ஸ்ரீ:


ஆழ்வார் திருவடிகளே சரணம்.


திருமழிசைப்பிரான் திருவாய்மலர்ந்தருளிய

நான்முகன் திருவந்தாதி.


பெருமாள் கோயில் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமி

அருளிய “ திவ்யார்த்த தீபிகை” யென்னும்

உரையுடன்,


$ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்.


நான்முகன் திருவந்தாதி.


இது மயர்வற மதிநலமருளப்பெற்ற ஆழ்வார்களுள் நான்காமவரான திருமழிசைப்பிரான் திருவாய்மலர்ந்தருளியதும் நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாக ஸ்ரீமந்நாதமுநிகளால் வகுக்கப்பட்ட இயற்பாவில் நான்காவது பிரபந்தமுமாகும். இப்பிரபந்தம் “நான்முகனை” என்று தொடங்கப் பெற்றதனால் முதற் குறிப்பென்னு மிலக்கண வகையால் நான்முகன் திருவந்தாதியென்று இதற்குத் திருநாமமிட்டு வழங்கலாயினர் முன்னோர்: ‘அமலனாதிபிரான்’, ‘கண்ணிநுண்சிறுத்தாம்பு’ என்பன போல. கீழ்க்கழிந்த முதலாழ்வார்களின் திருவந்தாதிகள் மூன்றுக்கும் பின்னர் இத்திருவந்தாதி திருவவதரித்தமைபற்றி இதனை நாலாந் திருவந்தாதி’

என்றும் ‘ நான்காம் திருவந்தாதி’ என்றும் வழங்கலாமென்பர் சிலர்; நான்முகன் திருவந்தாதியென வழங்குதலே ஸம்ப்ரதாயமென் றுணர்க.

$ இவ்வாழ்வாரது சரித்திர வரலாறுகள் முதலாயிரத்தைச் சேர்ந்த திருச்சந்த விருத்தத்தின் உரைத் தொடக்கத்தில் காணத்தக்கன.

பொய்கை பூதம் பேயாழ்வார்களென்னும் முதலாழ்வார்கள் மூவரும் எம்பெருமானது நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷத்தினாற் பெற்ற பத்திப் பெருங்காதலினால் அவன் படிகளை முற்றுங்கண்டு அநுபவித்து அவ்வநுபவ பரீவாஹரூபமான நடை விளங்கு தமிழ் மாலைகளாலே ஸ்ரீமந் நாராயணனே பரதெய்வமென்று நிஷ்கர்ஷித்தருளினர் மூன்று திருவந்தாதிகளிலும். அவர்கட்கு அடுத்த ஆழ்வாராகிய இத்திருமழிசைப்பிரானும் எம்பெருமானுடைய அநுக்ரஹவிசேஷத்தாலே மயர்வற மதிநலம்பெற்று அவனுடைய திவ்யாத்மஸ்வரூபத்தையும் ஸ்வரூபத்தைப்பற்றின திருக்கல்யாண குணங்களையும் திவ்யமங்கள விக்ரஹத்தையும் அதனை இடை விடாது அநுபவிக்கும் பாக்கியம் வாய்ந்த பிராட்டிமார்களையும், அவர்களுமவனுமான சேர்த்தியிலே கிஞ்சித்கரிக்கும் ஸூரிகளையும் கைங்கரியத்திற்கு ஏகாந்தமான பரமபதத்தையும் லீலாவிபூதி யோகத்தையும் உள்ளபடி ஸாக்ஷாத்கரித்து அநுபவித்துக் கொண்டு மார்க்கண்டேயாதிகளைப்போலே நெடுங்காலம் இந்த ஸம்ஸார மண்டலத்திலே காலஞ்சென்றது மறியாதே எழுந்தருளியிருந்து நாட்டில் சேதநர் பலரும் ரஜஸ் தமோ குணங்கட்கு வசப்பட்டும் வசநாபாஸங்களைக் கொண்டும் தேவதாந்தரங்களை வழிபடு தெய்வமாகக்கொண்டு வைதிக மார்க்கத்தினின்று நழுவிக் குத்ருஷ்டி மார்க்கத்தைப்பேணி மேன் மேலும் ஸம்ஸாரத்தையே வளரச்செய்து கொண்டு அநர்த்தப்படுகிறபடியைக் கண்டு, பிறர்படுமநர்த்தம் பொறுக்கமாட்டாத பரம க்ருபையினால் தேவதாந்தர பரத்துவத்தை நிராகரித்து ஸ்ரீமந்நாராயண பாரம்யத்தை ஸ்தாபித்து அனைவரும் பகவத்ப்ரவணராம்படி திருத்தியருளுகிறார், இப்பிரபந்தத்தால்.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.


நான்முகன் திருவந்தாதி தனியன் உரை


சீராமப்பிள்ளை யருளிச் செய்த தனியன்


இருவிகற்ப நேரிசை வெண்பா


நாராயணன் படைத்தான் நான்முகனை, நான்முகனுக்

கேரார் சிவன்பிறந்தா னென்னுஞ்சொல்— சீரார்

மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே!, மொய்பூ

மழிசைப் பரனடியே வாழ்த்து.பதவுரை.நெஞ்சமே மனமே!,
நாராயணன் நான்முகனை படைத்தான் நாராயணன் பிரமனை ஸ்ருஷ்டித்தான்
நான்முகனுக்கு அந்தப் பிரமனுக்கு
எர் ஆர் சிவன் பிறந்தான் சீர்மைமிக்க சிவன் புத்திரனாகப் பிறந்தான்
என்னும் சொல் என்று தெரிவிக்கிற பாசுரத்தை
முதலிலே உடைத்தான
சீர் ஆர் மொழி (நான்முகன் திருவந்தாதி என்கிற) திவ்ய பிரபந்தத்தை
செப்பி அநுஸந்தித்து
வாழலாம் நாம் உஜ்ஜீவிக்கலாம்
மொய் பூ மழிசை செறிந்த பூக்கள் நிரம்பிய திருமழிசையில் திருவவதரித்தருளின
பரன் பக்திஸார முனிவனுடைய
அடியே திருவடிகளையே
வாழ்த்து வாழ்த்திக்கொண்டிரு.


* * *–நாம் உஜ்ஜீவிக்க வேண்டுமாகில் நான் முகன் திருவந்தாதியை அநுஸந்தித்தே ஆக வேண்டும்; அதாவது- அதனைக் கண்ட பாடம் செய்தல் வேண்டும்; அது செய்யவேண்டில் அப் பிரபந்தத்தைத் திருவாய் மலர்ந்தருளிய திருமழிசைப்பிரானது திருவருள் இன்றியமையா தாதலால் அவ்வருள் பெறுதற்காக அவ்வாழ்வாருடைய திருவடித் தாமரைகளைப் போற்றவேண்டும் என்கிறது இதில்.தனியன் உரை முற்றிற்று.

Dravidaveda

back to top