பெரிய திருமொழி – அவதாரிகை.


சோழமண்டலத்திலே திருமங்கை யென்று ஒரு நாடு உண்டு. அதில், திருவாலி திரு நகரியென்கிற திவ்யதேசத்தின் ஸமீபத்திலுள்ள திருக்குறையலூரிலே, நான்காம் வருணத்தில் கள்ளக் குடியில், சோழராஜனுக்குச் சேனைத் தலைவனாகவுள்ள ஒருவனது குமாரராய் ஒருத்தர் கலியுகத்தில் முந்நூற்றுத் தொண்ணூற் றெட்டாவதான நள வருஷத்திற் பூர்ணிமை பொருந்திய வியாழக்கிழமையில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகா நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இப்படி அவதரித்த இவர் நீல நிறமுடையராயிருந்ததுபற்றி இவர்க்குத் தந்தை நீலனென்று நாமகரணஞ் செய்தார்.

இவர் தமது குடிக்கு ஏற்ப இளமையிலே ஆயுதப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றுச் சோழராஜனையடுத்துச் சேனாதிபதி உத்தியோகத்தில் அமர்ந்து, கொற்றவனுக்குக் கொடியவரோடு கடும்போர் நேருங்காலங்களில் படைகளோடு முன் சென்று பராக்கிரமத்தாற் பகைவென்று பரகாலனென்று ப்ரஸித்தி பெற்றார். இவருடைய இப்படிப்பட்ட ஒப்பற்ற பராக்கிரமத்தையுணர்ந்த கொற்றவன் இவரை அத்திருமங்கைநாட்டுக்கு அரசராக்கி முடி சூட்டினான்.

இவ்வாறு குறு நிலத்தலைமைபூண்ட திருமங்கைமன்னன் அரசாங்க காரியத்தைக் குறைவின்றி நடத்திப் புகழ்பெற்று இசை நாடகங்களில் பிரியமுடையராய் எப்பொழுதும் பல இள மங்கையர் இன்னிசை பாடக் கேட்பதையும் நன்னடம் பயிலக் காண்பதையுமே பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

இப்படியிருக்கையில், அந்நாட்டில் “அண்ணன் கோயில்” என்று வழங்குகின்ற திருவெள்ளக்குளமென்னுந் திருப்பதியில் மிகச் சிறந்ததொரு தாமரைப் பொய்கையில் தேவலோகத்து அப்ஸரஸ் ஸ்த்ரீகள் பலர் வந்து ஜலக்ரீடை செய்து செல்ல, அவர்களுள் திருமாமகளென்பாள் தன் இச்சையால் தெய்வவடிவத்தை விட்டு மானுட வடிவங்கொண்டு தனியே குமுதமலர் கொய்து நின்றாள். அங்கு அனுஷ்டாநத்திற்காக வந்த ஒரு வைஷ்ணவ வைத்யன் அவளைக்கண்டு செய்தி விசாரிக்க, அவள் ”ஸ்வாமி! என்னோடு கூட வந்த மாதர்கள் என்னை விட்டுப் போய்விட்டார்கள்; தனியிருந்து அலைகின்ற என்னை நீர் பாதுகாத்தருளவேணும் ” என்று வேண்டினாள். மலடனான அம் மருத்துவன் மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத் தன் மாளிகைக்கு அழைத்துப்போய் மனையாள்வசம் ஒப்பித்து, குமுதமலர் கொண்டு நின்றது காரணமாகக் குமுதவல்லி யென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்துவந்தான். வருகையில், அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய பிராயம் வந்தவளவிலே அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு “மஹா குணவதியான இப்பெண்ணுக்கு ஏற்ற கணவன் உலகத்திலுளனோ” என்ற கவலையும் உடன் வந்தது.

அப்பொழுது அவளுடைய ரூபலாவண்ய ஸௌந்தரியங்களையும் குணாதிசயங்களையும் சாரர்கள் திருமங்கை மன்னனிடம் கொண்டாடிக் கூற, உடனே அவர் அவளழகைப் பார்ப்பதற்கு ஆசைகொண்டு ராஜ்யகாரியங்களை இருந்தது இருந்தபடியே விட்டுத் திருநாங்கூரைச் சார்ந்ததான திருவெள்ளக்குளத்துக்கு வந்து அந்த வைத்தியனிருக்கும் வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷணை செய்துகொண்டிருக்கையில் அக்கன்னிகை கண்ணெதிரிற்படக் கண்டு வியந்து காதல்விஞ்சி அவள் வரலாற்றை வினாவி அதைத் தந்தையால் அறிந்தவளவில், ‘இவளை எனக்குத் தாரைவார்த்துக் கொடுக்கவேணும்’ என்று அவரை வணங்கிக் கேட்டார். வஸ்திரபூஷணம் முதலியவற்றையும் மிகுதியாக முன்வைத்தார். இவர் இங்ஙனம் விரும்பிக் கேட்டதற்குத் தந்தைதாயர் இசைந்து அப்படியே கன்னிகாதானஞ் செய்ய விருக்கையில், குமுதவல்லி குறுக்கிட்டு “திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு வைணவர்க்கேயன்றிப் பிறர்க்கு வாழ்க்கைப்படமாட்டேன்” என்று தன் உறுதியைத் தெரிவித்தாள். அது கேட்ட திருமங்கைமன்னன் உடனே திரு நறையூர்க்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பியென்னு மெம்பெருமானுடைய திருமுன்பே நின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில் திருவிலச்சினை பெற்றுப் பன்னிரண்டு திருமண்காப்புகளும் சாத்திக்சொண்டு விவாஹார்த்தமாக விரைவில் வந்து சேரக் கண்டு மீண்டும் குமுதவல்லி ‘நீர் ஓராண்டளவும் நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தையும் போனகஞ் செய்த சேஷத்தையும் உட்கொண்டாலன்றி உம்மை நான் பாணிக்கிரஹணஞ் செய்துகொள்ள மாட்டேன்’ என்ன; அவளிடத்துக் கொண்ட ஆசையின் கனத்தால் அவர் இவ்வரிய விதத்தைச் செய்து முடிப்பதற்கும் உடன்பட்டு அங்ஙனமே செய்வதாகச் சபதஞ் செய்துகொடுக்க, அதன்பின் இருவர்க்கும் திருமணம் நடைபெற்றது.

பின்பு திருமங்கை மன்னன் பகவதாராதனத்திற்காட்டிலும் பரம பாவநமான பாகவதாராதனத்தைச் செய்துகொண்டு தம் அரசனுக்குச் செலுத்த வேண்டிய பகுதிப்பொருளு முட்படச் செல்வமுழுவதையுஞ் செலவிட்டுவர, அச்செய்தியைச் சிலர் சொல்லக் கேட்ட கொற்றவன் கோபங்கொண்டு இவர் பக்கல் திறை வாங்கிவருவதற்காகத் தன் சேவகரை அனுப்பினான். அவர்கள் வந்து கேட்டதற்கு இவர் ‘காலை, பகல், மாலை, இரவு, நாளை, பின்னிட்டு’ என்பதாகச் சில தவணைகளைச் சொல்லிக்கொண்டு கால விளம்பஞ் செய்து வந்தார். பின்பு அச்சேவகர்கள் கடுமையாக நிர்ப்பந்தஞ் செய்யவே நீலர் வெகுண்டு அவர்களை வெருட்டித் துரத்தினார். அதனையறிந்த அரசன் சீற்ற முற்றுத் தனது ஸேனாபதியை விளித்து ‘நீ சென்று பரகாலனைப் பிடித்து வா’ என்று நியமிக்க, அவன் அங்ஙனமே பல சேனைகளோடு வந்து இவரை வளைத்துப் பிடிக்கத் தொடங்க, இவர் ஆடல்மா என்று பிரசித்தமான தமது குதிரையின்மீது ஏறிக்கொண்டு சேனைகளோடு முன் சென்று எதிர்த்துப் பொருது அவனை முதுகு காட்டி ஓடச்செய்ய, அஃதுணர்ந்த அரசன் தானே ஸேனா ஸமூஹங்களோடு வந்து இவரை வளைய, இவர் தம் படைவலிமையால் அப்படைக்கடலைக் கடந்து தமது திறமையைக் காட்டிப் பொருகையில், தாம் அருள் மாரி யாதலால் அரசனைக் கொல்லலாகாதென்று சிறிது காலம் போர்நிறுத்தி நின்றார்.

அதுவே ஸமயமாக அரசன் தந்திரமாய் நல்வார்த்தை சொல்லிக்கொண்டு அருகில் வந்து ‘உமது பராக்கிரமத்தைக்கண்டு மிகமகிழ்ந்தோம்’ என்று கொண்டாடி விரைவில் கப்பஞ் செலுத்திவிடும்’ என்று சொல்லி இவரை மந்திரிவசமாக்கிவிட்டுத் திரும்பிப் போயினன்.

அந்த மந்திரி இவரைப் பகுதிப் பொருளுக்காகப் பிடித்து ஒரு தேவாலயத்திற் சிறைவைக்க, அங்கு இவர் உணவு இல்லாமல் மூன்று நாள் பட்டினி கிடக்கையில், கச்சிநகர்த்தலைவனான பேரருளாளன் இவரது கனவிலே வந்து காட்சி தந்து ‘உனக்கு வேண்டிய பொருள் தருகின்றோம், வா’ என்று சொல்லியருளினான். இவர் அக்கனவை நனவாகவே நம்பி எம்பெருமானது திருவருளுக்கு மகிழ்ந்து பொழுது விடிந்ததும் மந்திரியை நோக்கிக் “காஞ்சீபுரத்திலே நிதி இருக்கின்றது; அங்கு வந்தால் தருவேன்” என்று கூற, அவன் அதனை அரசனுக்கு அறிவித்து அனுமதி பெற்றுப் பல பரிவாரங்களால் காவல் செய்துகொண்டு கச்சிப்பதிக்கு இவரை அழைத்து வந்தான். அங்கு இவர் நிதியைத் தேடிக்காணாது கவலைக்கடலில் மூழ்கி மூர்ச்சிக்குமளவிலே, பேரருளாளனாகிய வரந்தரும் மாமணிவண்ணன் மீண்டும் கனவில் எழுந்தருளி அபயமளித்து வேகவதி யாற்றங்கரையில் நிதியுள்ளவிடத்தைக் குறிப்பிட்டு அருளிச்செய்தபின்பு, இவர் தெளிந்தெழுந்து பொருள் கண்டெடுத்து அரசன் கடமையைச் செலுத்தி மிகுந்த தனத்தைப் பாகவதாராதனத்துக்கு வைத்துக் கொண்டார்.

அதன்பிறகு மந்திரி பொருளைக் கொண்டுபோய்ப் பிரபுவின் முன்னிலையில் வைத்து, நடந்த செய்திகளைத் தெரிவிக்க, அவ்வரசன் இவரது மஹிமையை ஆராய்ந்து அச்சமும் ஆச்சரியமுங் கொண்டு உடனே இவரை வரவழைத்து விசேஷமாக உபசரித்து, தான் செய்த பிழைகளை யெல்லாம் பொறுத்தருளும்படி பிரார்த்தித்து, அநந்தரம் ‘திரௌபதிக்குப் புடவை சுரந்ததுபோல மாயவனருளாற் பெருகிய இப்பொருளைக் கோச கிருஹத்தில் வைக்கலாகாது’ என்று துணிந்து அப்பொருள் முழுவதையும் இவரைப்பட்டினி வைத்த பாவந் தீருகைக்காகப் பலபல பாகவதர்கட்குக் கொடுத்துப் பரிசுத்தனாயினான்.

பிறகு பரகாலர், சேஷித்த பொருளைக்கொண்டு ததீயாராதனம் நடத்தி வருகையில் எல்லாம் செலவாய்விட்டதனால் கைப்பொருளொன்றுமின்றி, வழிபறித்தாகிலும் பொருள் ஸம்பாதித்து அக்கைங்கரியத்தைத் தடையற நடப்பிக்கத் துணிந்து, நீர்மேல் நடப்பான் நிழலிலொதுங்குவான் தாளூதுவான் தோலாவழக்கன் என்ற நால்வரை உற்றதுணைவராக உடன்கொண்டு ஆங்காங்குச் சென்று வழிச்செல்வோரைச் சூறையாடிக் கொணர்ந்த பொருளால் திருமாலடியார்களைப் பூசிக்கும் நோன்பை நோற்றுவந்தார். இவர் களவு செய்வதும் ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதிப்பதற்கேயாதலால் ஸ்ரீமந்நாராயணன் இவர் செய்லைத் தீவினையாகக் கருதாமல் நல்வினையாகவே கொண்டு இவர்க்கு விசேஷ கடாக்ஷம்பண்ணி இவரை அங்கீகரிக்கவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி இவர் தன்னை வழிபறிக்குமாறு தான் ஒரு அந்தணனாக வேடம்பூண்டு பல ஆபரணங்களையும் தரித்து மணவாளக் கோலமாய் மனைவியுடனே இவரிருக்கிற வழியே எழுந்தருள, திருமணங்கொல்லையில் திருவரசமரத்தின் கீழ்ப் பதுங்கியிருந்த குமுதவல்லி மணவாளர்கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடனே வந்து அவர்களை வளைந்து வஸ்திர பூஷணங்களையெல்லாம் அபஹரிக்கையில் அம்மணவாளப்பிள்ளை காலில் அணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்ற முடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க, அம்மிடுக்கை நோக்கி எம்பெருமான் இவர்க்குக் கலியன் என்று ஒரு பெயர் கூறியருளினான்.

அதற்குப்பிறகு, இவர் பறித்த பொருள்களை யெல்லாம் சுமையாகக்கட்டி வைத்து எடுக்கப்பார்க்கையில் அப்பொருட்குவை இடம் விட்டுப் பெயராமல் மலை போல் அசலமாயிருக்க, அதுகுறித்து ஆச்சரியப்பட்டுத் திருமங்கைமன்னன் அவ்வந்தணனை நோக்கி ‘நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்?’ என்று விடாது தொடர்ந்து தன் கையிலேந்திய வாட்படையைக் காட்டி அச்சமுறுத்தி நெருக்க, அப்பொழுது ஸர்வேச்வர ஸ்வரூபியான அந்த அந்தணன் ‘அம்மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம், வாரும்’ என்று அருகிலழைத்து, ஸகலவேத ஸாரமான திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை, முன்பு நரநாராயணராய்த் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட குறைதீர இவர் செவியிலே உபதேசித்து உடனே கருடாரூடனாய் இவர் முன் எழுந்தருளி ஸேவை ஸாதித்தான்.

அங்ஙனம் மந்திரோபதேசம் பெற்றதனாலும் அந்த திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவித்ததனாலும் முன்பு காலாழியைப் பற்களால் கழற்ற நேர்ந்த போது பகவத் பாதாரவிந்தத்தில் வாய் வைத்ததனாலும் கலியன் அஜ்ஞாநவிருள் நீங்கித் தத்துவஞானச் சுடரெழுந்து எம்பெருமானைப் பரிபூரணமாக அநுபவித்து அவ்வனுபவத்தாலுண்டான ஆநந்தாதிசயத்தை வெளியிடுமாறு ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, விஸ்தாரக்கவி என்னும் நால்வகைக் கவிகளையும் பாடவல்ல பாண்டித்தியமுடையவராய் ”வாடினேன் வாடி வருந்தினேன்” என்று தொடங்கிப் பாடலுற்று, வடமொழி வேதங்கள் நான்குக்கும் ஆறு அங்கங்கள் அமைந்திருக்கின்றது போல அவ்வேதங்களின் உட்பொருளால் நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்வியப் பிரபந்தங்களுக்கும் தமது பிரபந்தங்கள் அங்கங்களாக அமையும்படி பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்னும் ஆறு திவ்விய நூல்களைத் திருவாய் மலர்ந்தருளி, ‘ திருமங்கையாழ்வார்’ என்று திருநாமம் பெற்றார்.

அவற்றுள் முதற் பிரபந்தமாம் இப்பெரிய திருமொழி. ஆழ்வார் இப் பிரபந்தம் பாடுகையில் தாம் உஜ்ஜீவந ஹேதுவாகப் பெற்ற திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தின் வைபவத்தை முதல் திருமொழியிலே பன்னியுரைத்து, அநந்தரம் திவ்விய தேசயாத்திரையாகச் சென்று ஆங்காங்குப் பெருமாளை மங்களாசாஸநஞ் செய்து பாசுரங்கள் பாட உத்தேசித்து, பிருதி, பதரிகாச்ரமம், ஸாளக்ராமம், நைமிசாரணியம், சிங்கவேள் குன்றம், திருவேங்கடம் என்னும் வடநாட்டுத் திருப்பதிகளிற் சென்று எம்பெருமான்களை ஸேவித்துப் பாசுரம் பாடி, தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் திருவெவ்வுளூர்க்கு வந்தபின் திருநின்றவூரைச் சேர்ந்தார். அத்திருப்பதியிலெழுந்தருளியுள்ள பத்தராவிப்பெருமாள் அப்பொழுது ஆழ்வார்க்கு முகங்கொடாமல் பிராட்டியோடு ஸரஸஸல்லாபஞ் செய்துகொண்டு பராங்முகமாயிருக்க, அப்பால் ஆழ்வார் திருவல்லிக்கேணிக் கெழுந்தருளி மங்களாசாஸனஞ் செய்து திருநீர்மலை யெம்பெருமானையும் துதித்து அநந்தரம் திருக்கடன்மல்லையை யடைந்து பெருமாளை ஸேவித்துநின்றார். அப்பொழுது திருநின்றவூரெம்பெருமான் திருமகளால் தூண்டப்பட்டு இவ்வாழ்வார் திருவாக்கினால் பாடல் பெற்றுச் சிறப்புறக்கருதி அக்கடன்மல்லையில் வந்து ஸேவைஸாதிக்க, கலியன் அப்பெருமானையும் அங்கே கண்ணாரக்கண்டு களித்து அவ்வூர் விஷயமான திருமொழியிலே “நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக், காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடன்மல்லைத் தலசயனத்தே” என்று பாடினார்

இவ்வாறே மற்றுஞ்சில தொண்டைநாட்டுத் திருப்பதிகளையும் நடுநாட்டுத் திருப்பதிகளிரண்டையுங் கடந்து சோழநாட்டுத் திருப்பதிகளில் தில்லைத் திருச்சித்திரகூடம் பாடியபின்பு சீர்காழி வழியாக எழுந்தருளுகையில் வழக்கப்படி பரிஜனங்கள் இவர் முன்னே ” நாலுகவிப்பெருமாள் வந்தார் ! பரவாதி மத்தகஜ கண்டீரவர் வந்தார்” இத்யாதி பல பிருதாவளிகளை எடுத்தேத்திக் கொண்டு செல்லாநிற்க, அவ்வூரிலுள்ள ஞானசம்பந்தமூர்த்திநாயனா ரென்கிற சைவசமயாசிரியருடைய அடியார்கள் வந்து “எங்கள் நாயனாருள்ள விடத்தே நீர் விருதூதிச் செல்லலாகாது” என்று தடை செய்ய; அது கேட்டுப் பரகாலர் சம்பந்தருள்ள விடத்தே சென்று அவரோடு வாதப்போர் செய்யத் தொடங்குகையில், நாயனார் ஆழ்வாரை நோக்கி ‘உமது கவித்திறத்தை யான் காணுமாறு முந்துற முன்னம் ஒரு பாடல் பாடும் ‘ என்று சொல்ல, உடனே ஆழ்வார் ” ஒரு குறளாயிருநில மூவடி மண்வேண்டி” என்று தொடங்கி அருகிலிருக்கிற காழிச் சீராமவிண்ணகரமென்ற திருப்பதியிலுள்ள தாடாளப் பெருமாள் விஷயமாகப் பதிகம்பாட, கேட்டு ஞானசம்பந்தர் மிக அதிசயித்து ‘உமக்கு இந்த விருதுகள் யாவும் தகும் தகும்’ என்று சொல்லித் தமது வேலாயுதத்தை இவர்க்குத் திரு முன்காணிக்கையாக ஸமர்ப்பித்து நன்கு பஹுமானித்து உபசரித்து வழிபட்டு வழிவிட்டு மீள, இம்மெய்யடியவர் வெற்றிவேல் பறித்துக்கொண்ட தமது கொற்றம் முற்றுந்தோன்ற “செங்கமலத் தயனனைய மறையோர்காழிச் சீராம விண்ணகரின் செங்கண்மாலை, அங்கமலத் தடவயல் சூழாலிநாடனருள்மாரி அரட்டமுக்கியடையார் சீயம், கொங்குமலர்க்குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன, சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் தடங்கடல் சூழுலகுக்குத் தலைவர் தாமே” என்று தமது பாயிரத்தோடு அத்திருமொழியை முடித்து ஜயபேரி முழங்க அப்பாலெழுந்தருளித் தமது திருவவதார ஸ்தலத்திற்கு அடுத்த திருவாலியைச் சார்ந்து திருநாங்கூர்த் திருப்பதிகள் முதலியவற்றைப் போற்றின பிறகு திருவிந்தளூரை யடைந்தார்.

அப்பொழுது அத்திருப்பதியெம்பெருமான் ஆழ்வார்க்குத் தன்னை ஒரு கால் காட்டிமறைய, அவர் த்ருப்தி பெறாமல் மனக்குறையோடு ”வாசி வல்லீரிந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே” என்று தமது குறைபாடு தோன்றப் பாடி, அதற்கு இரங்கிப் பெருமான் நிரந்தர ஸேவை ஸாதிக்க அது பெற்று நிரம்பிய மனத்தராய், பல திருப்பதிகளின் வழியாகத் திருவரங்கம் பெரிய கோயில் சேர்ந்து நம்பெருமாள் பக்கலிலே மிக்க ஈடுபாடுகொண்டு பலபதிகங்கள்பாட அதுகேட்டுத் திருவுள்ள முகந்து அப்பெருமான் திருமுகமலர்ச்சியோடு ஆழ்வாரைக் குளிர நோக்கி ‘நமக்கு விமானம் மண்டபம் கோபுரம் பிராகாரம் முதலிய கைங்கரியங்களைச் செய்யும்” என்று நியமித்தருள,


[జిత బాహ్య జనాది మణి ప్రతిమా: అపి వైదికయన్నివ రంగ పురే I

మణిమంటప వప్రగణాన్ విదథే పర కొలకవిః ప్రణ మేమహి తాన్.]


[ஜித பாஹ்யஜிநாதி மணிப்ரதிமா: அபி வைதிகயந்திவ ரங்க புரே|

மணிமண்டப வப்ரகணாந் விததே பரகாலகவி: ப்ரணமேமஹி தாந்||]


என்று ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் பட்டர் மங்களாசாஸநஞ் செய்துள்ளபடியே திருப்பணிகளைக் குறைவற முடித்தபின்பு நம்பெருமாள் பக்கல் விடைபெற்று மீண்டும் திவ்ய தேசயாத்திரை தொடங்கித் தென்திருப்பேர், நந்திபுரவிண்ணகரம், திருவிண்ணகர் என்ற இத்தலங்களை மங்களாசாஸனஞ் செய்தபின், திருநறையூரைச் சேர்ந்து நம்பிவிஷயமாக நூறு பாசுரம் விண்ணப்பஞ் செய்து, திருச்சேறை தேரழுந்தூர் சிறுபுலியூர் என்னும் திருப்பதிகளின் வழி யாகத் திருக்கண்ணமங்கை புக்கு அத்திருப்பதி யெம்பெருமானைப் பாடித் துதிக்கையில், திருநின்றவூர்ப் பத்தராவிப்பெருமாள் முன்பு (திருக்கடன் மல்லையில்) ஒரு பாடல் பெற்றது போதாதென்று மறுபடியும் ஆழ்வாரெதிரில் வந்து காட்சியளிக்க, ஆழ்வார் ”நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக் …….. கண்ண மங்கையுட் கண்டு கொண்டேனே ” என்று அப்பெருமானையுஞ் சேர்த்துத் துதி செய்தனர்.

அப்பால் திருக்கண்ணபுரம் திருக்கண்ணங்குடி திருநாகை யென்னுஞ் சோழநாட்டுத் திவ்யதேசங்களையும், திருப்புல்லாணி திருக்குறுங்குடி யென்னும் பாண்டிய நாட்டுத் தலங்களையும், திருவல்லவாழ் என்னும் மலைநாட்டுத் திருப்பதியையும் மங்களாசாஸனஞ் செய்து பின்னும் தென்னாட்டில் திருமாலிருஞ்சோலை திருக்கோட்டியூர் முதலானவற்றைத் தொழுது மற்றும் பல திருப்பதிகளை வணங்கி, எம்பெருமானுடைய அர்ச்சாவதாரங்களோடு விபவாவதாரங்களையுங்கருதி உள்ளங்கரைந்து பல பாசுரங்கள் பாடிக்கொண்டு ஆச்சரியமான அநுபவத்திலே ஆழ்ந்திருக்கையில்,-

எம்பெருமான் இவர்க்கு உண்டான இவ்வனுபவம் நித்யமாய்ச் செல்லுமாறு இவரைத் திருநாட்டிலே கொண்டுபோக நினைத்து அதற்காக இந்த ஸம்ஸாரமண்டலத்தின் கொடுமையை இவர்க்கு அறிவிப்போமென்றெண்ணி அப்படியே அறிவிக்க, அதனையறிந்த ஆழ்வார் ‘இந்தக் கொடுவுலகத்திலோ எம்பெருமான் நம்மை வைத்திருக்கிறது!’ என்று மிகவும் அஞ்சி நடுங்கி இறுதித் திருமொழியிலே ” ஆற்றங்கரை வாழும் மரம்போலஞ்சுகின்றேன் ” “பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்” “இருபாடெரி கொள்ளியினுள்ளெறும்பேபோல்” “வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போலே” என்றிப்படி பலவற்றையும் தம்முடைய அச்சத்திற்கு த்ருஷ்டாந்தமாகக் காட்டி ” அந்தோ! அடியேற்கு அருளாய் உன்னருளே” என்று பரமபதப்ராப்திக்கு உறுப்பான பரி பூர்ண கிருபையைப் பிரார்த்தித்துத் தலைக்கட்டுகிறதாயிற்று இப்பிரபந்தம்.

நம்மாழ்வார் திருவாய்மொழி பாடித் தலைக்கட்டி அவாவற்று வீடு பெற்றாற்போல இவ்வாழ்வார் திருநெடுந்தாண்டகம் பாடித் தலைக்கட்டி வீடு பெற்றா ராகிறார்.


பெரிய திருமொழி திவ்யார்த்த தீபிகையின்

முன்னுரை முற்றிற்று.


திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.


ஸ்ரீ:


பெரிய திருமொழித் தனியன்கள்.

(திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்தது.)


శ్లో॥ కలభూమి కలిధ్వంసం కవిం లో కదివాకరమ్|

యస్య గోభిః ప్రకాశాభిరావిద్యం నిహతం తమః||


कलयामि कलिध्वंसं कविं लोकदिवाकरम्। 

यस्य गोभिः प्रकाशाभिराविद्यं निहतं तमः॥


கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம்

யஸ்ய கோபி: ப்ரகாசாபிராவித்யம் நிஹதம் தம:


பதவுரை


யஸ்ய யாவரொரு ஆழ்வாருடைய
ப்ரகாசாபி: உலகமெங்கும் விளங்குகின்ற
கோபி: கிரணங்கள் போன்ற ஸ்ரீ ஸூக்திகளாலே
ஆவித்யம் அஜ்ஞாந ப்ரயுக்தமான
தம: இருளானது
நிஹதம் நீக்கப்பட்டதோ,
(தம்) அப்படிப்பட்டவராய்
கலித்வம்ஸம் கலிதோஷத்தைத் தொலைப்பவராய்
லோக திவாகரம் உலகத்துக்கெல்லாம் ஒரு ஸுர்யன் போன்றவரான
கலிம் ஸ்ரீபரகாலக வியை
கலயாமி த்யானம் செய்கிறேன்


* * * கலிகன்றி என்று ப்ரஶித்தரான திருமங்கையாழ்வாரை த்யானிக்கின்றேனென்கிறது. இதில் ஆழ்வார் ஸூர்யனாக வருணிக்கப்படுகிறார். வடமொழியில் (கோ) என்கிற சப்தம் கிரணம், சொல் முதலிய பல பொருள்களையுடையது. ஸூர்யன் தனது கோக்களினால் (கிரணங்களால்) புறவிருள்களைப் போக்குவான்; இப்பரகாலதிவாகரர் தமது கோக்களினால் (ஸ்ரீஸூக்திகளால்) அகவிருளைப் போக்குவார். இத்தால், ஆதித்ய கிரணங்களால் அகலமாட்டாத உள்ளிருள் இவரது ஸ்ரீஸூக்திகளால் அகலுமென்று அதிசயமும் சொல்லப்பட்டதாயிற்று.

கவிம் என்கிற ஸாமாந்யசப்தம் – ஆசுகவி, மதுரகவி, சித்ரகவி, விஸ்தாரகவி என்னும் கவித்திறங்கள் நான்கிலும் ஆழ்வார் வல்லவரென்பதை விளக்கும்.

ஆவித்யம் = அவித்யயா க்ருதம்-ஆவித்யம் என்று தத்திதவ்ருத்தியாம். …… *

(எம்பெருமானாரருளிச் செய்தது.)

(நேரிசை வெண்பா.)


வாழி பரகாலன் வாழி கலிகன்றி

வாழி குறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ

மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்

தூயோன் சுடர்மான வேல்.


பரகாலன் புறமதத்தவர்கட்கு யமன்போன்ற திருமங்கையாழ்வார்
வாழி வாழ்ந்திடுக;
கலிகன்றி கலியைக்கெடுத்த திருமங்கையாழ்வார்
வாழி வாழ்ந்திடுக;
குறையலூர் திருக்குறையலூரில்
வாழ் வாழ்ந்திடுக;
வேந்தன் அரசரான திருமங்கையாழ்வார்
வாழி வாழ்ந்திடுக;
மாயோனை எம்பெருமானிடத்தினின்று
வாள் வலியால் தமது வாளின் வலிமையினால்
மந்திரம் கொள் திருமந்திரத்தைப் பெற்றவராயும்
தூயோன் பரமபரிசுத்தராயுமிருக்கிற
மங்கையர் கோன் திருமங்கையாழ்வாரது
சுடர் ஒளிபொருந்தியதும்
மானம் பெருமை பொருந்தியதுமான
வேல் கொற்ற வேலானது
வாழி வாழ்ந்திடுக. (அரோ – அசை.)


*** – திருமங்கையாழ்வாரையும் அவரது திவ்வியாயுதத்தையும் வாழ்த்துகிறது இது.

எப்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலி தோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாக வுடையவரும், மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டாக வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும் எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக் கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று.

பின்னடிகளில் அறிய வேண்டிய வரலாறு அவதாரிகையில் விவரிக்கப்பட்டுள்ளமை காண்க.

தூயோன் = வழிபறித்தலாகிய அக்ருத்யத்தைச் செய்தாலும், அச்செல்வம் முழுவதையும் பகவத்பாகவத கைங்கரியத்துக்கே உபயோகித்ததனாலும் அபாகவதர்களின் பொருளை அபஹரித்துப் பாகவதர்க்கு உரியதாக்கியதனாலும் புகழ்புண்ணியங்களையே யன்றிப் பழிபாவங்களைச் சிறிதும் பெற்றிலர் என்பது தோன்றத் தூயோன் என விசேஷிக்கப்பட்டாரென்க.

ஞானசம்பந்தர் முதலிய புறமதத்தவர்களை வாதப்போரில் வென்று அவர்கட்கு ம்ருத்யுவாயிருந்ததனால் பரகாலன் என்றும், தமது திவ்ய ப்ரபந்தங்களால் உலகத்தை நன்னெறிச் செலுத்திக் கலிதோஷத்தைக் கடிந்ததனால் கலி கன்றி என்றும் இவ்வாழ்வார்க்குத் திருநாமங்களாயின வென்க

சுடர்மான வேல்=சீர்காழியிலிருந்த ஞானசம்பந்த மூர்த்திநாயனார் ஆழ்வாருடைய நாவீறுகண்டு வியந்து தமது வேலாயுதத்தை இவர்க்குத் திருமுன் காணிக்கையாகச் சமர்ப்பித்து நன்கு மதித்து உபசரித்து வழிபட்டனர் என்ற வரலாறு அறிக.


ஆழ்வான் அருளிச்செய்தது.

(கட்டளைக் கலித்துறை.)


நெஞ்சுக் கிருள்கடி தீப மடங்கா நெடும்பிறவி

நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல்துறைகள்

அஞ்சுக்கிலக்கிய மாரணசாரம் பரசமயப்

பஞ்சுக் கனலின்பொறி பரகாலன் பனுவல்களே.


பரகாலன்
பனுவல்கள்
திருமங்கையாழ்வாருடைய ஸ்ரீஸுக்திகள்
(எப்படிப்பட்டவை யென்றால்)
நெஞ்சுக்கு நெஞ்சிலுண்டான
இருள் இருளை
கடி போக்கக்கூடிய
தீபம் திருவிளக்காம்;
அடங்கா ஒன்றுக்குமடங்காத
நெடு பிறவி நஞ்சுக்கு நீண்ட ஸம்ஸாரமாகிற விஷத்தை மாற்றுவதற்கு
நல்ல அமுதம் சிறந்த அமிருதமாம்;
தமிழ தமிழினாலாகிய
நல் நூல் நல்ல நூல்களில் சொல்லப்பட்டுள்ள
துறைகள் அஞ்சுக்கு எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்கிற ஐந்து லக்ஷணங்கட்கும்
இலக்கியம் லக்ஷ்ய மாயுள்ளவை;
ஆரணம் வேதத்தினுடைய
சாரம் ஸாரமானவை;
பரசமயம் பஞ்சுக்கு மதாந்தரக் கோட்பாடுகளாகிய பஞ்சுக்கு
அனலின் பொறி நெருப்புப் பொறியாம்.


*** திருமங்கையாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளின் பெருமை சொல்லுகிறது இது. இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஓதி உணர்ந்தால் மனனக மலங்களெல்லாம் அற்று ஹ்ருதயம் நிர்மலமாகும்; இந்த ஸ்ரீஸூக்திகளை ஓதுமவர்களுக்கு ”அண்டமாள்வதாணை” என்றபடி பரமபதம் ஸித்தமாதலால் ஸம்ஸாரத்தை அடியறுப்பவையாம் இவை; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்று தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு இலக்கியமாம் இவை ; ஸகலவேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள அர்த்தங்கள் இவ்வாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளில் சுருங்கக் காணலாயிருக்கையாலே வேதஸாரமுமாம் இவை; இந்த ஸ்ரீஸூக்திகள் அவதரித்தபின்பு பாஹ்யகுத்ருஷ்டி மதங்களெல்லாம் மாண்டுபோயினவாதலால் பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறியாம் இவை.

கடிதீபம் – கடிகின்ற தீபம்; வினைத்தொகை. பிறவி நஞ்சுக்குநல்லவமுதம் – விஷம் பட்டவிடத்தில் அமுதமூற்றினால் நல்வாழ்ச்சியாவதுபோல் ஸம்ஸாரிகள் இப்பிரபந்தங்களை ஓதினால் தாபத்ரயமும் தணியப்பெற்று உஜ்ஜீவித்திடுவர்களென்கை. தமிழ நன்னூல் துறைகளஞ்சுக்கிலக்கியம் = இந்த ஸ்ரீஸூக்திகளைப் பார்த்து லக்ஷணம் கட்டலாம்படி குற்றமொன்றுமின்றி நற்றங்கள் நிறைந் திருக்கும் என்கை. “தமிழ் நன்னூல்” என்ற பாடம் மறுக்கத்தக்கது. ‘தமிழ’ என்றே ஓதுக. “நேர் பதினாறே நிரைபதினேழென்றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்பது இலக்கணமாதலின். இங்கு நன்னூல் என்றது ப்ரஸித்தமான நன்னூலென்னும் இலக்கண நூலைச் சொல்லிற்றாகவுமாம். அஞ்சு = ஐந்து என்பதன் போலி. இலக்கியம் – லக்ஷ்யம். ஆரணஸாரம் – வட சொல் தொடர்.எம்பார் அருளிச்செய்தது.

(ஒரு விகற்ப நேரிசை வெண்பா .)எங்கள் கதியே யிராமாநுச முனியே

சங்கை கெடுத்தாண்ட தவராசா – பொங்குபுகழ்

மங்கையர்கோ னீந்த மறையாயிர மனைத்தும்

தங்கு மனம் நீ யெனக்குத் தா.எங்கள் கதியே எங்களுக்குப் புகலாயிருப்பவரே!
இராமாநுச முனியே ஸ்ரீராமாநுச முனிவரே!
சங்கை ஸம்சயங்களை யெல்லாம்
கெடுத்து போக்கி
ஆண்ட ரக்ஷித்த
தவ ராசா மஹாதபஸ்வியே!
பொங்கு புகழ் உலகமெங்கும் பரவிய புகழையுடையரான
மங்கையர் கோன் திருமங்கையாழ்வார்
ஈந்த தந்தருளின
மறை ஆயிரம் வேதரூபமான திருமொழி யாயிரத்தையும்
அனைத்தும் மற்றுமுள்ள எல்லாப் பிரபந்தங்களையும்
தங்கும் தரிக்கக்கூடிய
மனம் மநஸ்ஸை
நீ தேவரீர்
எனக்கு அடியேனுக்கு
தா. தந்தருளவேணும்.


* * * – எம்பார் என்னுமாசிரியர் எம்பெருமானார் திருவடிகளிலே வந்து வணங்கிப் பிரார்த்திக்கின்றார் – ; ஸ்வாமிந்! தேவரீரையொழிய வேறுயாரும் அடியோங்களுக்குப் புகலாவாரில்லை ; தத்துவ நூல்களில் எங்களுக்கு உண்டான எவ்வளவோ ஸம்சயங்களை இதுவரையில் தேவரீர் போக்கியருளி மஹோபகாரம் செய்திருக்கிறது. அதெல்லாம் பெரிதல்ல; திருமங்கையாழ்வாருடைய திவ்யஸூக்திகளை எவ்வளவு ச்ரமப்பட்டுக் கண்டபாடஞ் செய்தாலும் மறப்பின் மிகுதியாலே தரிக்கமுடியாமல் வருந்துகிற எங்களுக்கு எப்படியாவது அந்த ஸ்ரீஸூக்திகளையெல்லாம் தரிக்கும்படியான மனவுறுதியை அருள் செய்யவேணும்.

குறையல்பிரானடிக்கீழ் விள்ளாதவன்பரான எம்பெருமானார் ”கலிமிக்க செந்நெற் கழனிக்குறையல் கலைப்பெருமானொலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்ததனால் வலிமிக்க சீயமிராமாநுசன்” (இராமாநுச நூற்றந்தாதி.) என்றபடி திருமங்கையாழ்வாரருளிச் செயற்கடலைக் கரைகண்டவராகையால் இங்ஙனே பிரார்த்திக்கப் பட்டாரென்க.

கதி- வடசொல். ‘சங்கா’ என்ற வடசொல் சங்கையென ஐயீறாகத் திரிந்தது. மறையாயிர மனைத்தும் = திருமொழியாயிரத்தில் ஒன்றுதப்பாமல் என்றுமாம். … … … … (*)


(சில விடங்களில் அநுஸந்திக்கப்படும் தனியன்)


மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று

கோலிப் பதிவிருந்த கொற்றவனே! – வேலை

அணைத்தருளுங் கையா லடியேன் வினையைத்

துணித்தருள வேணும் துணிந்து.(இதன் கருத்து.) ஸர்வேச்வரனைத் தனிவழியிலே வழிபறிக்க வேணுமென்று முயற்சி கொண்டு திருவரசடியிலே மறைந்திருந்த திருமங்கைமன்னனே!, வேற்படை யேந்திய திருக்கையாலே அடியேனுடைய பாவங்களைக் கண்டித்தொழிக்கவேணு மென்றதாயிற்று.ஆழ்வார் திருவடிகளே சாணம்.


ஜீயர் திருவடிகளே சரணம்.


தனியன் உரை முற்றிற்று.

Dravidaveda

back to top