ஸ்ரீ:

திருமாலை.


தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் இரண்டினுள் முதலாவது இது; (மற்றொன்று – திருப்பள்ளியெழுச்சி.) ”திருமாலையறி யாதவன் பெருமாளையறியான்” எனவழங்கும் பழமொழியினால் இத்திவ்யப்ரபந்தத்தின் சிறப்பு அறியத்தக்கது. இப்பிரபந்தம் நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் முதலாயிரத்தைச் சேர்ந்தது.

ஒருவிஷயத்தைக்குறித்துப் பலசெய்யுள் கூறுவது மாலை எனப்படும். தமிழில் பலவகைப் பிரபந்தங்களுள் ‘மாலை’ என்பது ஒன்று. திரு என்னுஞ் சொல் சிறப்புப்பொருளைக்காட்டி மாலைக்கு அடைமொழியாய் நின்றது. இப் பிரபந்தம் ஸ்ரீரங்கநாதனைப்பற்றிப் பாடுவதாதலால் ‘திருமாலை’ எனச்சிறப்பித்துக் கூறப்பட்டது. இப்பாமாலை ஸ்ரீரங்கநாதன் திருவடிகளில் சாத்தும் பூமாலை போலுதலாலும் இந்நூல் திருமாலை எனத்திருநாமம் பெற்றது. பிரபந்தத்திற்குப் பெயரிடும் வகையைக் கூறுமிடத்து, “முதனூல் கருத்தன் அளவு மிகுதி, பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும், இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே” (நன்னூல் – பொதுப்பாயிரம்.) என்று கூறப்பட்டிருத்தலால், நுதலிய பொருளினாலும் தன்மையினாலும் பேர்பெற்றது இந்நூல் என்க. (நுதலிய பொருள் – நூலிற்கூறப்பட்டவிஷயம், தன்மை – இயல்பு.)

இத்திவ்யப்ரபந்தம்-வடமொழியில் ஸ்ரீவிஷ்ணு தர்மம் என்னும் நூலின் ஸாரம் என்பது ஆசார்யர்களின் கொள்கை. இத்திவ்யப்ரபந்தத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை மணிப்ரவாள நடையில் மிகவும் கம்பீரமான நடையில் அருளிச் செய்த வியாக்கியான மொன்றேயுளது. பெரும்பாலும் அதனைத்தழுவியும், சிறுபான்மை இன்றியமையாத சில இலக்கணக்குறிப்புகளையும் விசேஷார்த்தங்களையும் எனது சிற்றறிவினால் விளக்கி “திவ்யார்த்த தீபிகை” என்னும் பெயர் பூண்ட இவ்வுரை அடியேனால் எழுதப்படுகின்றது. இதிலுள்ள குற்றங்களைப் பெரியோர் கண்ணுறாது, குணலேசத்தையே நோக்கி உகந்தருள்வாராக.


இந் நூலாசிரியராகிய

தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்.


இவ்வாழ்வார், சோழநாட்டில் திருமங்கையாழ்வாருடைய மங்களாசாஸநம்பெற்ற ‘புள்ளம் பூதங்குடி’ என்னும் திவ்யதேசத்தின் அருகிலுள்ள திருமண்டங்குடி என்னும் திருப்பதியிலே கலியுகத்தில், இருநூற்றெண்பத்தொன்பதாவதான பிரபவஸம்வத்ஸரத்தில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணபக்ஷசதுர்த்தசி கூடின செவ்வாய்க்கிழமையில் கேட்டை நக்ஷத்திரத்தில், வைஜயந்தி என்னும் வநமாலையின் அம்சமாய் வைதிகோத்தமரான ஒரு முன்குடிமி ப்ராஹ்மணருடைய திருக்குமாரராய்த் திருவவதரித்தார். ஸ்ரீமந்நாராயணனுடைய கடாக்ஷத்தால் அவதரித்த அவ்வந்தணகுமாரர்க்குத் தந்தையார் விப்ரநாராயணர் என்று நாமகரணஞ்செய்து சௌளம் உபநயநம் முதலிய வைதிக ஸம்ஸ்காரங்களை உரியகாலங்களில் முறைப்படி செய்வித்து வேதசாஸ்த்ரங்களைப் பயிற்றுவிக்க, அவர் நான்மறைகளையும் ஆறுசாஸ்திரங்களையும் கசடறக்கற்று வல்லராய் அக்கல்விக்கு ஏற்பச் சுத்த ஸத்வகுணமே தலையெடுத்து ஞானவைராக்யங்கள் வளரப்பெற்றுத் தந்தை தாயர்க்கு மிக்க மகிழ்ச்சிதந்து வாழ்ந்துவந்தார். அப்படி யிருக்கையில் ஸ்ரீஸேனைமுதலியார் ஸ்ரீவைகுண்டத்தினின்றும் எழுந்தருளி அவர்க்கு ஸ்ரீவைஷ்ணவர்கட்கு உரிய ஸமாச்ரயணம் முதலிய சடங்குகளைச் செய்து சென்றனர்.

அப்போது திருமந்திரார்த்தத்தை அறிந்த விப்ரநாராயணர் கருணைக்கடலான கமலை கேழ்வனது குணாம்ருதத்திலே ஆழ்ந்த சிந்தையுடையராய் அதனால் இம்மையின்பத்தை இகழ்ந்து விவாஹத்தில் விருப்பமற்று ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே நின்று திவ்பதேசங்களிற் சென்று எம்பெருமானை மங்களாசாஸநஞ் செய்யக்கருதி அவற்றில் முதலதான திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தார். அங்கு உபயகாவேரிமத்தியிலே சேஷசயநத்திலே “குடதிசை முடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி வடதிசை பின்புகாட்டித் தென்திசை யிலங்கை நோக்கி”ப் பள்ளி கொண்டுள்ள பெருமானைச் சேவித்துநிற்க, அப்பொழுது அந்த நம்பெருமாள் தம்முடைய வடிவழகினால் இவரைத் தம்பக்கல் மிகுந்த பக்தியுடையராம்படி செய்தருளினர்.

உடனே இவர் தமது வாணாள் வீணாளாகாதபடி அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவிரும்பி, பெரியாழ்வார்போலவே தாமும் பெருமாளுக்குப் புஷ்பம் திருத்துழாய் ஸமர்ப்பிப்பதையே எற்ற கைங்கர்யமாகக் கடைப்பிடித்து, ஒரு திருநந்தவனத்தை அப்பதியிலே செழிப்பாக அமைத்து, காலந்தோறும் பல வகைப் பூமாலைகளையும் திருத்துழாய் நன்மாலையையும் கட்டி எடுத்துக் கொண்டு தமது நிலைக்கு ஏற்ப ப்ராஹ்மணர் திருமாளிகைகளில் அந்நபிக்ஷை வாங்கி அமுதுசெய்து வந்தார்.

இங்ஙனமிருக்கையில் திருவரங்கத்துக்கு வடக்கிலுள்ள உத்தமர் கோயிலில் தேவமரதாம்சமாய்ப் பிறந்து மிகவும் அழகியான ‘தேவதேவி’ என்பாளொரு தாஸி, ஒருநாள் தோழிமாரோடும் தமக்கையோடும் உறையூருக்குச் சென்று, சோழராஜனது முன்னிலையில் ஆடல்பாடல்களை நிகரற நிகழ்த்தி அவனை மோஹிப்பித்து அளவிறந்த செல்வத்தை அவனிடத்திற்பெற்று மிக்க கர்வத்தோடு மீண்டு வருகையில் இளைப்பாறுதற்பொருட்டு இவ்வாழ்வாருடைய பூம்பொழிலின் ஒருபுறத்திலே ஒரு மரத்தினடியில் இருந்து அச்சோலையின் சிறப்பை நாற்புறத்திலும் நன்றாக உற்று நோக்கி, அம்மலர்ச்சோலையைத் தனக்கு உரிய பொருளாக்கி அதில் பூக்கொய்தும் புனல் விளையாடியும் பொழுதுபோக்கி மனமகிழ விரும்பி, அதற்கு உரியவனைக்கண்டு தன்வசப்படுத்த நினைத்து அங்கு உலாவிநின்றாள். நிற்கையில், ஒருபக்கத்தில் விப்ரநாராயணர் பளபளவென்ற திருப்பரிவட்டத்துடனும் பன்னிரண்டு திருமண்காப்புகளுடனும் தாமரைமணிமாலை துளசிமணிமாலைகளுடனும் விளங்கி, பூஞ்செடிகளுக்குப் பாத்திகட்டுதலும் தண்ணீர் பாய்ச்சுதலும் செய்துகொண்டிருக்கக் கண்ணுற்றாள்.

உடனே அவள், அருகில் வந்து முன்னின்று அவரைத்தொழுது தனதுதேஹ ஸௌந்தர்யத்தை அவர்க்குக்காட்டிச் சிலகுறிப்புச்செய்யவும் விஷயாந்தரங்களிற் குருடராகிய அவர் அவளைக்கண்ணெடுத்தும் பாராது திரஸ்கரித்துத் தமது கைங்கரியத்திற் கருத்தூன்றியிருந்தனர். அதுநோக்கித் தேவதேவி ஆச்சர்யமுற்று, தன் தமக்கையுடன் ‘அரசர் முதலிய பலரையும் எளிதில் வசப்படுத்துகிற ரூபலாவண்யங்களிற் சிறந்த யான் சென்று எதிர் நிற்கவும் பாரா திருக்கின்ற இவன் பித்தனோ? பேடனோ? என்றுகூற, அதற்கு அவள் ‘பித்தனுமல்லன், பேடனுமல்லன்; ஸ்வாமி கைங்கரியத்தில் ஊற்றமுற்ற மஹாவிரக்தன்; இவனை வசப்படுத்த உன்னாலாகாது’ என்று சொன்னவளவிலே, வடிவழகில் இறுமாப்புடைய தேவதேவி ‘இவனை நான் வசீகரியாமல் விடுவதில்லை’ என்று உறுதிகூறுதலும், தமக்கை ‘நீ அங்ஙனஞ் செய்தால் நான் உனக்கு ஆறுமாத காலம் அடியவளாவேன் ‘ என்று சபதஞ்செய்ய, தங்கை நன் அங்கனஞ் செய்யேனாயின் ஆறுமாதம் உனக்குத் தொழுத்தையாவேன் ‘ என்று பிரதிஜ்ஞை பண்ணினாள்.

பிறகு அவள், தன் ஆபரணங்களைக் கழற்றிக் கொடுத்துத் தோழியரோடு தமக்கையையும் அனுப்பிவிட்டுத் தனியே மெல்லியதொரு செங்காவிச் சேலையை உடுத்து அவரை அடுத்துத்திருவடிகளில் விழுந்து நமஸ்கரிக்க, அவர் – நீயார்? ஏன் இங்கு வந்தாய்?’ என்றுகேட்க அதற்கு அவள் அடியேன் முற்பிறப்பில் செய்த தீவினையால் தாஸியாகப் பிறந்தவள் ; அடியேனைத் தாய் அக்குலத்திற்கு உரிய தொழிலைக் கைக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க, அதற்கு இசையாமல் அவளைத்துறந்து மஹாபாகவதரான தேவரீரது திருவடியைச் சரணமடைந்து உய்வு பெறநாடி வந்துற்றேன் ; கருணைக்கடலான தேவரீர் அநாதையான அடியேனைக் காத்தருளவேணும் ; செடிகளுக்கு நீர் பெய்தல், பூப்பறித்தல், மாலைகட்டுதல், தேவரீர் இல்லாத சமயங்களில் சோலையைப் பாதுகாத்தல் முதலிய பணிவிடைகளில் எதை நியமித்தாலும் செய்துவரக் காத்திருக்கிறேன் ‘ என்று மிக்க வணக்கத்தோடு விண்ணப்பஞ் செய்தாள். அவர் அவளது கபடசித்தத்தை உணராமல் உடன்பட்டு, தாம் அமுது செய்து மிகுந்த ப்ரஸாதத்தைக் கொடுத்துவர, அவளும் அதனை வாங்கி உட்கொண்டு பாத்திகொத்துதல் நீர்பரிமாறுதல் முதலிய குற்றேவல்களைத் தவறாது மிக்க ஊக்கத்துடனே எப்பொழுதும் செய்து கொண்டு சோலையைச் செழுமையாக வளர்த்து அவர்க்குத் தன்னிடத்து நம்பிக்கை யுண்டாகும்படி நல்லவள்போல நடித்துவந்தாள்.

இப்படி பல மாதங்கள் கழிந்தபின் ஒருநாள் பெருமழை பொழிகின்ற பொழுது பர்ணசாலையிற் பிரவேசித்திருந்த அவ்வந்தணர், வெளியிலே அவள் நனைந்து வருந்துதலைப் பார்த்து இயற்கையான ஜீவகாருண்யத்தினால் உள்ளே வந்து நிற்கும்படி நியமிக்க, அதுவே வியாஜமாக அவள் அருகில்வந்து தனது மென்மொழிகளாலும் மேனிமினுக்கினாலும் மனதைக் கவர்ந்து அவரைத் தன்வசமாக்கிச் சிலகாலம் அவருடனே யிருந்து, பின்பு பொருளில்லாத அவரைப் பொருள் செய்யாது கைவிட்டுத் தன் வீட்டிற்குச்சென்று சேர்ந்தவளவிலே, இவர் அவள் பிரிவை ஆற்றாமல் அவளது வீட்டுவாயிலில் சென்று தியங்கிநின்றார்.

அவ்வளவிலே, பிராட்டி பெருமாளை நோக்கி ‘நமக்குப் பலகாலமாகப் பணி செய்து வந்த விப்ரநாராயணன் அதனை முழுவதும் ஒழித்து ஒரு கணிகைக்குத் தொண்டுபூண்டு அவள் புறக்கணிக்கவும் மனந்திரும்பாது அவளில்லத்துப் புறக்கடை பற்றி ஏங்கி நிற்குமாறு தேவரீர் மாயைக்கு இலக்காக்கலாமோ? இதுவும் ஒரு திருவிளையாட்டு இருந்தபடி என்? இனி அவனை விரைவில் மீட்டு முன்போல ஆட்கொண்டு அந்தரங்க பக்தனாக்கியருள வேணும்’ என்று பிரார்த்திக்க, திருமாலும் திருமகள் வார்த்தைக்கு இசைந்து தமது திருக்கோயிற் பாத்திரங்களுள் ஒரு ஸ்வர்ணபாத்திரத்தை எடுத்துக்கொண்டு மனிதவடிவம் பூண்டு விப்ரநாராயணர்க்குத் தெரியாமல் அந்த வேசியின் மனைக்கு எழுந்தருளி வாசற்கதவு திறக்கச்சொல்ல, அவள் உள்ளிருந்தபடியே ‘ யார் நீ ? எங்கு வந்தாய்? ‘ என்று கேட்க நம்பெருமாள் ‘நான் அழகிய மணவாள தாஸன், விப்ரநாராயணரனுப்ப வந்தேன்’ என்று விளம்பியவளவில், தேவதேவி விரைந்து வந்து கதவைத் திறந்து ‘வந்தகாரியம் என்ன?’ என்று கேட்க, ஸ்ரீரங்கநாதன் தான் கொணர்ந்த பொற்கலத்தை அவள் கையிற்கொடுத்து ‘இதனை விப்ரநாராயணர் உனக்கு வரவிடுத்தார்’ என்று சொன்னவுடனே, அவள் அதிக ஆதரத்தோடு , அவரை

உள்ளே வரச்சொல்லும்’ என்று அநுமதி செய்தபின், அடியவர்க்கு எளியவனான எம்பெருமான் விப்ரநாராயணரிடம் வந்து ‘தேவதேவி உம்மை உள்ளே வரச்சொன்னாள்’ என்று சொல்லிச்சென்றார். அச்செவிக்கினிய செஞ்சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் அவர் பிரிந்தவுயிரைப் பெற்றாற்போல உள்ளங்குளிர்ந்து உடல்பூரித்து உள்ளேபோய்ச் சேர்ந்தார்.

அவ்விரவு கழிந்து பொழுதுவிடிந்தவாறே ஸ்வாமி ஸந்நிதியில் திருக்காப்பு நீக்கியவனவில், பாத்திரங்களுள் சிறந்ததொரு பொன்வட்டிலைக் காணாமல் கோயில் பரிகரத்தார் இராஜாங்கத்தார்க்கு அறிவிக்க, அவர்கள் உடனேவந்து களவு கண்டு பிடித்தற்பொருட்டு அர்ச்சகர் பரிசாரகர் முதலிய அந்தரங்க பரி ஜனங்களைப் பிடித்துப் பலவாறு தண்டித்து வருத்தியும் ஒருவர்மீதும் குற்றங்காணப்படாமையால் ஆங்காங்கும் புலம் விசாரித்து வருகையில் தேவதேவியின் மாளிகையிலிருக்கின்றதென அவள்வீட்டு வேலைக்காரியொருத்தியால் அறிந்து, அங்குச்சென்று அதனைக்கண்டு அவ்வீட்டிலுள்ளார் யாவரையும் குற்றவாளிகளாக்கி அரசன் முன்னிலையிற் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அப்போது அரசன் தாஸியை நோக்கிப் ‘பெருமாள் பாத்திரத்தை நீ கவரலாமோ?’ என்று கேட்க, அவள் ‘யான் இன்னாரதென்று அறியேன் ; அழகிய மணவாள தாஸ னென்பானொரு தூதன் மூலமாக விப்ரநாராயணன் எனக்கு இதனை வரவிட்டான் ; இவ்வளவே யான் அறிவது’ என்று உத்தரம் கூறினள். அதன்மேல் இராசன் விப்பிரரை விசாரிக்க, அவரும் ‘யான் ஒன்றும் அறியேன்; ஏழையான எனக்கு ஓர் ஏவலாளனும் இல்லை’ என்று சொல்ல, இங்ஙனம் இருதலை வாய்மொழியையுங் கேட்டபின் அரசன் ஆலோசித்து, களவாடிய பொருளை வாங்கியவர் செலுத்தவேண்டிய அபராதப் பொருளைக் கட்டும்படி வேசிக்கு விதித்து, அக்காணிக்கையையும் தங்கவட்டிலையும் பெருமாளுக்கு ஸமர்ப்பித்து, பொற்கள்வர்க்கு உரிய தண்டனையை ஆராய்ந்து விதிப்பதற்காக விப்ரநாராயணரைச் சிறையிலிட்டான்.

மீண்டும் ஒருகால் ஸ்ரீரங்கநாயகி – இவ்வடியவனைத் தேவரீர் லீலைக்கு விஷயமாக்காமல் கிருபைக்குப் பாத்திரமாக்கி யருள வேண்டும்’ என்று வேண்ட, பெருமாள் அதனை அங்கீகரித்து, அரசன் கனவிலே தாம் எழுந்தருளி தாஸி யிடத்துக் காதல்கொண்ட இவ்வந்தணனுடைய கருமத்தைக் கழித்தற்பொருட்டு நாமே பொன்வட்டிலைக் கொண்டு போய்த் தந்து இவனைத் தண்டிப்பித்தோம் : உண்மையில் இவன் கள்ளனல்லன் ; பரிசுத்தனே ‘ என்று தெரிவிக்க, அரசன் துயிலுணர்ந்தவுடனே கனாத்தோற்றத்தை மந்திரி முதலியோர்க்கு வியப்புடனே வெளியிட்டு விப்ரரை விடுவித்து உபசரித்து அனுப்பிவிட்டான்.

பிறவிப் பெருஞ்சிறையினின்றும் விடுபடுதற்கு ஒரு முற்குறியாகக் காவல் விடுபெற்ற பிராமணர் தம் துளவத்தொண்டு துறந்து வைதிக வொழுக்கமும் மறந்து பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கத்தில் ஆழ்ந்து இடங்கழி யாளனாய் அலைந்து பரிபவப்பட்டதை நினைத்து நினைத்து மிகவும் பச்சாத்தாபப்பட்டுப் பிராயச்சித்தஞ் செய்துகொள்ளமுயன்று பெரியோர்களைச்சார்ந்து தமது தோஷங்களை யெல்லாம் விடாது எடுத்து வாயாற் சொல்லி ‘இவற்றிற்குப் பிராயச் சித்தம் இன்னதென்று துணிந்து கூறியருளவேணும்’ என்று பிரார்த்திக்க, அவர்கள் பல நூல்களை ஆராய்ந்து ‘ஸகல பாபங்களும் பரிஹாரமாவதற்கு ஏற்ற ப்ராயச்சித்தம் பாகவதர்களுடைய ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்வதே’ என்று உய்யுமாறு கூற, அங்ஙனமே அவர் அதனைப்பெற்றுப் பருகிப் பரிசுத்தராயினர்.

பின்பு அவர் முன்போலவே பகவத் பாகவதபக்தி தலையெடுத்து “ஆடிப் பாடி யரங்கவோ’ என்றழைக்கும் தொண்டரடிப்பொடியாட நாம் பெறில், கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே!” (பெருமாள் திருமொழி) என்று பலவாறாக அருளிச் செய்யப்பட்ட நூற்பொருளிலே நுழைந்த நெஞ்ச முடையராய் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய ஸ்ரீபாததூளியாய் அவர்கட்குக் கீழ்ப் படிந்து அடிமைபூண்டு ஒழுக, அதனால் தமக்கு அதுவே நிரூபகமாகத் ‘தொண்டரடிப்பொடி ‘ என்று திருநாமம் பெற்றனர்.

அப்பால் தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதன் தத்துவஜ்ஞான மளித்துத் தனது பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சை என்ற ஐவகை நிலையையும் தெளிவாக விளக்கியருள, அவர் அவற்றில் அர்ச்சாவதாரத்தில் மிக்க ஈடுபாடுகொண்டு, அதிலும் எம்பெருமான் உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றினுள்ளும் திருவரங்கத்து நம்பெருமாளையல்லது பிறிதொருபொருளை அறியாராய் அப்பிரானுக்கே தாம் உள்ளவளவும் துளவத்தொண்டு பூண்டு வாழ்ந்து தமது அநுபவத்தைப் பிரபந்த மூலமாகப் பிறர்க்குத் தெரிவிக்கக் கருதி, திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற திவ்யப்ரபந்தங்களை அருளிச் செய்து உலகத்தாரை வாழ்வித்து நூற்றைந்து பிராயம் ஸ்ரீரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அநந்தரம் நலமந்தமில்லதோர் நாட்டை அடைந்தார்.

தன்பால் அன்பால்நிறைந்த விப்ரநாராயணர் ராஜதண்டனையில் நின்று மீண்டு தொண்டரடிப்பொடியாரான செய்தியை அறிந்த தேவதேவி, தானும் உய்வுபெற உன்னித் தனது பொருளனைத்தையும் அரங்கனுக்கே உரியதாக்கி விட்டுப் பரம ஸாத்விகையாய், கோயிலிலே திருவலகிடுதல் மெழுகுதல் கோலமிடுதல் முதலிய அடிமைத்தொழில்களைச் சிலகாலஞ் செய்து கொண்டிருந்து, ஊழ்வினையொழித்து, தனது ஜன்மத்தை ஸபலமாக்கி முடிவில் நற்கதிநண்ணினாள்.


தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம் முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.


” மன்னியசீர் மார்கழியிற் கேட்டையின்று மாநிலத்தீர்

என்னிதனுக் கேற்ற மெனிலுரைக்கேன்–துன்னுபுகழ்

மாமறையோன் தொண்ட ரடிப்பொடியாழ் வார்பிறப்பால்

நான்மறையோர் கொண்டாடும் நாள்.”

[உபதேசரத்தினமாலை]

ஜீயர் திருவடிகளே சரணம்.


ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த

திருமாலையின்

தனியன்.


(திருவரங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது.)

(இருவிகற்ப நேரிசை வெண்பா.)


மற்றொன்றும் வேண்டா மனமே! மதிளரங்கர்

கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்-உற்ற

திருமாலை பாடுஞ்சீர்த் தொண்டரடிப் பொடியெம்

பெருமானை யெப்பொழுதும் பேசு.


மனமே நெஞ்சே!
மற்று ஒன்றும் வேறொன்றும்
வேண்டா (உனக்கு விரும்ப) வேண்டியதில்லை
மதிள் அரங்கர் ஸப்த ப்ராகாரங்களோடு கூடிய ஸ்ரீரங்கத்துக்குத் தலைவரான நம்பெருமாளுடைய
கன்று இனம் மேய்த்த (கிருஷ்ணாவதாரத்தில்) கன்றுகளின் கூட்டங்களை மேய்த்தருளிய
கழல் இணை கீழ் இரண்டு திருவடிகளின் கீழே
உற்ற ஸம்பந்தம் பெற்றிருக்கிற
திருமாலை “திருமாலை“ என்னும் திவ்யப்பரபந்த்த்தை
பாடும் பாடியருளின
சீர் கல்யாணகுணங்களையுடைய
தொண்டரடிப்பொடி எம்பெருமானை தொண்டரடிப்பொடி யாழ்வாரை
எப்பொழுதும் ஸர்வகாலமும்
பேசு அநுஸந்திக்கக்கடவாய்.

நெஞ்சே! நீ உஜ்ஜீவிப்பதற்காக எம்பெருமானையாவது மற்றொரு புருஷார்த்தத்தையாவது பற்றவேண்டா; பாகவதர்கட்கு அடிமையையே நிரூபகமாகக் கொண்ட தொண்டரடிப்பொடியாழ்வாரது திருநாமத்தையே எப்போதும் அநுஸந்தித்திருப்பாயாகில் உனக்கொரு குறையுமில்லை. இவ்வாழ்வார் நம்பெருமாள் திருமுடிக்குமாத்திரம் மாலை சூடினவரல்லர், திருவடிகட்கும் திருமாலை ஸமர்ப்பித்தவர் ; அவர் திருவடிகளே உனக்குத் தஞ்சமென்றபடி,

மதிளரங்கர் என்றதனால் ஏழு திருமதில்களுக்குள்ளே எழுந்தருளி யிருப்பவரென்றால் அவர் நமக்குப் பெறுதற்கு அரியவரோ என்று சங்கைபிறக்க, கற்றினம் மேய்த்த இத்யாதியால் ஸௌலப்ய ஸௌசீல்யங்களைக் கூறுகிறபடி. கன்று + இனம், கற்றினம்:

மூன்றாமடியில் வெண்டளை தவறுகின்றது; திருமாலை பாடுஞ்சீர்த் தொண்டர்பொடியெம்” என்றாவது, ” தொண்டரடித் தூளெம்” என்றாவது பாடமிருந்திருக்கும்; காலகதியில் மாறுபடஓதப்பட்டு வருகின்றது என்பர்.

ப்ரதம பர்வமெனப்படும் பகவத் விஷயத்தைப் பற்றினவர்களுக்கு அந்த பகவானே எம்பெருமானாயிருப்பதுபோல, சரமபர்வ மெனப்படும் பாகவதவிஷயத்தைப் பற்றினார்க்கு இவ்வாழ்வார்தாமே எம்பெருமானார் என்பது தோன்ற தொண்டரடிப்பொடியெம்பெருமான் எனப்பட்டதென்க.


தனியன் உரை முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.


திருமாலை உரையின் அவதாரிகை.


நித்யஸுரிகளைப்போலே ஸம்ஸாரிகளும் எம்பெருமானை அநுபவித்து ஆநந்தமடையக் கடவராயிருந்துவைத்தும் அதில் நசையின்றி இந்நிலத்திலேயே மீண்டுமீண்டும் இருப்பது பிறப்பதாய்ப் படும்பாடுகளைக் கண்ணுற்ற திருமகள் கொழுநனான எம்பெருமான் இவர்களை உய்வித்தற் பொருட்டுத் தான் பலபல சாஸ்திரங்களைக் காட்டிக் கொடுத்தருளினன். அந்நூல்களில் உஜ்ஜீவநோபாயங்கள் பல்லாயிரமெடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் அநுஷ்டிப் பதற்கு மிகவும் அரியன வாதலால், “***” – ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம பேஷஜம்-கலௌ நாஸ்த்யேவ நாஸ்த் யேவ நாஸ்த்யேவ கதிரந்யதா.” என்றிவை போல்வன பலபிரமாணங்களின் படி எம்பெருமானுடைய திருநாமத்தை ஸங்கீர்த்தநம் பண்ணுவதற்கு மேற்பட்ட வழி கிடையாதென்று இறுதியாக அறுதியிடப்பட்டமையால், ஒப்புயர்வற்ற சிறப்புப்பெற்ற அத்திருநாம ஸங்கீர்த்தநத்தாலே பேறுபெற்ற இவ்வாழ்வார் அத்திருநாமத்தின் வைபவத்தைப் பேசுகிறார் – இத்திருமாலையால்.

பாண்டவர்களுக்கு இப்பால் நாலைந்து தலைமுறை சென்றவளவிலே, சதா நீகன் என்பானொரு ராஜா இருந்தான் ; அவன் நற்குலத்திற் பிறந்தவனாகையால் பரமஸாத்விகனாய் அறநெறி தவறாது அரசாண்டுவருகையில் ஒருகால் ஸ்ரீ சௌநக பகவான் பக்கலிலே சென்று’ உடலுக்கே கரைந்துநைந்து திரிகிற ஸம்ஸாரிகளுக்கு உஜ்ஜீவநத்திற்கு உறுப்பாயிருப்பதொன்றை அருளிச்செய்ய வேணும்” என வேண்ட; சௌநகபகவான், “காலமோ கலியாயிருந்தது; தீவினை மிகுதியாலே வேறொன்றுக்கும் அதிகாரிகளில்லை ; ஸர்வாதிகாரமான பகவந்நாமஸங்கீர்த்தநமே ஆத்மாக்களுக்கு உஜ்ஜீவநோபாயமாயிருப்பது” என்றருளிச் செய்தமையை வெளியிடுகிற ஸ்ரீவிஷ்ணுதர்மம் இத்திருமாலைக்கு அடியா யிருக்கும்.

ஆழ்வார்களில் முதலாழ்வார்கள், மேன்மைக்கு எல்லையான பரத்வத்திலும் நீர்மைக்கு எல்லையான திருவேங்கடமலையிலும் ஆழங்காற்பட்டனர், நம்மாழ்வாரூம் பெரியாழ்வாரும் க்ருஷ்ணாவதாரத்திலே ஊன்றினர். திருமழிசைப்பிரான் – அந்தர்யாமித்வத்திலும் சில திருப்பதிகளிலும் மண்டினர்; குலசேகரப்பெருமாள் ராமாவதாரத்திலே ஆழ்ந்தனர்; திருப்பாணாழ்வார் திருவேங்கடத்திலும் திருவரங்கத்திலும் உகந்தனர்; திருமங்கையாழ்வார், உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் மண்டினார்; பெரிய பெருமாளையன்றி வேறொருவரை அறியாதவராய்த்து- இவ்வாழ்வார்.

இக்திருமாலையும் மிக்க சுருக்கமும் மிக்க பெருக்கமுமின்றி நாற்பத்தைந்து பாட்டாய், சொல்தெளிவாலே பரம்பொருளை நன்கு விளக்கக்கூடியதாயிருத்தலால் மிக்க சிறப்புறும்.

Dravidaveda

back to top