ஸ்ரீ:


ஆழ்வார் திருவடிகளே சரணம்.


ப்ரபந்நஜநகூடஸ்தரான
நம்மாழ்வார் அருளிச் செய்த
பெரிய திருவந்தாதி


பெருமாள்கோயில்
பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர்
இயற்றிய
திவ்யார்த்த தீபிகையென்னும்
உரையுடன் கூடியது


பெரிய திருவந்தாதி


இது- மயர்வற மதிநல மருளப் பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும், ப்ரபந்நஜநகூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் மூன்றாவதான பிரபந்தம். திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்களும் நம்மாழ்வாருடைய திவ்ய ஸூக்திகளாம். இந் நான்கும், முறையே நான்கு வேதங்களின் ஸாரமாம். நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் இது ஏழாவதாகும். அதர்வணவேத ஸாரமுமாம்.

பெரிய திருவந்தாதி என்பதற்குப் பெருமை பொருந்திய திரு வந்தாதிப் பிரபந்தமென்று பொருள். அந்தத்தை ஆதியாக வுடையது அந்தாதி. அன்மொழித்தொகை ; வடமொழித்தொடர். அங்க ஆதி எனப் பிரிக்க, அந்தாதியாவது -- முன் நின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராகிலும் அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது ; இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும். அந்தாதி யென்பது தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி என்றும் நூற்றந்தாதி என்றும் வகைகளுண்டு. பத்து வெண்பாவினாலேனும் பத்து கட்டளைக்கலித்துறையினாலேனும் அந்தாதித் தொடையாற் கூறுவது பதிற்றந்தாதி. நூறு வெண்பாவினாலேனும் நூறு கட்டளைக் கலித்துறையினாலேனும் அந்தாதித் தொடையாற் கூறுவது நூற்றந்தாதி. இப்பிரபந்தம் நூற்றுக்குக் குறைந்த எண்பத்தெழு வெண்பாவினால் அமைந்துள்ளதொரு திவ்யப்பரபந்தம். சொற்றொடர் நிலைச் செய்யுள் பொருட்டொடர் நிலைச் செய்யுள் என்ற வகையில் இது சொற்றொடர் நிலை; “செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே”என்றார் தண்டியலங்காரத்தும். இந்நூலின் பாசுரங்கள் பொருளில் ஒன்றை ஒன்று தொடர்ந்து நிற்றல் தோன்ற அறிவிற் சிறந்த மஹான்கள் உபந்பஸிக்கக் கூடுமாதலால் இது பொருட்டொடர் நிலையுமாம். “பொருளினுஞ் சொல்லினுமிருவகை தொடர்நிலை” என்னுந் தண்டியலங்காரச் சூத்திரத்தின் உரையில் இரண்டென்னாது வகையென்ற மிகையான் மூன்றாவது பொருளினுஞ் சொல்லினுந் தொடர்தலுமுண்டெனக் கொள்க” என்றமை காண்க. நெடுக ஒரு கதையாகக் கூறுதலல்லாமல் ஸ்தோத்ரரூபமாக அருளிச் செய்யப்பட்ட பாசுரங்களாதலால் சொற்றொடர் நிலையாகவே கொள்ளலாம்.

தொல்காப்பியத்துச் செய்யுளியலிற் கூறப்பட்ட அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எண்வகை வனப்பினுள் இந்நூல் விருந்தென்னும் வனப்பின் பாற்படும். $“விருந்தேதானும் புதுவது கிளந்தயாப்பின் மேற்றே” என்ற தொல்காப்பியச் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் “விருந்து தானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரத்தொடுத்துச் செய்யப்படும் தொடர்நிலை மேலது” என்றும், “அது- முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச்செய்யுளும் என உணர்க; கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப” என்றும் உரைத்துள்ளமை காண்க. [$ தொல்காப்பியம்-பொருளதிகாரம்- செய்யுளியல்-240]

முதலாழ்வார்களருளிச் செய்த திருவந்தாதிப் பிரபந்தங்கள் நூறு பாசுரங்களையுடையனவாதலால் அவற்றினுங் குறைந்த பாசுரங்களையுடையதாய்ச் சிறியதான இத்திருவந்தாதிப் பிரபந்தத்தைப் பெரிய திருவந்தாதி என வழங்குதல் எங்ஙனமே யெனின் ; கேண்மின்;- உருவத்தால் பெருமை பெற்றதைப் பெரிது என வழங்குதல்போலக் குணங்களால் பெருமை பெற்றதையும் பெரிது என வழங்குதல் உண்டு; பெரிய மனிதர் என்று உலகில் சிலரைச் சொல்வது குணப்பெருமையைக் கொண்டேயன்றி ஊன்மல்கிமோடுபருத்திருக்கையாகிற உடற்பெருமையைக் கொண்டு அல்ல. கூரத்தாழ்வான் திருக்குமாரரான பட்டர் சிறுபிராயத்திலே ஒரு நாள் ஆழ்வான் திருவாய்மொழி அநுஸந்திக்கும்போது “உறுமோபாவியேனுக்கு” (8-10-3) என்ற பாசுரத்தில் “சிறுமாமனிதராய் என்னை யாண்டாரிங்கே திரியவே” என்றதைக் கேட்டு அதில் சிறுமாமனிதர் என்றதைக் குறித்து ஆக்ஷேபங்கொண்டு தந்தையாரை நோக்கி ஒன்றுக்கொன்று எதிர்த்திட்டான சிறுமை பெருமை என்கிற குணங்களிரண்டும் ஒரு பொருளினிடத்து ஒன்று சேர்ந்திருக்குமோ? ஆழ்வார் ‘சிறுமா மனிதர்’ என்று இரண்டையும் ஒருவரிடத்தே சேர அருளிச் செய்தது பொருந்துவது எங்ஙனே? என்று வினவினார். அதற்கு ஆழ்வான் ஆலோசித்து, ‘பிள்ளாய்! நன்கு வினவினாய்; உனக்கு உபநயநமாகாமையால் இப்பொழுது வேத சாஸ்திரங்களைக் கொண்டு விடை சொல்லலாகாது. ஆயினும் ப்ரத்யக்ஷத்திற் காட்டுகிறோம் காண்’ என்று சொல்லிச் சில பெரியோர்களைக் காட்டி ‘திருமேனி சிறுத்து ஞானம் பெருத்திருக்கிற சிறியாச்சான் அருளாளப் பெருமாளெம்பெருமானார் போல்வாரைச் சிறுமாமனிதர் என்னத் தட்டில்லையே; முதலியாண்டான் எம்பார் முதலிய பெரியோர்கள் உலகத்தாரோடொக்க அந்நபாநாதிகள் கொள்வதோடு எம்பெருமான் பக்கல் ஈடுபடுவதிற் பரம பதத்து நித்ய ஸூரிகளைப் போலுதலால், இப்படிப்பட்டவர்கள் சிறுமானிதர் என்னத் தக்கவரன்றோ? இங்ஙனமே வடிவுசிறுத்து மஹிமை பெருத்தவர்களும், மனிதரென்று பார்க்குமிடத்து சிறுமை தோன்றினும் பகவத்பக்தி ஞானம் அநுஷ்டாநம் முதலிய நற்குணங்களை நோக்குமிடத்து நித்யமுக்தர்களினும் மேன்மை பெறுகின்றவர்களுமான மஹாபுருஷர்களையே ஆழ்வார் சிறுமாமனிதரென்று குறித்தருளினர்; என்று அருளிச் செய்ய, அது கேட்டுப் பட்டர் ‘தகும் தகும்’ என்று இசைவு கொண்டனர்.- என்கிற இதிஹாஸம் இங்கு உணரத்தக்கது. ஆகவே, இப்பிரபந்தம் மற்ற திருவந்தாதிகளிற் காட்டிலும் உருவத்தால் கொஞ்சம் சிறியதாயிருந்தாலும், சொல்லின்பம் பொருளின்பம் முதலிய குணங்களாற் பெருமை பெற்று விளங்கிற்றென்று கொண்டே நம் பூருவர்கள் இதன் பெருமை தோன்ற இதற்குப் பெரிய திருவந்தாதி யென்று திருநாமமிட்டனரென்க.

இது பெரிய திருவந்தாதியாய் விட்டால் முதலாழவார்களின் திருவந்தாதிகள் சிறிய திருவந்தாதிகளே. அவற்றில் குணங்கள் ஸ்வல்பமாகத் தானிருக்கின்றவோ? என்று கேட்பது ரஸிகர் கட்குப் பணியன்று. இப்பிரபந்தம் மிகப் பெருமை பெற்றது என்பது மாத்திரம் இங்குக் கொள்ளதக்கதேயன்றி மற்றவற்றின் லாகவமும் சொல்லிற்றாகாது.

இனி, பெரிய திருவந்தாதியென்று வழங்குவதற்கு வேறொரு காரணமுங் கூறலாம்; அதாவது - “புவியுமிரு விசும்பும் நின்னகத்த, நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்- அவிவின்றி, யான் பெரியன் நீ பெரியை என்பதனை யாரறிவார்? ஊன்பருகு நேமியாயுள்ளு” என்று இப்பிரபந்தத்தில் ஒரு பாசுரம் (75) உண்டு ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, பிரானே! உபயவிபூதிகளும் உன்னிடத்தே அடங்கியிருக்கின்றன என்பது வாஸ்தவம்; அந்த உபய விபூதிகளைத் தரிக்கின்ற நீ பெரியவனா? அன்றி உபயவிபூதியுக்தனான உன்னைச் செவியின்வழியே உள்ளே புகுவித்துத் தரித்துக் கொண்டிருக்கிற நான் பெரியவனா? “மஹதோ மஹீயாந்” [பெரியவஸ்துவிற் காட்டிலும் மிகப்பெரியவஸ்து] என்று உன்னை வேதங்கள் மிகப்பெரியவனாகச் சொல்லுகின்றனவே. இதுதகுமா? பெரியவனான உன்னையும் ஒரு மூலையிலே அடக்கிக்கொண்டிருக்கிற நானன்றோ பெரியவன் ; இதனை ஆராயவேணும் என்று ஒரு சமத்காரமாக அருளிச் செய்கிறார். ஆகவே, ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக்கொண்ட பிரபந்தம் இதுவாதலால் இதற்குப் பெரிய திருவந்தாதியென்று பேராயிற்றென்னலாம் போலும்.


பெரிய திருவந்தாதி - தனியன் உரை.


எம்பெருமானார் அருளிச் செய்த தனியன்

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் – சந்த
முருகூருஞ் சோலை சூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன்பேர் கூறு.


பதவுரை


முந்துற்ற - (நல் விஷயங்களில்) முற்பட்டுச் செல்லுகிற
நெஞ்சே - ஓ மனமே!
முயற்றி தரித்து - (நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில் உத்ஸாஹங் கொண்டு)
உரைத்து - (என் நிலைமையை) ஆழ்வாரிடத்து விஜ்ஞாபித்து
வந்தித்து - தண்டன் ஸமர்பித்து
வாய் ஆர வாழ்த்தி - வாய்படைத்தது ஸபலமாம்படி வாழ்த்தி,
முருகு ஊரும் சந்தத் சோலை சூழ் - தேன் பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்
மொய் பூ பொருநல் - நெருங்கிய அழகிய தாமிரபரணி நதியையுடையதுமான
குருகூரன் - திருநகரிக்குத் தலைவரான
மாறன் - நம்மாழ்வாருடைய
பேர் - திருநாமங்களை
கூறு - நீ சொல்லு

***- மாறனடி பணிந்துய்ந்தவரான இராமாநுசன் தமது திருவுள்ளத்தை நோக்கி ‘நெஞ்சே’ நீ ஆழ்வாருடைய திவ்யப்ரபாந்தத்தைச் சொல்லுவதும் அவருடைய திருநாமங்களைச் சொல்லுவதுமாயிரு’ என்று உபதேசிக்கிறார். முயற்றியாவது முயற்சி; ஊக்கம் வந்தித்தல்- வணங்குதல். வாயாரவாழ்த்தி என்ற பாடத்தில் வெண்டளை பிறழ்கின்றமையால் “வாயார வாழ்த்தியே” என்று பாடமிருந்திருக்க வேணும்.

முயற்றி தரித்து என்பதற்கு -முயற்றி என்னுஞ் சொல்லை முதலிலே வைத்து ஆழ்வார் அருளிச் செய்த பிரபந்தத்தைத் தரித்துக் கொண்டு என்று பொருள் கொள்ளுதலும் சிறக்கும். “முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே” என்றியே இப்பெரிய திருவந்தாதியின் தொடக்கம்.


ஸ்ரீ:


ஆழ்வார் திருவடிகளே சரணம்.


பெரிய திருவந்தாதி உரையின் அவதாரிகை


ஆழ்வார், முதற்பிரபந்தமாகிய திருவிருத்தத்தில் - தமது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான தேஹஸம்பந்தத்தைத் துலைத்தருளவேணும்’ என்று ஸம்ஸாரஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்தார். ஆழ்வார் அப்படி பிரார்த்தித்த போதிலும், எம்பெருமான் இவ்வாழ்வாரைக் கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்யப்பரபந்தங்களை வெளியிடுவித்து அவற்றால் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் பற்றினவனானகையாலே “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு மிந்நின்ற நீர்மை இனியாமுறாமை” என்று இவர் பிரார்த்தித்தபோதே இவருடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டித் தந்தருளவில்லை. இவ்வாழ்வார் இந்த ஸம்ஸாரத்தை விட்டுவிலகி ஸ்ரீ வைகுண்டத்திற் சென்று சேரவேணுமென்ற பாரிப்பது நம்முடைய குணங்களை யநுபவிப்பதற்காவேயன்றி றேறொன்றுக்காவுமன்றோ; அந்த குணநுபவத்தை நாம் இவர்க்கு இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம்; இங்கேதானே இவர் குணாநுபவம் பண்ணிக் களிப்புற்றவராகிய அவ்வநுபவம் உள்ளடங்காமல் புற வெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப் பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்” என்று எம்பெருமான் திருவுள்ளம்பற்றித் தனது ஸ்வரூபரூப குணாவிபூதிகளைக் காட்டிக்கொடுக்க, ஆழ்வார் அவற்றைக்கண்டு பரமாநந்தம் பொலிய அநுபவித்தார் திருவாசிரியப் பிரபந்தத்திலே. அப்படி அநுபவித்த பகவத் விஷயத்திலே அவ்விஷயத்திற்குத் தகுதியாக ஆசை கரை புரண்டு பெருகிச் செல்லுகிறபடியைப் பேசுகிறார் இப்பெரிய திருவந்தாதியில்.

ஸ்ரீசக்கரவர்த்தி திருமகனார் காட்டுக்கெழுந்தருளின பிறகு மாதுலக்ருஹத்தினின்றும் அயோத்திக்கு மீண்டுவந்த பரதாழ்வானை நோக்கிக் கைகேயியானவள் ராஜந் (அரசனே!) என்று ஸம்போதித்தவளவில் பரதன் அச்சொல்லைக் கேட்டு என்ன ஸங்கடமடைந்தனனோ அந்த ஸங்கடம் ஆழ்வார்க்குத் திருவிருத்தத்திலேயாயிற்று. பிறகு அப்பரதன் சில பரிஜனங்களைக் கூட்டிக் கொண்டு சித்திரகூடஞ்சென்று இராமபிரானை மீட்டு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருவதாகப் புறப்பட்டுச் செல்லும்போது அப்பரதனது நெஞ்சில் என்ன தரிப்பு இருந்ததோ அவ்வகையான தரிப்பு ஆழ்வார்க்குத் திருவாசிரியத்திலேயாயிற்று. பிறகு பரதன் ஸ்ரீ நந்திக்ராமத்திலே யிருந்துகொண்டு பதினாலு வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்டிருந்த நிலைபோலும் இப்பெரிய திருவந்தாதியில் ஆழ்வாருடைய நிலை.

பெருமாள் மீண்டு திருவயோத்திக்கெழுந்தருளித் திவபிஷேகங் கண்டருளி அப்பரதனும் ஸ்வரூபமான பேறுபெற்றாற்போலேயாம் மேலே திருவாய்மொழியில் ஆழ்வார் பெறும் பேறு.

அருளிச் செயல் நாலாயிரத்திற்கும் அற்புதமான வியாக்கியானமருளிச்செய்த பெரியவாச்சான் பிள்ளை இயற்பாவுக்கு அருளிய வியாக்கியானம் சுருக்கமுடைத்தாதலாலும், அவற்றினுள்ளும் இப்பரபந்தத்திற்கு அருளிய வியாக்கியானம் மிக்க சுருக்க முடைத்ததாலும், ஆழ்ந்த பல கருத்துக்களை அமைத்துக் கொண்டுள்ள அந்த வியாக்கியானத்தைக் தழுவி அடியேனுடைய சிற்றறிவிற்கு எட்டிய பல விஷயங்களையுஞ் சேர்த்துப் பாசுரப் பொருள் ஸ்பஷ்டமாகத் தெரியும்படி விரிவுரை எழுதப்படுகின்றது. குற்றங்குறைகளைப் பெரியோர் பொறுத்தருள்க.

அவதாரிகை முற்றிற்று.

Dravidaveda

back to top