இரண்டாந் திருவந்தாதி அவதாரிகை

ஸ்ரீ:

பூதத்தாழ்வார் அருளிச் செய்த


இரண்டாந் திருவந்தாதி


இது – மயர்வர மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்களுள் இரண்டாமவரான பூதத்தாழ்வாரருளிச் செய்ததும், நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாக ஸ்ரீமந் நாதமுனிகளால் வகுக்கப்பட்ட இயற்பாவில் இரண்டாவது பிரபந்தமுமாகும். பொய்கையாழ்வருடைய திருவந்தாதிப் பிரபந்தத்திற்கு அடுத்தபடியாக இத்திருவந்தாதி அவதரித்தது பற்றி இரண்டாந்திருவந்தாதி யென்று இதற்குத் திருநாமமிட்டு வழங்கலாயினர் முன்னோர்.

இப்பிரபந்த மருளிச்செய்த பூதத்தாழ்வாருடைய திருவவதார வரலாறு முதலியன முதற்றிருவந்தாதியுரைத் தொடக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளன அங்கே கண்டுகொள்க.

எம்பெருமானை அநுபவிப்பதற்கு இன்றியமையாத ஸாமிக்ரிகள் – பரபக்தி பரஜ்ஞாநம் பரமபக்தி என்கிற ப்ரேமதசா விசேஷங்கள் மூன்றாம் இவற்றுள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்கிற ஆவல் பரபக்தி, அவனை ஸாக்ஷாத்கரித்தல் பரஜ்ஞாநம் பின்பு மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேணுமென்னும் ஆவல் பரமபக்தி. (அன்றியே) எம்பெருமானோடு கூடினபோது ஸுகிக்கும் படியாகவும் பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவுமிருக்கை பரபக்தி, பகவானுடைய பூர்ண ஸாக்ஷாத்காரம் பரஜ்ஞாநம்; அவனுடைய அநுபவம் பெறாவிடில் நீரை விட்டுப்பிரிந்த மீன்போலே மூச்சு அடங்கும்படியிருக்கை பரமபக்தி என்றும் நம்பூருவாசாரியர்கள் நிர்வஹிப்பர். “***”= “தர்சநம் பரபக்திஸ்ஸயாத் பரஜ்ஙாநம்து ஸங்கம: , புநர்விச்லேஷபீருத்வம் பரமா பக்திருச்யதே” என்றொரு காரிகையுமுண்டு.

இப்படிப்பட்ட பரபக்தி முதலியன மூன்றும் முதலாழ்வார்கள் மூவர்க்கும் தனித்தனியே குறைவின்றி உண்டாயிருக்குமானாலும் ஓரொருவர்க்கு ஒவ்வொன்றே பரஜ்ஞாந பரமபக்திகள் சாயை மாத்திரம் தோன்றிப் பரபக்தியேவிஞ்சியிக்கும் பூதத்தாழ்வார்க்குப் பரபக்தி முற்றிப் பரிபக்குவமாகி மேலே பரமபக்தி தோன்றக் காரணமான பரஜ்ஞாநமே விஞ்சியிருக்கும். பேயாழ்வார்க்குப் பரமபக்தியே விஞ்சிப் பரபக்தி பரஜ்ஞாநங்களிரண்டும் அதற்குள்ளே மறைந்து கிடக்கும். இம்மூவருடைய அருளிச்செயல்களினின்றும் இந்த நிலைமைகளை நம் பூருவர்கள் கண்டறிந்து இங்ஙனே வகுத்தருளினர். இங்ஙனே ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்றின் ப்ரகாசமும் மற்றவற்றின் அப்ரகாசமும் எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினாலாயது. ஆகவே இதில் எவ்வகையான ஆக்ஷேபத்திற்கும் இடமில்லை. இப்பரபக்தி முதலியவை மூன்றும் முக்தியிலே உண்டாகக் கூடியவையாயினும மயர்வற மதிநலமருளப்பெற்ற ஆழ்வார்கட்கு மாத்திரம் இங்கிருக்கும்போதே எம்பெருமானுடைய திருவருளால் விளைந்தனவாம். இனி, இவற்றை எம்பெருமானிடத்துப் பிரார்த்தித்துப் பெறுதலும் உண்டு “பரபக்தி ப்ரஜ்ஞாந பரமபக்த்யேகஸ்பாவம் மாம்குருஷ்வ“ இத்யாதி சரணாகதி கத்ய ஸ்ரீஸூக்தி காண்க.

பொய்கையாழ்வார் முதற்றிருவந்தாதியிலே ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகள் நிர்ஹேதுகமான எம்பெருமானருளாலே தோன்றிய பரபக்தி தசையை அடைந்துள்ள ஜ்ஞாநவிசேஷத்தாலே ஸாக்ஷாத்கரித்தநுபவித்து, அத்திருமாலுக்கு அடைந்துள்ள சேஷமான விபூதியை ஸ்வதந்த்ரமென்றும் அந்யசேஷமென்று பிரமிக்கிற அஜ்ஞாநவிருள் நீங்கும்படி பூமி முதலிய பதார்த்தங்களைத் தகளி முதலியனவாக உருவகப்படுத்திக் காட்டி, உபய விபூதியுக்தனான எம்பெருமானே சேஷியென்றும், அவனுக்கு சேஷமாயிருப்பதே ஆத்ம ஸ்வரூபமென்றும் அவனது திருவடிகளிற் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தமென்றும், அதனைக் கைப்படுத்தித் தரும் உபாயமும் அவன் திருவடிகளே யென்றும் நிஷ்கர்ஷித்துப் பேசினார்.

இத்திருவந்தாதியில் பூதத்தாழ்வார் – கீழே பொய்கையாழ்வாரோடு கூட விருந்து எம்பெருமானுடைய குணங்களை யநுபவித்ததனால் அவனது அருளாலே வந்த தமது பரபக்தியானது பரஜ்ஞாந தசையை அடையும்படி பரிபக்குவமாகி வளர, பரஜ்ஞாநதசையையடைந்த அந்த ப்ரேம விசேஷத்தாலே எம்பெருமானது தன்மைகளை முழுவதும் ஸாக்ஷாத்கரித்தநுபவித்தார். தம்முடைய அந்த அநுபவத்தை நாட்டிலுள்ளாரும் அறிந்து அநுஸந்தித்து வாழுமாறு இப்பிரபந்த ரூபமாக வெளியிட்டருளுகிறார்.


[பிரபந்த சாரம்]

“கடன்மல்லைக் காவலனே பூதவேந்தே
காசினிமே லைப்பசியி லவிட்டநாள்வந்
திடர்கடியுந் தண்கோவ லிடைகழிச்சென்
றிணையில்லா மூவருமாயிசைந்தேநிற்க
நடுவிலும்மிலொருவருமன் றறியாவண்ணம்
நள்ளிருளில் மால்நெருக்க நந்தாஞானச்
சுடர் விளக்கேற்றிய வன்பேதகளியான
தொடைநூறுமெனக்கருள்செய் துலங்கநீயே.“


———-

ஸ்ரீ

ஆழ்வார் திருவடிகளே சரணம்


இரண்டாந்திருவந்தாதி

தனியன்உரை

(திருக்குருகைப்பிரான் பிள்ளானருளிச்செய்த தனியன்)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)


என்பிறவி தீர விறைஞ்சினே னின்னமுதா
அன்பே தகளி யளித்தானை – நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துக்கள் சேருங் கடன்மல்லைப்
பூதத்தார் பொன்னங் கழல்


இன் அமுது ஆ மதுரமான அம்ருதமாக
அன்பே தகளி அளித்தான் “அன்பே தகளியா“ என்று தொடங்கும்
திவ்ய ப்ரபந்தத்தை யருளிச்
செய்தவரும்
நன் புகழ் சேர் நல்ல கீர்த்தி சேரப் பெற்று
சீதத்து ஆர் முத்துக்கள் சேரும் குளிர்ச்சி பொருந்திய முத்துக்கள்சேர்ந்துள்ள

கடல்மல்லை திருக்கடன் மல்லைத் தலத்தில் திருவவதரித்த
பூதத்தாரை பூதத்தாழ்வாருடைய
பொன் அம்கழல் பொன்போலழகிய திருவடிகளை
என்பிறவி தீர இறைஞ்சினேன் எனது பிறவித்துயர் நீங்கும்படி வணங்கினேன்.

***- பூதத்தாழ்வரை வணங்கினால் பிறப்பது மிறப்பதுமாகிற ஸம்ஸாரம் தொலைந்து மோக்ஷம் ஸித்தமாமாகையாலே அவரை வணங்கினேனென்கிறார். 1. “தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்“ என்னுமாபோலே பக்தாம்ருதமாகத் திருவந்தாதிப் பிரபந்தத்தை அருளிச்செய்தவரும் விலக்ஷணமான திருக்கடல்மல்லைத் திருப்பதியில் திருவவதரித்தவருமான பூதத்தாழ்வாரை வணங்கினே னென்றாராயிற்று 2. “அமுதன்ன சொன்மாலையேத்தித் தொழுதேன்“ என்று இவ்வாழ்வார்தாமே அருளிச்செய்தலால் “இன்னமுதா அன்பே தகளியளித்தான்“ என்றது நன்கு பொருந்தும். “அளித்தானை“ என்றவிடத்துள்ள இரண்டனுருபு (ஐ) பிரித்து பூதத்தார் என்றவிடத்துக் கூட்டப்பட்டது, அளித்தானாகிய பூதத்தாரை என்றபடி. பூதத்தாரை – உருபுமயக்கம், பூதத்தாருடைய என்று பொருள். [1. திருவாய்மொழி-9-4-9, 2. இரண்டாந்திருவந்தாதி-85 ]


நன்புகழ்சேர் என்பதும் முத்துக்கள் சேரும் என்பதும் கடன் மல்லைக்கு விசேஷணங்கள். தலசயனத் துறைவாரையும் பூதத்தாழ்வாரையும் தன்னிடத்துக் கொண்டிருப்பதே கடல்மல்லைக்கு நன் புகழாவது. சீதம் – வடசொல், குளிர்ச்சி முத்துக்குக் குளிர்ச்சி இயல்பு. முத்துக்கள் என்ற பன்மைக்குச் சேர ஸ்வாரஸ்யமாக ஒரு பொருள் கூறலாம். மூன்றுவகை முத்துக்கள் இத்தலத்திலுண்டு, கடலில் தோன்றும் முத்து, 3.“வானவரால் வணங்கப்படும் முத்து“ என்னப்பட்ட எம்பெருமானாகிற முத்து, இவ்விபூதியிலிருந்துகொண்டே முக்தர் என்னும்படியாகவுள்ள (கரை கடந்த முத்தான) பூதத்தாழ்வாராகிற முத்து –ஆக மூன்று வகை முத்துக்கள் சேருங் கடன்மல்லையாம். [3. பெரிய திருமொழி 7-3-8]


பூதத்தார் – வடமொழியில் “***” (பூ – ஸ்த்தாயாம்) என்கிற தாதுவடியாகப் பிறந்தது பூதம் என்னுஞ் சொல். ஸத்தைபெற்றது என்று பொருள். எம்பெருமானுடைய திருக்குணங்களை யநுபவித்தே ஸத்தைபெற்றாரென்னுங் காரணம்பற்றிப் பூதத்தாழ்வாரென்று திருநாமமாயிற்றென்றுணர்க. திருவாய்மொழியில் (5-2-1) “கடல்வண்ணன் பூதம்“ என்றவிடத்து வியாக்கியானங்களில் இப்பொருள் விளங்கக் காண்க.


தனியன் உரை முற்றிற்று.

Dravidaveda

back to top