர்வ வஸ்துவாகி லந்தோஷஜநகமாயிருக்கும் கடல்; திருவாய்மொழி தானும் அப்படியே காணும். “என் நாவிலின் கவி” என்றும் “பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம்” என்றும் ”தூமுதல் பத்தர்க்கு” என்றும் “கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ் சொல்லே” என்றும் “தென்னாவென்னு மென்னம்மான் திருமாலிருஞ் சோலை யானே” என்றும் “பார்பரவின் கவி” என்றும் சொல்லுகிறபடியே ஆழ்வாரோடு மற்றையாரோடு வாசியறவும் நித்யஸுரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியறவும் வர்வேச்வரனோடு தச்சேஷபூதர்களோடு வாசியறவும் எம்பெருமானோடேகூட உபய விபூதியும் புஜிக்கைக்கு உரியதாகையாலே ***னான எம்பெருமானுக்கும் மற்றுமுள்ள ஜனங்களுக்கும் அதுமோதநமா யிருக்கும்.

 

[ஸர்வார்த்ததம்] கடல் ரத்நாகரமாகையாலே சிறந்த பொருள்களை யெல்லாம் தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருந்து தன்னிலே அவகாஹித்து எடுத்தாள வல்லவர்கட்குத் தந்து உபகரிக்கும். திருவாய்மொழி தானும் ஸகல புருஷார்த்தங்களையுமளிக்கும். குருகூர்ச்சடகோபன் சொன்ன பாடலோராயிரத்துள் இவையு மொருபத்தும் பயிற்ற வல்லார்கட்கு, அவன் நாடு நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி, வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்குத் தரு மொரு நாயகமே” என்கிறபடியே திருவாய்மொழி அளிக்கமாட்டாத புருஷார்த்தமில்லை யென்க. “மிக்க வேதியர் வேதத்தினுட்பொருள் நிற்கப்பாடி” என்கிறபடியே முமுக்ஷக்களுக்கு அவசியமறியவேண்டிய வேதாந்த நுட்பொருள்களை யெல்லாம் சுரக்கும்படியைச் சொல்லுகிறதாகவுமாம். 

[ஸ்ரீசடகோபவாங்மயம்] கடலானது ஒருகால் அகஸ்திய மஹாமுனியின் வாயில் நுழைந்து புறப்பட்டதாகையாலே அது அகஸ்த்ய வாங்மயமா யிருக்கும். திருவாய்மொழி குருகூர்ச் சடகோபன் சொல்மாலையாயிருக்கும். ‘ஆழ்வாரருளிச்செயல்’ என்னுமத்தனையே ஏற்றத்திற்கு உடலென்க. *காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று தவஞ்செய்த ரிஷிகளிற்காட்டில் * உண்ணுஞ் சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணனெம்பெருமானென்றே கண்கள் நீர்மல்கிக் கிடந்த ஆழ்வார்க்கு நெடுவாசியுண்டே. 

 

[ஹைஸ்ரசாகோபநிஷத்ஸமாகமம்.]* தொக்கிலங்கியாறெல்லாம் பரந்தோடித்தொடுகடலே புக்கன்றிப் புறம் நிற்கமாட்டாதாகையாலே நதிகள் கடலிலே புகும்போது பலபல மரங்களையும் அடித்துக்கொண்டு போய்ப் புகுமாகையாலே கடலானது ஆயிரக்கணக்கான சாகைகளின் கிளைகளின் சேர்க்கையைப் பெற்றிருக்கும். திருவாய்மொழியோவென்னில், சஹஸ்ரசாகைகளை யுடைத்தான உபநிஷத்துண்டு – ஸாமவேத ஸாரமான சாந்தோக்ய உபநிஷத்து. அத்தோடே ஸமமான ஆகம [வேத]மாக இருக்கும். அனேக சாகைகளையுடையனவான உபநிஷத்துக்களெல்லாம் திரண்ட திரட்சியாயிருக்கும் திருவாய்மொழி என்னவுமாம். ஆக இப்படிப்பட்ட பொருத்தங்களாலும் உள்ளாழமறியக் கூடாமையினாலும் கடல் என்று சொல்லத் தகுந்ததான தமிழ் வேதத்தை நமஸ்கரிக்கிறேனென்றதாயிற்று. 

 

திராவிட வேதஸாகரத்தை அவகாஹிக்கிறேன் என்னாமல், நமஸ்கரிக்கிறேன் என்றது – “வந்தே ராமாயணார்ணவம்” [ஸ்ரீராமாயணமாகிற ஸமுத்ரத்தை நமஸ்கரிக்கிறேன்] என்று சொன்னதை அடியொற்றி யென்பர். *** = ச்லோக ஜால ஜலாகீர்ணம் ஸர்க்க கல்லோல ஸங்குலம் – காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயணார்ணவம்” என்றது காண்க. ச்லோகங்களாகிற ஜலம் நிரம்பியும், ஸர்க்கங்களாகிற அலைகள் நிறைந்தும், காண்டங்களாகிற முதலைகளும் பெருமீன்களும் மலிந்து மிருக்கின்ற ஸ்ரீராமாயண ஸமுத்ரத்தை நமஸ்கரிக்கிறே னென்றது. அது இருபத்தினாலாயிரம் சலோகமாயிருக்கும். இது தீர்த்தங்களாயிரமான *சீர்த்தொடையாயிரமாயிருக்கும். அதில் ஐந்நூறு ஸர்க்கமாயிருக்கும்; இது பத்து நூறாயிருக்கும். அது ஆறு காண்டமாயிருக்கும்; இது ஷட்பதத்தின் (த்வயத்தின்) அர்த்தத்தைப் பேசுகின்ற பத்துப் பத்தாயிருக்கும். அது ராமாயணார்ணவம், இது த்ராவிட வேதஸாகரம். அது ரகுவம்ச சரிதம்; இது முகில்வண்ணனடி மேற்சொன்ன சொல்மாலை அது வால்மீகிமஹர்ஷிப்ரோக்தம் ; இது ஸ்ரீசடகோப மஹர்ஷி ஸாக்ஷாத்க்ருதம். அது மஹாபாதக நாசகம்; இதுவும் * அருவினை நீறுசெய்யும். “***”’ என்கிறபடியே மோக்ஷப்ராபகமா யிருக்கும்; இதுவும் “வானின்மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத்தினையே” என்று திருவடியேயடைவிக்கும். … … … ….. …. …. (*) 

 

ஈச்வரமுனிகளருளிச்செய்த தனியன். 

 

திருவழுதி நாடென்றுந் தென்குரு கூரென்றும் 

மருவினிய வண்பொருக லென்றும் – அருமறைகள் 

அந்தாதி செய்தா னடியிணையே யெப்பொழுதும் 

சிந்தியாய் நெஞ்சே தெளிந்து. 

பதவுரை: 
நெஞ்சே

மனமே!

திருவழுதி நாடு என்றும்

திருவழுதி நாடென்கிற தேசத்தை

அனுசந்தித்தும்

மருவ இனிய வண் பொருநல் 

என்றும்

ஆசைப்படும்படி போக்யமாய்

அழகியதான 

தாமிரபரணியாற்றை 

அனுசந்தித்தும் 

அரு மறைகள் 

அருமையான வேதங்களை 

அந்தாதி செய்தான்

அந்தாதித் தொடையான திருவாய்மொழி முகத்தாலே பாடின ஆழ்வாருடைய 

அடி இணையே

உபய பாதங்களையே

எப்பொழுதும்

இடைவிடாமல்

தெளிந்து

தெளிவுடனே

சிந்தியாய்

சிந்தை செய்யக்கடவை.

 

*** — ஆழ்வாருடைய திருவடிகளை அநுஸந்திக்கும்போது அவரது திருவவதார ஸ்தலமான திருநகரியையும், அது இருக்கும் நாடாகிய வழுதிவளநாட்டையும், அந்நாட்டுக்கு அலங்காரமாய் ஆழ்வார்க்குப் புராண நிரூபகமுமான தாமிரபரணீ திவ்ய நதியையும் அநுஸந்தித்துப் பின்பு ‘ஆழ்வார் திருவடிகளே சரணம்’ என்ன வேணுமென்கிறது. இதனால் உத்தேச்ய வஸ்துவின் ஸம்பந்த ஸம்பந்தம் பெற்ற வஸ்துக்களும் உத்தேச்யம் என்கிற சாஸ்த்ரார்த்தம் வெளியிடப்பட்டதாகும். எம்பெருமான் சேவடியை அநுஸந்திக்குமவர்கள் – வைகுந்த வானாட்டையும் * இறந்தால் தங்குமூரான கண்ணன் விண்ணூரையும் *அமுத விரசையாற்றையும் அநுஸந்திக்குமாபோலே. 

”வாய்ந்த வழுதிவளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன்” என்றும் நல்லார் நவில் குருகூர் நகரான்’ என்றும் பொருநற் செங்கணி துறைவன்” என்றும் நாட்டையும் ஊரையும் ஆற்றையும் தமக்கு நிருபகமாக ஆழ்வார் தாமே அருளிச் செய்திருக்கையாலே அம் மூன்றையும் அநுஸந்திக்கச் சொல்லிற்று. 

தெளிந்து = ஆழ்வார் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்கிற தெளிந்த அத்ய வஸாயங்கொண்டு என்றபடி. ….. .. … …… (*) 

 

சொட்டை நம்பிகளருளிச்செய்த தனியன். 

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 

இனத்தாரை யல்லா திறைஞ்சேன் – தனத்தாலும் 

ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் 

பாதங்கள் யாமுடைய பற்று. 

பதவுரை. 

மனத்தாலும்

நெஞ்சினாலும்

வாயாலும்

வாக்கினாலும்

வண் குருகூர் பேணும்

திருநகரியை ஆதரிக்கின்ற

இனத்தாரை அல்லாது 

கோஷ்டியில் சேர்ந்தவர்களைத்தவிர 

(மற்றையோர்களை)

இறைஞ்சேன் 

வணங்கமாட்டேன்; 

தனத்தாலும்

செல்வத்தினாலும்

ஏதும் குறைவு இலேன் –

எவ்விதமான 

குறையுமுடையேனல்லேன்; 

(எதனாலென்னில் )

எந்தை சடகோபன்

அஸ்மத் ஸ்வாமியான நம்மாழ்வாருடைய

பாதங்கள்

திருவடிகள்

யாமுடைய

நம்முடைய

பற்று 

ஆதாரமாயிராநின்றது. 

***– ஆழ்வார் திருநகரியையே போற்றிக்கொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியில் அந்வயித்த மஹான்களைத்தவிர மற்று எவரையும் வணங்கமாட்டேனென்றது, எப்போதும் அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ சிகாமணிகளையே வணங்குவே னென்றபடி. 

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணுகையாவது – ‘திருக்குருகூ ரதனை உளங்கொள் ஞானத்து வைம்மின்’ என்றும் திருக்குருகூரதனைப் பாடி யாடிப் பரவிச்சென்மின்கள்” என்றும் ஆழ்வார் உபதேசித்தருளினபடியே திருக்குருகூரை நெஞ்சாலே சிந்தித்தும் வாயாலே சொல்லியும் போருகை. மனமொழிகளிரண்டைச் சொன்னது மூன்றாவதான சரீரத்திற்கும் உபலக்ஷணம் என்று சிலர் கொள்வர். திருநகரியைச் சென்றடைதல் மெய்யினால் பேணுதலாகும். திருக்குருகூரை நெஞ்சினால் நினைந்து வாயினால் மொழிதலே போதும், சென்று சேவிக்க வேணுமென்னும் நிர்ப்பந்தமில்லை என்பது இத்தனியனருளிச் செய்தவரின் திருவுள்ளமென்ப. ”பேணுமினத்தாரை” என்றது, பேணுகிறவர்களின் ஜாதியைச் சேர்ந்தவர்களெல்லாரையும் குறிக்கும். 

 

ஆழ்வார் திருவடிகளே தமக்குத் தஞ்சமென்றும் அவையே தமக்கு வைத்தமாநிதி யென்றும் பின்னடிகளிற் சொல்லுகிறது. ஆழ்வார் திருவடிகளை ஆச்சயிக்கப்பெற்ற நமக்கு இனியொரு குறையுமில்லை யென்கிறார். எம்பெருமானை ஆச்ரயித்தவர்கள் “***” – தநம் மதீயம் தவ பாதபங்கஜம்” என்று அவனது திருவடிகளையே தமக்குச் செல்வமாக நினைத்திருப்பது போல, ஆழ்வாரை ஆச்ரயித்தவர்கள்”  “***” – விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வ யாநாம்” என்று ஆழ்வார் திருவடிகளையே ஸகலைச்வர்யமாக நினைத்திருப்பராகையாலே . தனத்தாலு மேதுங் குறைவிலேன்” என்றது 

ধনম্ என்னும் வடசொல் தனமெனத் திரிந்தது. எந்தை – என் தந்தை 

முன்னடியில் இறைஞ்சேன் என்று ஒருமையாகச் சொல்லிப் பின்னடியில் யாமுடைய என்று பன்மையாகச் சொன்னது, இயல்புபற்றிய தனித்தன்மைப் பன்மை; ஸ்வஸம்பந்திகளையுங் கூட்டிக்கொண்டு பேசுகிறா ரென்னவுமாம் ……) 

 

அநந்தாழ்வானருளிச்செய்த தனியன். 

 

ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமாநுச முனிதன் 

வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் – ஆய்ந்தபெருஞ் 

சீரார் சடகோபன் செந்தமிழ்வே தந்தரிக்கும் 

பேராத வுள்ளம் பெற. 

 

பதவுரை. 

 

ஏய்ந்த

          குற்றங் கலசாத

பெருசீர்

சிறந்த திருக்குணங்களினால்

ஆய்

பரிபூர்ணரான

சடகோபன்

நம்மாழ்வார் அருளிச் செய்த

செந்தமிழ் வேதம்

செவ்விய தமிழ் வேதத்தை 

தரிக்கும்

தாங்கிக்கொள்ள வல்லதாய்

பேராத

வேறொன்றில் செல்லமாட்டாததான 

உள்ளம்

நெஞ்சை

பெற 

பெறும் பொருட்டு,

ஏய்ந்த பெரு கீர்த்தி இராமானநுச முனி தன்

தகுதியான பெரும் புகழையுடைய எம்பெருமானாரது  

வாய்ந்த பாதம் மலர்

பொருத்தமான திருவடித்தாமரைகளை 

வணங்குகின்றேன்

வணங்குகின்றேன்

 

***– மேல் தனியனில் ‘தமிழ் மறைகளாயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன்” என்னப்படுதலால் திருவாய்மொழியை வளர்த்தவரான எம்பெருமானாருடைய திருவருளின்றித் திருவாய்மொழியை மனப்பாடமாகத் தரிக்கவல்ல சக்தி வாய்க்கமாட்டாதாத லால், செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராதவுள்ளம் பெறுதற்காக இராமாநுசனது மலர்ப்பாதம் வணங்குகின்றே னென்கிறது இதில். 

 

எம்பெருமானார் தாம் *மாறனடிபணிந்துய்ந்த விராமாநுசனாய்* மாறன் பணித்த மறையுணர்ந்தோனாய் தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத் தன்பத்தியென்னும் வீட்டின் கண்வைத்த விராமாநுசனாய்* பண்டரு மாறன் பசுந்தமிழானந்தம் பாய்மதமாய் விண்டிடும் வேழமாய் திருவாய்மொழியின் மணந்தரு மின்னிசை மன்னு மிடந்தொறும் புகுந்து நிற்குங் குணந்திகழ் கொண்டலாய்* உறுபெருஞ் செல்வமுந் தந்தையுந் தாயும் உயர்குருவும் வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங்கியசீர் நெறிதருச் செந் தமிழாரணமே யென்றிருப்பாராய் (நூற்றந்தாதியில்) ப்ரஸித்தராகையாலே, திருவாய்மொழியைத் தரிக்கும் நெஞ்சு பெறுதற்கு அவரைப் பிரார்த்தித்தல் பொருந்துமென்க. இப்படிப்பட்ட அந்தரங்க பக்தராகையாலன்றோ ஆழ்வாரது திருவடி நிலைக்கு இராமாநுசன் என்றே திருநாமம் வழங்கிவருவது லம்ப்ரதாயமாயிற்று. 

 

“எங்கள் கதியே யிராமாநுசமுனியே, சங்கைகெடுத்தாண்ட தவராசா, பொங்குபுகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரமனைத்தும், தங்குமனம் நீயெனக்குத்தா” என்ற பெரிய திருமொழித் தனியனையும் இங்கு ஸ்மரிப்பது …… (*) 

 

பட்டர் அருளிச்செய்த தனியன். 

வான் திகழஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 

ஆன்ற தமிழ்மறைக ளாயிரமும் – ஈன்ற 

முதற்றாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த 

இதத்தா யிராமா னுசன்.

 

பதவுரை

 

வான் திகழும் சோலை

ஆகாசத்தளவும் ஓங்கி விளங்குகின்ற சோலைகளையும்

மதிள்

ஸப்த ப்ராகாரங்களையும் 

உடைத்தான

அரங்கர் 

திருவரங்கத்தில் பள்ளி 

கொண்ட எம்பெருமானுடைய 

வண் புகழ் மேல் ஆன்ற

திருக்கல்யாண குண விஷயமாக அமைந்த

தமிழ் மறைகள் ஆயிரமும்

தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்க்களையும்

ஈன்ற முதல் தாய்

பெற்ற முக்கியமான மாதா

சடகோபன்

நம்மாழ்வார்;

மொய்ம்பால்

மிடுக்குடனே

வளர்த்த 

அதனை வளர்த்த

இதம் தாய்

ஹிதமான மாதா

இராமானுசன்

எம்பெருமானாராவார்.
***— கீழ்த் தனியனிலே ”செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராதவுள்ளம் பெற – இராம நுசமுனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்” என்று பேசும்படி எம்பெருமானார்க்கும் திருவாய்மொழிக்குமுள்ள தொடர்பை வெளியிடுவது இப்பாசுரம்.. உலகத்தில் பிரஜைகளுக்குப் பெற்றதாய் என்றும் வளர்த்ததாய் என்றும் இரண்டு தாய்மார் ஏற்படுவது போல் திருவாய்மொழியாகிற ப்ரஜைக்கும் இரண்டு தாய்மாருண்டு; அவர்களாகிறார் நம்மாழ்வாரும் எம்பெருமானாரும். ஆழ்வார் பெற்றருளினர்; எம்பெருமானார் போஷித்தருளினார். கண்ணபிரானுக்கு தேவகிப்பிராட்டியும் யசோதைப்பிராட்டியும் போலே. 

 

ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப்போனால் வளர்க்குந்தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமாபோலே எம்பெருமானார் திருவாய்மொழியைக் காத்தருளினவாறு என்னென்னில்; “பிள்ளான் நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, தெள்ளார் வடக்குத் திருவீதிப்பிள்ளை, மணவாளயோகி திருவாய்மொழியைக்காத்த, குணவாளரென்று நெஞ்சே கூறு” என்று உபதேசரத்தினமாலையில் மணவாள மாமுனிகள் அருளிச்செய்தபடியே திருவாய்மொழியைக்காத்த ஆசிரியர் ஐவருள் முதல்வரான திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கொண்டு ஆறாயிரப்படி வியாக்கியான மிடுவித்தது எம்பெருமானாரன்றோ. (‘தெள்ளாரும் ஞானக் திருக்குருருகைப்பிரான் பிள்ளான் எதிராசர் பேரருளால் – உள்ளாரும், அன்புடனே மாறன் மறைப்பொருளை யன்றுரைத்தது, இன்பமிகுமாறாயிரம்” என்ற உபதேசத்தினமாலை காண்க) முதன்முதலாகத் திருவாய்மொழியை வளர்த்தவர் எம்பெருமானாரேயென்க, ”பாஷ்யகாரர் இதுகொண்டு ஸுத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர்” என்றது முதலான ஆசார்யஹ்ருதய ஸூக்திப்படியே திருவாய்மொழியை படியொற்றியே எம்பெருமானார் தர்சநத்தின் மஹார்த்தங்கள் யோ -ஜிக்கப்பட்டிருத்தல் முதலான காரண விசேஷங்களும் இங்கு அனுசந்திக்க வுரியன. 

 

திருவாய்மொழியில் ”கங்குலும் பகலும்” என்ற ஒரு திருவாய்மொழி தவிர மற்று ஒரு பாசுரத்திலும் திருவரங்கநாதனுடைய ப்ரஸ்தாவமே இல்லையாயிருக்க “மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும்” என்று திருவாய்மொழி ஆயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக அருளிச்செய்யப்பட்டதாகப் பேசுகைக்கு அடியென்? என்னில்; நம் பூருவாசாரியர்களனைவரும் நிர்வஹிப்பது இப்படியே; ஆழ்வார் திருவரங்கநாதனுக்கென்றே திருவாய் மொழியாயிரத்தையும் ஸங்கல்பித்து அதிலிருந்து மற்றைத் திருப்பதி யெம்பெருமான்களுக்குப் படியளந்தார் என்றாய்த்து பட்டர் அருளிச்செய்யும்படி, ‘திரு வேங்கடத்துக்கிவைபத்தும்” “வண் திருமோகூர்க்கு ஈத்தபத்திவை” என்றாற்போன்ற சொற்போக்கில் இந்த நிர்வாஹம் ஸ்வரஸமாக விளங்குமென்ப. 

ஈற்றடியில், ஹிதம் என்னும் வடசொல் இதம் எனத் திரிந்தது……. (*) 

 

(இதுவும் பட்டரருளிச்செய்த தனியன்.) 

மிக்க விறைநிலையும் மெய்யா முயிர்நிலையும் 

தக்க நெறியுந் தடையாகித் – தொக்கியலும் 

ஊழ்வினையும் வாழ்வினையு மோதுங் குருகையர்கோன் 

யாழினிசை வேதத்தியல் குருகையர் கோன்

திருநகரியிலுள்ளார்க்குத் 

தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த

யாழின் இசை வேதத்து இயல்

வீணாகானம்போன்ற திருவாய்மொழிப் பாசுரங்க்கள்

மிக்க இறை நிலையும்

ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானுடைய ஸ்வரூபாத்தையும்

மெய்யாம் உயிர் நிலையும்

நித்யனான ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்

தக்க நெறியும்

ஸ்வாநுரூபமான உபாயத்தின் ஸ்வரூபத்தையும்

தடை ஆகி தொக்கு இயலும் ஊழ் வினையும்

(பகவத்ப்ரப்த்திக்கு) பிரபந்தகமாகிச் சேர்ந்துகிடக்கிற முன்னை வினைகளாகிற விரோதி ஸ்வரூபத்தையும்

வாழ்வினையும்

வாழ்வாகிற பரம புருஷார்த்த ஸ்வரூபத்தையும்

ஓதும்

கூறுவன.

 

 

***– திருவாய்மொழியிற் சொல்லுகிற அர்த்தங்கள் இன்னவையென்கிறது இதில், திருமந்திரத்திற் சொல்லுகிற அர்த்தமே திருவாய்மொழியிற் சொல்லப்படுகின்றன: அதாவது அர்த்தபஞ்சகம். ”வாவவவற ணொ ரவ. வாவா ஆதமாக நாலு வாய. வல. ஞாவெ தயா வாவிவிரொயிவ வடிணி லகனாவெஷாஹெதி****.” என்று சொல்லப்பட்ட ஐந்து அர்த்தங்களே ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ப்ரமேயமாயிருக்கும். அந்த அர்த்தங்கள் இத் தனியனில் அடைவே சொல்லப்படுகின்றன. சேதனர்களால் அடையப்படவேண்டியவனான எம்பெருமானுடைய ஸ்வரூபம், அவ்வெம்பெருமானை அடைகின்ற சேதநர்களின் ஸ்வரூபம், அடைவிக்கின்ற வழியின் ஸ்வரூபம், அடையவொட்டாமல் தடை செய்யுமதான ப்ரதிபந்தகத்தின் ஸ்வரூபம், பிரதிபந்தகம் தொலைந்து பெறக்கடவதான பலத் 

ப்ரதியச்தகத்தின் ஸ்வரூபம், பிரதிபந்தகம் தொலைந்து பெறக்கடவதான பலத்தின் ஸ்வரூபம் – என்பதே அர்த்தபஞ்சகமாகும். 

 

எம்பெருமானே ஸர்வஸ்மாத்பரன், ஜீவாத்மா அவ்வெம்பெருமான் பக்கலில் சேஷத்வத்தையே தனக்கு நிரூபகமாகவுடையனாயிருப்பன், சரணாகதியே எம்பெருமானைப் பெறுதற்கு வழி, பொய்ந்நின்ற  ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமாகிற விவையே பிரதிபந்தகம், ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்வதே பரமபுருஷார்த்தம் என்கிற இவ்வைந்து அர்த்தங்களும் இத் திருவாய்மொழியில் பன்னிப்பன்னி யருளிச்செய்யப்படு மாறு காண்க. 

தனியன் உரை முற்றிற்று. 

 

⇌⇌⇌⇌⇌⇌⤪⤭ ⇌⇌⇌⇌⇌⇌ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே சரணம். 

திருவாய்மொழி – அவதாரிகை. 

இது, மயர்வறமதிநலமருளப்பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும் ப்ரபந்தஜன கூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்ய ப்ரபந்தங்களுள் நான்காவதான ப்ரபந்தம்; சரமப்ரபந்தமெனப்படும். திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்களும் -நம்மாழ்வாருடைய திவ்ய ஸுக்திகளாம். இந்நான்கும் முறையே நான்கு வேதங்களின் ஸாரமாம். நாலாயிரப் பிரபந்தத்தில் திருவாய்மொழி நான்காவது ஆயிரமாக அமைக்கப்பட்டுள்ளது; இது ஸாமவேத ஸாரமாகும். 

 

ஆழ்வார் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான தேஹ ஸம்பந்தத்தையறுத்துத் தந்தருள வேணும்’ என்று ஸம்ஸாரஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்தார் முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில். ஆழ்வார் அப்படி பிரார்த்தித்தபோதிலும் எம்பெருமான் இவ்வாழ்வாரைக்கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்ய ப்ரபந்தங்களை வெளியிடுவித்து ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் பற்றினவனாகையாலே ”பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும் இந்நின்ற நீர்மையினியாமுறாமை” என்று இவர் அபேக்ஷித்த போதே – இவருடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டித் தந்தருளவில்லை.. இவ்வாழ்வார் இந்த ஸம்ஸாரத்தை விட்டு விலகி ஒரு * நலமந்தமில்லதோர் நாட்டிலே போய்ச் சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப்பதற்காகவேயன்றி வேறொன்றுக்காகவன்றே; அந்த குணாநுபவத்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம்; இங்கேதானே இவர் குணாநுபவம் பண்ணிக் களித்தாராய் அவ்வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப் பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்” என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றித் தனது ஸ்வரூபரூபகுண விபூதிகளைக் காட்டிக்கொடுக்க, ஆழ்வார் அவற்றைக்கண்டு பரமாநந்தம்பொலிய அநுபவித்தார் திருவாசிரியத்திலே. அப்படி அநுபவித்த பகவத்விஷயத்திலே அவ்விஷயத்திற்குத் தகுதியாக ஆசை கரைபுரண்டு பெருகிச் செல்லுகிறபடியைப் பேசினார் பெரிய திருவந்தாதியில். 

 

தாயானவள் தனது பிரஜைக்கு அஜீர்ணத்தையறுத்துப் பசியை மிகுத்துச் சோறிடுமாபோலே எம்பெருமான் தமக்கு ருசியைப் பிறப்பித்தபடியையும், அந்த ருசிதான் பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாய்க்கொண்டு பக்குவமானபடியையும், பின்பு பிரகிருதி ஸம்பந்தமற்றுப் பேற்றோடே தலைக்கட்டினபடியையும் அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில். 

 

ஸ்ரீசக்ரவர்த்தி திருமகனார் காட்டுக்கெழுந்தருளின பிறகு மாதுல க்ருஹத்தினின்றும் அயோத்திக்கு மீண்டுவந்த பரதாழ்வானை நோக்கிக் கைகேயியானவள் ராஜந்! [அரசனே!] என்று அழைத்தவளவில் பரதன் அச்சொல்லைக் கேட்டு என்ன ஸங்கடமடைந்தனனோ அந்த ஸங்கடம் ஆழ்வார்க்குத் திருவிருத்தத்திலேயாயிற்று, பிறகு அப்பரதன் சில பரிஜனங்களைக் கூட்டிக்கொண்டு சித்திரகூடஞ்சென்று இராமபிரானை மீட்டு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வருவதாகப் புறப்பட்டுச்செல்லும்போது அப்பரதனது நெஞ்சில் என்ன தரிப்பு இருந்ததோ அவ்வகையான தரிப்பு ஆழ்வார்க்குத் திருவாசிரியத்திலேயாயிற்று. பிறகு பரதன் ஸ்ரீநந்திகிராமத்திலே யிருந்து கொண்டு பதினான்குவருஷம் தனது ஆசையை வளர்த்துக்கொண்டிருந்த நிலைபோலும் பெரிய திருவந்தாதியில் அழ்வாருடைய நிலை. பெருமாள் மீண்டு திருவயோத்திக் கெழுந்தருளித் திருவபிஷேகங் கண்டருளி அப்பரதனும் ஸ்வரூபாநுரூபமான பேறு பெற்றாற்போலேயாம் இத் திருவாய்மொழியில் ஆழ்வார் பெறும் பேறு. 

 

திருவாய்மொழி என்பதற்கு – மேன்மையையுடைய வாயினாற் சொல்லுஞ் சொற்களினாலாகிய நூல் என்பது பொருள். திரு என்பது வாய்க்கும் அடை மொழி [விசேஷணம்) ஆகலாம், வாய்மொழிக்கும் அடைமொழியாகலாம். வாய்மொழி என்னும் முதற்கருவியின் பெயர் அதன் காரியமாகிய பிரபந்தத்திற்கு ஆனது, காரியவாகு பெயர். அது திரு என்னும் அடைமொழியினால் அடுக்கப்பட்டது பற்றி அடையடுத்த ஆகுபெய ரெனப்படும். 

 

திரு – உயர்வை விளக்கும் அடைமொழி; இந்த அடைமொழி கொடுக்கும்படி ஆழ்வாரது வாக்குக்குள்ள விசேஷம் அவரது திருநாவீறுடைய பிரான் என்னுந் திருநாமத்தாலும் விளங்கும். திருமங்கையாழ்வாரருளிச்செயலாகிய திருமொழியினும் வேறுபாடு விளங்குதற்குத் திருவாய்மொழி யெனப்பட்டது. 

 

இப் பிரபந்தம் நூறு பதிகங்களாக அமைந்த ஆயிரத்தொரு நூற்றிரண்டு செய்யுள்களையுடையது. பத்துப் பத்தாக அமைந்தது. இப் பிரபந்தம் முழுவதும் அந்தாதித் தொடையாற் பாடப்பட்டது அந்தாதித் தொடையாவது –முன் நின்ற பாசுரத்தின் இறுதி அடுத்துவரும் பாசரத்தின் முதலாக அமைவது. இவ்வந்தாதி, சொற்றொடர் நிலை பொருட்டொடர்நிலை என்ற தொடர் நிலைவகை யிரண்டனுள் சொற்றொடர் நிலையாகும் ; ”செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும், இத் திவ்யப்ரபந்தத்தின் பாசுரங்கள் பொருளில் ஒன்றை ஒன்று தொடர்ந்து நிற்பது தோன்ற அறிவிற் சிறந்த ஆசிரியர்கள் வியாக்கியானித்தருள்வதனால் இது பொருட்டொடர் நிலையுமாம். “பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை” என்னுந் தண்டியலங்காரச் சூத்திரத்தின் உரையில் “இரண்டென்னாது வகையென்ற மிகையான் மூன்றாவது – பொருளினுஞ் சொல்லினுந் தொடர்தலு முண்டெனக் கொள்க” என்றது காண்க. நெடுக ஒரு கதையாகக் கூறுதலல்லாமல் ஸ்தோத்ரரூபமாக அருளிச் செய்யப்பட்ட பாசுரங்களாதலால் சொற்றொடர் நிலையாகவே சொள்ளலாம் என்பது ஒரு சாரார் கொள்கை. 

 

தொல்காப்பியத்துச் செய்யுளியலிற் கூறப்பட்ட அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயைபு புலன் இழைபு என்ற எண்வகை வனப்பினுள் இந்நூல் விருந்தென்னும் வனப்பின் பாற்படும். ++ ”விருந்தேதானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்ற தொல்காப்பியச் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் விருந்து தானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரத் தொடுத்துச் செய்யப்படும் தொடர் நிலை மேலது” என்றும், “அது, முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க; கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப” என்றும் உரைத்துள்ளமை காண்க.                   ++ தொல்காப்பியம் – பொருளதிகாரம் – செய்யுளியல் 240

 

ஆழ்வார்களுள் நம்மாழ்வார்க்கு ஏற்பட்ட ஒப்புயர்வற்ற அதிசயம் போலவே இத் திருவாய்மொழிக்கும் மற்றை அருளிச்செயல்களிற்காட்டில் ஏற்றம் உண்டு. திருவாய்மொழி திருவீதிகளில் ஸேவிக்கப்படாமல் ஆஸ்தானத்திலேயே ஸேவிக்கப்பட்டுவருகிற ஸம்ப்ராதாயமும், இத் திருவாய்மொழிக்கே பலபல வியாக்கியானங்கள் ஏற்பட்டிருக்கின்றமையும் இதன் ஏற்றத்தை வற்புறுத்தும். 

 

இந்தத்திருவாய்மொழிக்குத் திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி, நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி, பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படி, நம்பிள்ளை அருளிச்செய்ததை வடக்குத்திருவீதிப்பிள்ளை பட்டோலை கொண்ட ஈடு முப்பத்தாறாயிரப்படி, வாதிகேஸரி அழகிய மணவாளசீயர் அருளிச்செய்த பன்னீராயிரப்படி என்னும் ஐந்து வியாக்கியானங்கள் ப்ரஸித்தமாக வழங்கி வருகின்றன. வடவாசார்ய ஸம்ப்ரதாயத்திலும் ஒன்பதினாயிரப்படி, பதினெண்ணாயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி என்று சில வியாக்கியானங்கள் உண்டு. மேற்கூறிய வியாக்கியானங்களைத் தழுவியும் ஆவச்யகமான மற்றும் பல விஷயங்களைச் சேர்த்தும் இவ்வுரை எழுதப்படுகின்றது. 

 

இத் திருவாய்மொழிக்குப் பாசுரங்களின் மேல் வியாக்கியானமாக அல்லாமல் ஒவ்வொரு திருவாய்மொழியினுடையவும் ஒவ்வொரு பத்தினுடையவும் லாரஸங்க்ரஹ ரூபமாக வடமொழியிலும் தென்மொழியிலும் சில திவ்யக்ரந்தங்கள் நம்பூருவர்களால் அருளிச்செய்யப்பட்டுள்ளன: ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் அருளிச்செய்த த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி, த்ரமிடபநிஷத்ஸாரம், அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்த த்ரமிடோபநிஷத் ஸங்கதி என்பவை ஸம்ஸ்க்ருத ச்லோகரூபமானவை. மணவாள மாமுனிகள் அருளிச்செய்த திருவாய்மொழி நூற்றந்தாதி ஸுப்ரஸித்தம். 

 

அரிய பெரிய ஆழ்பொருள்கள் உள்ளடங்கியிருக்கப்பெற்ற இந்த த்ராவிட வேதஸாகரத்திலே சிற்றறிவினனாகிய அடியேன் வாய்வைக்கச் சிறிதும் யோக்யதையுடையேனல்லேனாயினும், ஆசிரியர்கள் காட்டியருளின வழியைப் பின்பற்றி எழுது மிவ்வுரையை குணக்ராஹிகளான ரஸிகர்கள் இயற்கையின்னருளால் நோக்கியருள்க. 

 

திருவாய்மொழி அவதாரிகை முற்றிற்று.

Dravidaveda

back to top