ஸ்ரீ:

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்சிறிய திருமடல்

சிறிய திருமடல் என்னும் இத்திவ்யப் பிரபந்தமானது இந்த உலகில் இருள் நீங்க வந்துதித்து அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்களுள் பிரதானரான நம்மாழ்வாரருளிச் செய்த சதுர்வேத ஸாரமான நான்கு திவ்யப்ரபந்தகளுக்கு ஆறங்கங்கூற அவதரித்த திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய ஆறு திவ்யப்ரபந்தங்களுள் ஒன்றாம். (பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் – என்பன ஆறு திவ்யப்ரபந்தங்களாம்.)

ஸ்ரீமந்நாதமுனிகள் வகுத்தருளின அடைவில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் ஒன்பதாவது பிரபந்தமாக அமைந்தது இது.

“வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி, நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்“ என்றும் “சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்தாழ்ந்தேன்“ என்றும் தாமே அருளிச்செய்தபடி விஷயப்ரவணராய்த் திரிந்து கொண்டிருந்த இவ்வாழ்வார் தம்மை எம்பெருமான் திருத்திப் பணிக்கொள்ளத் திருவுள்ளம் பற்றி ‘விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்த முடியாது, நம் அழகைக் காட்டியே மீட்கவேணும்’ என்று கொண்டு தன் அழகைக் காட்டிக்கொடுக்க, ஆழ்வாரும் அதைக்கண்டு ஈடுபட்டு “வேம்பின் புழு வேம்பன்றி யுண்ணாது, அடியேன் நான் பின்னுமுன் சேவடியன்றி நயவேன்“ என்னும்படி அவகாஹித்தார்.

இவர் இப்படி தன்பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் “இப்போது இவர்க்கு நம்மிடத்து உண்டான பற்று மற்ற விஷயங்களிற் போலல்லாமல் ஸம்பந்த வுணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாக வேணும், இல்லையேல் இப்பற்று இவர்க்கு நிலைநிற்காதொழியினும் ஒழியும்“ என்றெண்ணி எல்லாப் பொருள்களையும் விளக்குவதான திருமந்த்ரத்தையும் தனது ஸௌசீல்யம் முதலிய திருக்குணங்களையும் திருமந்த்ரார்த்தத்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும் ஆழ்வார்க்குக் காட்டிக்கொடுக்க, அவரும் “வாடினேன் வாடி” என்று தொடங்கி எம்பெருமானுகந்தருளின இடமே பரம ப்ராப்யமென்று அநுபவித்தார்.

இங்ஙனம் அநுபவித்த ஆழ்வார்க்கு இவ்வநுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக இவரைத் திருநாட்டிலே கொண்டுபோக வேணுமெனக் கருதிய எம்பெருமான் ஸம்ஸாரத்தில் இவர்க்கு ஜிஹாஸை பிறக்கும்படி அதனுடைய தன்மையை அறிவிக்க, அறிந்தவிவர் அஞ்சி நடுங்கி “மாற்றமுள“ என்னுந் திருமொழியிலே “இருபாடெரி கொள்ளியினுள்ளெறும்போல்“ “பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்“ “வெள்ளத் திடைப்பட்ட நரியினம்போலே“ என்று தமது அச்சத்திற்குப் பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிச் கதறினார்.

இப்படி இவர் கதறிக்கதறி “பணியாயெனக் குய்யும்வகை பரஞ்சோதீ!“ என்றும், “அந்தோ வருளாய் அடியேற்குன்னருளே“ என்றும் சொல்லி வேண்டின விடத்தும், சிறு குழந்தைகள் பசி பசி என்று கதறியழுதாலும் அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாமளவும் சோறிடாத தாயைப்போலே, எம்பெருமான் ‘இவர்க்கு முற்ற முதிர்ந்த பரமபக்தி பிறக்குமளவும் நாம் முகங்காட்டுவோ மல்லோம்‘ என்று உதாஸீநனாயிருக்க, ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்திருக்கமாட்டாத ஆழ்வார் மிகுந்த தாஹங் கொண்டவர்கள் நீரிலே அவ்வெம்பெருமானை வாயாலே பேசியும் தலையாலே வணங்கியும் நெஞ்சாலே நினைத்தும் தரிக்கப்பார்த்தார் – திருக்குறுந்தாண்டகமென்னும் திவ்யப்ரபந்த்த்திலே.

தாஹம் அளவற்றதாயிருக்கச் சிறிது குடித்த தண்ணீர் த்ருப்தியை உண்டுபண்ணாமல் மேலும் விஞ்சிய விடாயைப் பிறப்பிக்குமாபோலே, இவர் திருக்குறுந்தாண்டகத்தில் அநுபவித்த அநுபவம் பழைய அபிநிவேசத்தைக் கிளப்பிப் பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே “நின்னடியிணை பணிவன் வருமிடராகல மாற்றோவினையே“ என்று ஆர்த்தராய்ச் சரணம் புகுந்தார் – திருவெழு கூற்றிருக்கை யென்னும் திவ்ய ப்ரபந்த்த்திலே.

அப்போதும் எம்பெருமான் இவருடைய அபேக்ஷிதத்தைச் செய்து தலைக்கட்டிற்றிலன், நம்போலியரை வாழ்விக்க இவ்வாழ்வார் முகமாக இன்னுஞ்சில திவ்ய ப்ரபந்தங்களை வெளியிட வேணுமென்ற அவாவினால் வாளா இருந்திட்டான். சக்ரவர்த்தி திருமகன் ஸமுத்ர ராஜனைச் சரணம் புகுந்து வழிவிடவேண்டின விடத்தும் அக்கடலரையன் இறுமாப்பையே பாராட்டி முகங்காட்டாமல் அலக்ஷியஞ்செய்து கிடக்க, பெருமாள் சீறிச் சிவந்த கண்ணினராய்

“***” (ஸாகரம் சோஷயிஷ்யாமி – சாபமாநய ஸௌமித்ரே – பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:) “இதோ இக்கடலை வற்றச் செய்து விடப்போகிறேன் – லக்ஷ்மணா! சார்ங்கவில்லைக் கொண்டுவா – வாநரமுதலிகள் காலாலே நடந்து செல்லட்டும் – ஒரு க்ஷணத்திலே இக்கடல் படுகிறபாடு பாருங்கள்” என்றருளிச்செய்து ஸமுத்ரராஜனை அழிக்க முயன்றாப்போலே, இவ்வாழ்வாரும் ‘நமது அபேக்ஷிதத்தை நிறைவேற்றாத எம்பெருமான் ஏதுக்கு? அவனுடைய ஸ்வரூபகுண விபூதிகளையும், அவன் உகந்து எழுந்தருளியிருக்கு மிடங்களையும் அழித்து விடுவோம்’ என்று அவற்றை அழிக்கப்பார்க்கிறார் இச்சிறிய திருமடலிலே.

இஃது ஆழ்வார் தாமான தன்மையிலே யிருந்து பேசுகின்ற பிரபந்தமன்று, க்ருஷ்ணாவதாரத்தில் குடக்கூத்திலே அகப்பட்டு அன்னவனை அநுபவிக்கப் பெறாது வருந்தி மடலெடுக்கத் துணிந்த ஒரு பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக்கொண்டு அவளுடைய பாசுரத்தாலே தனது தசையை வெளியிடும் பிரபந்தம் இது.

ஆழ்வார்க்குப் பிராட்டிதன்மை நேர்தற்குக் காரணம் – புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமடங்கப் பெண்தன்மையதாதலும், ஜீவாத்மாவினது ஸ்வாதந்தர்ய மின்மையும் பாரதந்திரியமும் முதலியன.

நாயகன் வேட்டைக்குப் புறப்பட்டானாய், நாயகியும் தோழியுமாகப் பூக்கொய்து விளையாடவென்று புறப்பட்ட வளவிலே ஒரு வ்யாஜத்தாலே தோழியும் பிரிந்த ஸமயத்திலே நாயகனும் தெய்வ வசமாக அங்கே வந்துசேர, அங்கே அவனோடே கண்கலவியே கூட்டக்கூடி, ஊழ்வினை பிரித்தலால் உடனே பிரிவும் நேர்ந்திட, அந்த நாயகனுடைய பிரிவைப் பொறுக்கமாட்டாத நாயகி அவனோடு கூடுதற்காகச் செய்யும் ஸாஹஸ ப்ரவ்ருத்திதான் மடல் எனப்படுவது. இஃது எம்பெருமானுடைய ஸ்வரூபகுண விபூதிகளை அழிப்பதாகச் சொன்னது எங்ஙனே யெனில், – (மடலூருகையாவது) நாயகனை ஒரு படத்திலே எழுதி, வைத்த கண்வாங்காமல் அதனைப் பார்த்துக்கொண்டு புஷ்பம் சந்தனம் முதலிய போகத்துக்கு உரிய வஸ்துக்களை விஷமாக உதறித்தள்ளி ஊணும் உறக்கமும் உடம்புகுளிப்பது மின்றியே பனைமட்டையைக் கையிலே எடுத்துக்கொண்டு அதனால் உடம்பை மோதிக்கொண்டு தலைமயிரை விரித்துக்கொண்டு “இன்ன படுபாவி என்னைக் காக்கமாட்டாதே கைவிட்டான், அவன் கண்ணற்றவன், அவனிலும் விஞ்சின கொடியன் இல்லை, பல ஸ்தலங்களிலே அவன் ஸந்நிதிபண்ணி அடியாரைக் காக்கின்றானென்பதும், ராமக்ருஷ்ணாதி அவதாரங்களினால் பலரைக் காத்தான் என்பதும் முழுப்பொய்யான பேச்சுக்கள்“ என்று தெருவேறக் கதறிக்கொண்டு கேட்டாரெல்லாரும் நடுங்கும்படியும் இரங்கும்படியும் திரிந்துழல்வதுதான் மடலூருகையாவது. அப்படிப்பட்ட கொடிய காரியத்தைச் செய்வதானது எம்பெருமானுடைய ஸ்வரூபாதிகளை அழிக்கை என்னத் தட்டுண்டோ? ஒருவனுக்கு உள்ளவற்றை இல்லையென்பதிறே அழிக்கையாவது.

இப்படி கதறிக்கொண்டு கெருவிலே புறப்படுவதற்கு ப்ரயோஜனம் யாதெனில், இந்த ஸாஹஸ ப்ருவ்ருத்தியைக்கண்டு ராஜாக்களாயுள்ளவர்கள் இவ்வார்த்தியைப் பொறுக்கமாட்டாத கருணையினாலே இருவரையும் கூட்டிவைப்பர்கள், உறவு முறையாராவது கூட்டிவைப்பர்கள், தோழி மாராவது கூட்டிவைப்பர்கள், பழிக்கு அஞ்சி நாயகனேயாவது வந்து கூடுவன், இவை யொன்றுமில்லையாகில் நாயகிதான் முடிந்து பிழைத்துப்போவள் – இவையாயிற்று மடலூர்தற்குப் பிரயோஜனங்கள்.

ஆழ்வார் இப்படி எம்பெருமானைப் பழித்துக்கொண்டு ஸாஹஸம் தோற்றத் தெருவிலே கிளம்பினாரோ? எனில், இல்லை, “மடலூர்வன், மடலூர்வன்“ என்று சொல்லி அச்சமுறுத்தின மாத்திரமேயன்றி அதை முடிய நடத்தினபாடில்லை. நம்மாழ்வாரும் “மாசறு சோதி” என்ற திருவாய்மொழியிலே, “தோழீ! உலகுதோறலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே“ என்றும், “யாம் மடமின்றித் தெருவு தோறயல் தையலார் நாமடங்காப் பழி தூற்றி நாடுமிரைக்கவே யாம் மடலூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடையத் தூமடல்தண்ணந்துழாய் மலர்கொண்டு சூடுவோம்“ என்றும் மடலூரப் புகுவதாக அச்சமுறுத்தினாரேயன்றி, அதனை அநுஷ்டாநபர்யந்தமாகச் செய்திலரிறே.

புருஷன் ஸ்த்ரீகளைக் குறித்து மடலூரலாமேயொழிய, ஸ்த்ரீ புருஷனைக் குறித்து மடலூரலாகாதென்று தமிழ்நெறியில் ஒரு வரம்பு கட்டப்பட்டிருக்கிறது, “கடலன்ன காமத்தராயினும் மாதர், மடலூரார் மற்றையார் மேல்“ என்றார் தமிழர், அப்படியிருக்க, ஆழ்வார் பிராட்டி தசையை அடைந்து மாதரான பின்பு மடலூரப் புகுதல் பொருந்துமோ? என்று இங்கே ஒரு சங்கை உண்டாகக் கூடியதே, இதற்கு இவ்வாழ்வார் தாமே மேல் பெரிய திருமடலில், “மானோக்கின் அன்னநடையார் அலரேச ஆடவர்மேல், மன்னு மடலூராரென்பதோர் வாசகமும், தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனையாம் தெளியோம் மன்னும் வட நெறியே வேண்டினோம்“ என்று ஸமாதாநம் அருளிச்செய்துள்ளமை அறியத்தக்கது. மடலெடுக்கை யென்பது ஆசைமிகுதியினால் தன்னடையே உண்டாவதொரு ப்ரவ்ருத்தி, ஆசையை வரம்பிட்டுக்காக்க ஆராலும் முடியாது, அரசாணைக்குக் கட்டுப்படுமோ ஆசை! வேலியடைத்தால் நிற்குமோ வேட்கை? அளவுகடந்த வேட்கையின் காரியமாக விளையக்கடவதான மடலூருகையை ஆண்கள் தாம் செய்யலாம், பெண்கள் செய்யலாகாதென ஒரு வரம்புகட்டுவதானது ப்ரேமஸ்வபாவத்தின் போக்கை அறியாதவர்களுடைய செயலாமத்தனை யென்பது ஆழ்வாருடைய திருவுள்ளம்.

அஃது இருக்கட்டும், “எம்பெருமானுக்குத் திருவுள்ளமானபோது நம்மை நோக்கியருள்வான், நாம் பதறவொண்ணாது“ என்று அனுஸந்தித்து குணானுபவமே போது போக்கா யிருக்க வேண்டியதன்றோ ஸ்வரூப ப்ராப்தம், அங்ஙனமிராமல் தாம் பதறி ஒரு அதிப்ரவ்ருத்தி செய்ய நினைக்கைதானும் அவத்யமன்றோ! அதிலும் ஸ்ரீவைஷ்ணவ ஸந்தானத்தில் சிறந்த மெய்யடியார்களென்று கொண்டாடப்படுகிற ஆழ்வார்கள் இப்படி மடலூர்வேனென்றல் முதலியன பேசுதல் மிகவும் பொல்லாங்கன்றோ? என்னில், அன்று, ப்ராப்யவஸ்துவில் ப்ராவண்யாதிசயத்தினால் உண்டாகிற ப்ரவ்ருத்தியேயன்றி எம்பெருமானுக்குக் கெடுதலை விளைக்கவேணுமென்கிற கெட்ட எண்ணத்தினால் உண்டாகிற ப்ரவருத்தியல்ல, ப்ரேம பரவசர்க்கு இது அவத்யத்தை விளைக்க்க்கூடியதன்று. ஆனால், ‘இது கலக்கத்தினால் செய்யும் செயல்தானே, அஜ்ஞான மூலமாக வருமவை ஒன்றும் ஆதரிக்கத்தக்கதன்றே, எனின், “ஞானங்கனிந்த நலம்“ என்றபடி ஞானபரிபாக ரூபமான பக்தியின் விசேஷங்கள் எல்லாம் மிகவும் ஆதரிக்கத்தக்கனவேயாம். கருமமடியான அஜ்ஞானத்தினால் வருமவையே ஹேயம் என்று கொள்ளக்கடவது.

ஆனாலும், சேதநனிடத்து ஒருவகையான ப்ரவருத்தியையும் ஸஹியாத ஸித்தோபாயத்தின் கார்யகரத்வத்திற்கு இந்த அதிப்ரவ்ருத்தி ப்ரதிபந்தகமாக மாட்டாதோ? என்னில், இந்த அதிப்ரவ்ருத்திதானும் ஸித்தோபாயமான எம்பெருமான் பண்ணின க்ருஷியின் பயனெனக் கருதத்தக்கதாம். “மயர்வற மதிநலமருளினன்“ “பேரமர்காதல் கடல்புரைய விளைவித்த, காரமர்மேனி நங்கண்ணன்” என்று – இப்படிப்பட்ட அதிப்ரவ்ருத்திக்கு ஹேதுவான பக்தியைப் பிறப்பிக்குமவனும் வளரச் செய்பவனும் அவ்வெம்பெருமான்றானாகவே யன்றோ சொல்லப்பட்டுள்ளது. ஆகையாலே ப்ரேம்ரூப பக்திபாரவச்யப்ரயுக்தமான நோன்பு நோற்கை, மடலூருகை முதலான அதிப்ரவ்ருத்திகளை உபாயபல மென்று பூர்வாசார்யர்கள் ஸித்தாந்தீகரித்தருளினர்.

அன்றியும், பலனைக் கடுகப் பெறவேணுமென்ற விரைவின் மிகுதியினால் கண்ணாஞ் சுழலையிட்டு இத்தலைபடுகிற அலமாப்பெல்லாம் “நம்மை ஆசைப்பட்டு இப்படி படப்பெறுவதே!“ என்று அவன் முகம் மலருகைக்கு உறுப்பாகையாலே நோன்பு நோற்கை மடலெடுக்கை முதலான அதிப்ரவருத்திகளெல்லாம் அவனுடைய முகமலர்த்திக்காகப்பண்ணும் கைங்கரியத்தோடொத்து உபேயத்தில் அந்தர்ப்பூதமாய் விடுமென்றே அறுதியிடத்தக்கது. நிற்க.

திருமடல் ஒரே பாட்டு

—–

இச்சிறிய திருமடல் இலக்கணமுறைமைப்படி ஒரேபாட்டாகக் கொள்ளத்தக்கது. இதனை 77 பாட்டாகக் கணக்கிட்டார் அப்பிள்ளையாசிரியர், நாற்பது பாட்டாகக் கணக்கிட்டார் ஸ்ரீவேதாந்த தேசிகன். அவர்கள் இப்படி பலபாட்டுக்களாகப் பிரித்துக் கொண்டது இலக்கண முறைமைக்கு இணங்குவதல்ல. மஹான்களாகிய அவ்வாசிரியர்கள் இலக்கண நெறிக்கு முரண்படுமாறு அங்ஙனே பிரித்துக்கொண்டதற்குக் காரணம் இன்னதென்பதை மேலே கூறுவோம். இஃது இலக்கண முறையைப்படி ஒரேபாட்டென்பதை முன்னம் விளக்குவோம்.

ஈற்றடிமுச்சீரடியாகவும் மற்றையடி நாற்சீரடியாகவும் பெற்று, காய்ச்சீரும் மாச்சீர் விளச்சீர்களும் இருவகை வெண்டளைகளுங்கொண்டு மற்றைச்சீரும் தளையும் பெறாமல், நாள் மலர் என்ற ஓரசைவாய்பாடுகளுள் ஒன்றினாலாவது, காசு பிறப்பு என்ற ஈரசைவாய்ப்பாடுகளுள் ஒன்றினாலாவது முடிந்து, ஒரு விகற்கத்தாலாயினும் இருவிகற்பத்தாலாயினும் வருவது வெண்பா என்று பொதுப்படக்கூறி, இரண்டடியால் வருவது குறள்வெண்பா வென்றும், மூன்றாமடியில் வருவது சிந்தியல் வெண்பா வென்றும், நான்கடிகளாய் இரண்டாமடியின் இறுதிச்சீர் முதலிரண்டடிகளின் எதுகையையுடைய தனிச்சொல்லாய் வரநிற்பது நேரிசை வெண்பா வென்றும், நான்கடிகளாய்த் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா வென்றும், ஐந்தடிமுதல் பன்னிரண்டடியளவும் வருவது பஃறொடை வெண்பா வென்றும் பன்னிரண்டடிக்கு மேற்படின் கலிவெண்பா வென்றும் விசேஷித்து யாப்பில்க்கண நூல்களில் கூறப்பட்டுள்ளமையால் திருமடல்களிரண்டையும் கலிவெண்பாவாகக்கொண்டு ஒவ்வொரு மடலையும் ஒவ்வொரு பாட்டாகவே கொள்ளவேண்டும். திருமடல்களிரண்டிலும் முற்றும் ஒரே எதுகையாக அமைந்தமையும் ஈற்றடி முச்சீராக முடிந்துள்ளமையும் நன்கு நோக்கத்தக்கது.

சங்கத்துச் சான்றோர் இயற்றிய பன்னிரு பாட்டியல் என்ற இலக்கணநூலில் இனவியலில் மடலிலக்கணஞ் சொல்லுமிடத்து, “பாட்டுடைத்தலைமகனியற்பெயர்க் கெதுகை, நாட்டிய வெண்கலிப்பாவதாகி….காமங் கவற்றக் கரும்பனை மடன்மா, ஏறுவராடவர் என்றனர் புலவர்“ என்றதும், “இவ்வாறு வந்தன மங்கையர்கோன் அருளிச்செய்த பெரிய திருமடல் சிறிய திருமடல் என்பன“ என்று அதன்கீழ் விவரணங் காட்டியிருப்பதும் அறியத்தக்கன.

“அறம்பொருள் வீடெனு மம்முக்கூற்றின் திறங்கடிந் தரிவையர் திருத்துறு மின்பம் பயனெனக் கலிவெண் பாவாற் றலைவன் பெயரெதுகையினிற் பேசுதல் வளமடல்“ என்ற இலக்கண விளக்கமும் அறியத்தக்கது.

வச்சணந்திமாலை யென்னும் வெண்பாப்பாட்டியற் செய்யுளியலில் மடலிலக்கணஞ் சொல்லவந்த “உற்றவறம் பொருள் வீடெள்ளியுயர்த்தின்பம், பொற்றொடி காதற்பொருட்டாகப் – பெற்றி, யுரைத்த கலிவெண்பா மடலிறைவனெண்பேர், நிறைந்த வெதுகை நிறுத்து“ என்ற வெண்பாவும் உணரத்தக்கது. இன்னும் இவ்விஷயத்தைப் பன்னியுரைக்குங்காற் பாரதமாமென்று இவ்வளவிலே நிற்கின்றோம்.

ஆகவே திருமடல்களைப் பலபாட்டுகளாகப் பிரித்தல் இலக்கணமுறைமைக்கு எவ்வகையாலும் இணங்காதாயினும், வேதாந்த தேசிகனும் அப்பிள்ளையாம் பலபாட்டாகப் பிரித்து கொண்டது ஔசித்யம் என்கிற பிரமாணத்தின்படி ஒருவாறு பொருந்தக்கூடும். அதாவது – ஆழ்வார்களருளிய தமிழ் வேத்ததிற்கு நாலாயிரம் என்ற திருநாமம் நாடெங்கும் வழங்கி வந்திருக்கின்றது. ஏற்றக்குறைவின்றிச் சரிசமமாக நாலாயிரம் பாட்டுக்கள் உள்ளனவாகக் காட்டவேணுமென்கிற திருவுள்ளம் அவ்வாசிரியர்கட்கு உண்டாயிற்று, ஸ்ரீ தேசிகன் இராமானுச நூற்றந்தாதியையுஞ் சேர்த்து நாலாயிரமாக்க் கணக்கிடக் கருதியருளினர். திருமடல்களை ஒவ்வொரு பாட்டாகக் கொண்டால் இவர்களுடைய திருவுள்ளம் நிறைவேறுதற்கு அவகாசமின்றி யிருந்தது. இரண்டு திருமடல்கள் தவிர மற்ற திவ்யப்பிரபந்தங்கள் இருப்பத்திரண்டில் யஎஎசு பாட்டுகள் மாத்திரமே தேறுகின்றன. இராமாநுச நூற்றந்தாதியின் நூற்றெட்டுப்பாட்டுக்களையுங் கூட்டிக்கொண்டால் ஙஅஅஉ பாட்டுக்கள் தேறுகின்றன. ஆகவே நாலாயிரத்திற்கு நூற்றுப்பதினெட்டு பாட்டுக்கள் தேவையாயின. அதற்காகச் சிறிய திருமடலை நாற்பது பாட்டாகவும் பெரிய திருமடலை எழுபத்தெட்டு பாட்டாகவும் பிரித்துக்கொண்டு பூர்த்தி செய்தருளினர் தேசிகன். நூற்றந்தாதியை யொழிய நாலாயிரம் கணக்கிடத் திருவுள்ளங்காண்ட அப்பிள்ளைக்கு உஉரு பாட்டுக்கள் தேவையாயின. அதற்காக அவர் சிறிய திருமடலை எஎ? பாட்டாகவும், பெரிய திருமடலை கசஅ?, பாட்டாகவுங்கொண்டு கணக்கிட்டுப் பூர்த்திசெய்தருளினர்.

(“ஸ்திதஸ்ய கதிச் சிந்தநீயா“) உள்ளதற்கு ஒருவழி விடவேண்டும் என்ற நீதியை யடியொற்றி இங்ஙனே ஒரு ஸமாதாநம் காட்டினோமென்க.

இலக்கணப்படி திருமடலை ஒரே பாட்டாக்க் கொள்வதே ஏற்கும். இப்படியாகில், இரு நூற்றுச்சொச்சம் பாட்டுக்கள் குறைதலால் நாலாயிரம் என நாடெங்கும் வழங்குவது சேருமாறு எங்ஙனே யென்னில், உலகத்தில் ஒரு பெரிய தொகைக்கு சில எண்கள் குறைந்தாலும் பெரிய தொகையை யிட்டே வழங்குவதுண்டு. நாலாயிரக்கணக்குக்கு நூறு இருநூறு குறைந்தாலும் நாலாயிரமென்றே வழங்கலாம். (உதாரணம்) நம் ஆழ்வார்கள் “வாணனாயிரந்தோள் துணிந்த“ என்றும் “இண்டவாணனீரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த“ என்றும் அருளிச் செய்துள்ளமை அனைவருமறிவர், பரமசிவன் பிரார்த்தனையால் பாணாஸுரனை நான்கு கைகளோடும் உயிரோடும் எம்பெருமான் விட்டருளின்னென்பது ஸ்ரீபாகவதாதிகளில் ப்ரஸித்தம். இனி, கீழ்க்குறித்த ஆழ்வார் பாசுரங்களுக்கும் இப்புராண வரலாற்றுக்கும் ஐககண்டியம் பண்ணப்புக்கால், ஆயிரத்துக்கு நாலைந்து குறையினும் ஆயிரமென்றே சொல்லலாமென்று அனைவரும் அங்கீகரிக்கவேண்டுமே. இனி திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு பாட்டாயிருக்க, ஆழ்வார் தாமே “குருகூர்ச்சடகோபன் சொன்ன ஒராயிரம்“ என்று பலவிடங்களிலும் அருளிச்செய்த்து சேரும்படி எங்ஙனே? பெரிய திருமொழி க0 அசபாட்டாயிருக்கிற, “பொங்குபுகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரம்“ என்றது எங்ஙனே? நூற்றெட்டுப் பாட்டுக்களமைந்த பிரபந்தத்தை “இராமாநுச நூற்றந்தாதி“ என்கை சேரும்படி எங்ஙனெ ஆயிரத்தெட்டு ச்லோகங்களமைந்த ஸ்தோத்ரத்தை பாதுகாஸஹஸ்ரம் என்றும், எழுபத்தினான்குச்லோகங்களமைந்த ஸ்தோத்ரத்தை யதிராஜ ஸப்ததி என்றும் சொல்வது எங்ஙனே? பலவற்றையு மெடுத்துக்காட்டிக் கேட்பார்க்கு ஆயிரத்துக்கு நூறு ஐம்பது மிகுந்தாலும் ஆயிரமென்றே வழங்கலாமென்றும் நூற்றுக்குப் பத்து எட்டு மிகுந்தாலும் நூறென்றே வழங்கலாமென்றும் மறுமொழி யுரைத்தலில் மயங்குவாரில்லையே.

இவ்வுதாஹரணங்களால் ஸ்வல்பம் ஏற்றத்தாழ்வு அகிஞ்சித்கரம் என்பது நன்கு விளங்கும். இவ்வகையில் நாலாயிரமென்ற வ்யவஹாரம் நன்கு பொருந்தத் தடையில்லையென்றுணர்க.

ஸ்ரீ:


சிறிய திருமடலின் தனியன்

பிள்ளை திருநறையூரரையர் அருளிச்செய்தது


நேரிசை வெண்பா


முள்ளிச் செழுமலரோர் தாரான் முளை மதியம் கொள்ளிக்கென் னுள்ளங்

கொதியாமே – வள்ளல்

திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி

மருவாளன் தந்தான்மடல்.


செழு முள்ளி மலர் ஓர் தாரான் செழுமை தங்கிய முள்ளி மலர்களினாலாகிய ஒப்பற்ற மாலையை அணிந்து கொண்டிருப்பவரும்
வள்ளல் ஸ்ரீஸூக்திகளை அளவறத் தந்தருளுகையாலே) மிக்க உதாரரும்,
திரு ஆளன் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை ஆள்பவரும்
மருவாளன் பொருந்திய வாளை யுடையவரும்
கார் கலியை வெட்டி அஜ்ஞாநதோஷத்தை ஒழித்தவருமான
சீர் கலியன் ஸ்ரீ திருமங்கையாழ்வார்
முளை மதியம்
கொள்ளிக்கு என்
உள்ளம் கொதியாமே
உதிக்கின்ற சந்திரனாகிய கொள்ளியிலே
என்நெஞ்சு பரிதபியாதபடிக்கு
மடல் தந்தான் திருமடல் பிரபந்தத்தை அருளிச்செய்தார்.

***- முளைத்தெழுகின்ற சந்திரனை விரஹிகள் கண்டவாறே‘ இவன் சந்திரனல்லன், சன்டனேயாவன்’ என்று நிச்சயித்துக் கொள்ளியைக் கண்டாற்போலே குடல் குழம்பிக் கொதிப்பர்கள். அப்படிக்கொதிக்கவேண்டாதபடி திருமங்கையாழ்வார் விரகதாபஹரமான இத்திருமடலெனும் திவ்யப்பிரபந்தத்தில் தந்தருளினார் என்கிறது. உலகத்தில் விஷயாந்தரங்களில் ஈடுபட்டவர்கள் தம் அபிமத விஷயத்தைப் பிரிந்து (சந்த்ரச் சண்டகராயதே) என்று சந்திரனைக்கண்டு எப்படி தாபமெய்துவார்களோ, அப்படியே பகவத் விஷயத்தி லீடுபட்டவர்களும் எம்பெருமானாகிற தலைமகனைப் பிரிந்தகாலத்து, சந்திரனைக் கொள்ளியாகவே கருதித் தபிக்கப் பெறுவர்களென்பதை “போந்த வெண்திங்கள் கதிர்சுடமெலியும்“ என்ற இவ்வாழ்வார் பாசுரத்தாலும், “மேவுதண்மதியம் வெம்மதியமாலோ“ என்ற நம்மாழ்வார் பாசுரத்தாலும் அறிக. இங்கு முளைமதியமென்று சந்திரனை எடுத்துக்கூறியது விரஹத்தில் தாபத்தை விளைக்கவல்ல * மல்லிகை கமழ் தென்றல்முதலிய மற்றெல்லாம் பொருள்கட்கும் உபலக்ஷணமென்க. இனி நாம் எம்பெருமானைப் பிரிந்து சந்திரன் முதலிய பல பாதக பதார்த்தங்களினால் வருந்தவேண்டாதபடி ஆழ்வார் திருமடலை நமக்கு உபகரித்தார் என்றவாறு. எனவே, இத்திருமடலை ஒருகால் அநுஸந்தித்தவாறே எம்பெருமான் அஞ்சி நடுங்கி அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து முகங்காட்டியருள் வானாகையாலே பகவத் விரஹமும் விரஹதாபமும் ஒன்றும் நமக்கு நேரிட ப்ரஸக்தியில்லை யென்றதாயிற்று.

திருமங்கையாழ்வாரைப் போலவே கனத்த பகவத்காமமுடையவரால் இப்பாசுரம் அருளிச்செய்யப்பட்டதாகக் கொள்க.

முள்ளிச் செழுமலரோதான் – கலியனுக்கு முள்ளிப்பூமாலை ஜாதிக்கு ஏற்ற மாலைபோலும். இப்போது அர்ச்சாவதாரத்தில் (திருநகரியில்) முள்ளிச்செழுமலர்த்தார் வடிவமான திவ்யாபரணம் ஸ்வர்ணமயமாக உள்ளமை உணர்க.

தாமரை என்னும் பொருளதான முளரி என்னுஞ்சொல் முள்ளியென மருவிற்றென்று கொண்டு தாமரை மாலையை யணிந்தள்ளவரென்று பொருள் கூறுவாருஞ் சிலருளர். “மலரோதாரான்“ “மலரோர்தாரான்“ “மலரோன் தாரான்“ என்பன பாடபேதங்கள்.

மதியம் =அம் – சாரியை. (கார்க்கலியை வெட்டி) கார் – இருள், அதாவது அஜ்ஞானம். வெட்டி என்பதை வினையெச்சமாகக் கொண்டு உரைத்தலு மொன்று.

தனியன் உரை முற்றிற்று.


——


இத்திருமடலின் தாத்பர்யஸங்க்ரஹம்(இத்திருமடல் மற்றைப் பிரபந்தங்களைப் போல நாலடி கொண்ட பாட்டுடைத்தல்லாமல் மிக நீண்டதோர் பிரபந்தமாய் முழுதும் ஒரே வாக்கியார்த்தமாயிருப்பதனால், கண்டம் கண்டமாக நாம் உரையிட்டுக் கொண்டு போவதில் ஆங்காங்கு பதப் பொருள்கள் ஏற்பட்டாலும் அகண்ட வாக்கியார்த்தம் நெஞ்சிற் பதிவது அரிதாயிருக்கு மாகையாலே அக்குறை நீங்க, மூலத்தைப் பெரும்பான்மை தழுவி இப்பிரபந்தத்தின் ஸாரமான தாற்பரியம் இங்கே எழுதப்படுகின்றது – கற்போர்தம் மனம் தெளிய)

எம்பெருமானது பத்தினியாகையாலே ‘பூமிப்பிராட்டி‘ என வழங்கப்பெறுகின்ற இந்நிலமகள் ஸ்திரீகளுக்கு உரிய லக்ஷணங்களை நன்றாக வுடையளாயிருக்கின்றாள், எங்ஙனே யெனில், – நுனியில் கறுத்த இரண்டு கொங்கைகளை யுடையராயிருப்பர் மாதர்கள், இந்நில மகளும், மேகங்கள் படியப்பெறுவதனால் கறுத்த சிகரத்தையுடையனவான திருமாலிருஞ்சோலை திருவேங்கடமெனும் இரண்டு சிறந்த திருமலைகளைக் கொங்கைகளாகக் கொண்டிருக்கின்றாள். மாதர்கள் சிறந்த ஆடையை அணிவர்களே, இந்நிலமகளும் கடல்தன்னை வஸ்த்ரமாக அணிந்துகொண்டிராநின்றாள், மாதர்கள் ஒளிமிக்கதொரு சுட்டியை நெற்றிக்கு அணியாகக்கொள்வர்களே, அவளும் சூரியனைச் சுட்டியாக வுடையாள், மாதர்கள் ரத்நஹாரங்களை யணிந்த மார்பையுடையராயிருப்பர்களே, இவளும் கலக்கத்தாலும் மணிகளைக் கொழித்துக் கொண்டு வருதலாலும் செம்மை பொருந்திய வெள்ளநீரையுடைய ஆறுகளை ஆரம் பூண்ட மார்பாக வுடையாள், மாதர்கள் கரிய கூந்தல் முடியை யுடையராயிருப்பவர்களே, இவளும் நீர்கொண்டெழுந்த காளமேகங்களைக் கூந்தலாக வுடையாள், குலமாதர் கட்டுங் காவலுமாயிருப்பர்களே, இவளும் ஆவரண ஜலத்தையே தனக்குக் காப்பாக வுடையாள்.

ஆக இவ்வகைகளாலே ஸ்த்ரீகட்கு உரிய லக்ஷணங்கள் அமையப்பெற்றுள்ள இந்நில மகளிடத்து வாழ்கின்ற மனிதர்களால் சொல்லப்படுகின்ற புருஷார்த்தங்கள் – தருமம், அர்த்தம், காமம், என மூன்றேயாம். இவற்றுள் பிரதானமான காம புருஷார்த்தத்தைப் பெற்றவர்கட்கு மற்றையிரண்டு புருஷார்த்தங்களும் எளிதல் பெறப்பட்டனவாம்.

இம்மூன்று தவிர மோக்ஷமென்றொரு நான்காவது புருஷார்த்த மிருப்பதாகச் சிலர் கூறுவது விவேகமற்ற கூற்றேயாம். விவேகமுள்ளவர்கள் மோக்ஷமென்றொரு பரோக்ஷ புருஷார்த்தமுள்ளதாகச் சொல்லவேமாட்டார்கள். இதனை நீங்களே நன்கு தெளிந்துகொள்ளுமாறு நான் விவரிக்கின்றேன், கேளுங்கள்.

மோக்ஷத்துக்குப் போகிறவர்கள் ஸூர்யமண்டலத்தைப் பிளந்துகொண்டு அதனூடே போவதாம், அந்த ஸூரியன் ஒற்றைச் சக்கரத் தேரிவிருப்பவனாம், அத்தேருக்கு ஏழு குதிரைகள் பூட்டியுள்ளனவாம், அக்குதிரைகள் மேகமண்டலத்தில் ஸஞ்சரீப்பனவாய், மிகத்தாழ்ந்த நிலத்திலே இருந்துகொண்டு நம்மாற் கண்கூசாதே காணவுமொண்ணாத அந்த ஸூர்ய மண்டலத்தைப் பிளந்துகொண்டு ஒருவன் போவதென்பது எவ்வளவு பொருத்தமான வார்த்தையென்பது நீங்களே விமர்சிக்கலாம்.

அவ்வழியே போனவர்கட்கு மீட்சியில்லாத ஒரு வைகுந்தமாநகர் கிடைக்கின்றதாம். அதில் ஆராவமுதம் அநுபவிக்கபடுகின்றதாம், இதுதான் மோக்ஷ புருஷார்த்தமாம். இத்தனையும் முழுப் பொய்யுரையேயன்றி இப்படியும் ஒன்று இருக்கக்கூடியதுண்டோ?

அப்படிப்பட்ட மோக்ஷமென்று உள்ளதாகவே வைத்துக்கொள்வோம். இருட்டறையில் விளக்குப்போலே ஸகல குணங்களும் நன்கு விளங்குமிடமான அர்ச்சாவதாரத்தைவிட்டு “உண்டோ இல்லையோ“? என்று ஸ்ந்தேஹித்தற்கிடமான அம்மோக்ஷ நிலத்தைப் பற்றுவதும் ஒரு பொருளோ? முயலை விட்டுக் காக்கையைத் தொடர்ந்து செல்வதோடொக்குமன்றோ அஃது.

[இதுவரையில் ஆழ்வார் தாமான தன்மையில் நின்று அருளிச்செய்தது, இனிமேலுள்ளதெல்லாம் –க்ருஷ்ணாவதாரத்தில் குடக்கூத்திலே ஈடுபட்டு அன்னவனை அனுபவிக்கப் பெறாமையாலே மடலெடுக்கத் துணிந்த ஒரு பிராட்டியின் பாசுரத்தாலே தமது நிலையைப் பேசுகிறபடி.]

ஓ மங்கைமீர்! எனக்கு நேர்ந்ததொரு அவஸ்தையைச் சொல்லுகிறேன் கேளுங்கள், நான் உலகத்தில் ஸம்ஸாரவாழ்க்கைப் பெண்டுகள் செய்கிறபடியே தலைமயிர் முடியை எடுத்துக்கட்டிக் கச்சு அணிந்துகொண்டு அரையிலே மேகலை தரித்துக் கண்ணிலே மையிட்டு இப்படி அலங்காரங்கள் செய்துகொண்டு பந்தடிக்கும் விளையாட்டிலே ஊன்றியிருந்தேன், இருக்கையில், தாமரைக் கண்ணனென்று பேர்பெற்றானொருவன் அனைவரும் மகிழப் பறையறைந்து கொண்டு “இக்கூத்துக்குத் தப்பிப்பிழைக்கும் பெண்டிரும் இத்தெருவே உண்டோ?“ என்று சொல்லிக்கொண்டு குடக்கூத்தாடா நின்றமைகண்ட பெண்டிர்களெல்லாரும் “அடி பரகாலநாயகி! குடக்கூத்துக்கான நீயும் வரமாட்டாயோ?“ என்றழைக்க, போராதகாலம் வலிதாயிருந்தபடியால் நானும் சடக்கென வெழுந்து அங்கே சென்றேன்;

சென்றதும் மேனிநிறமிழந்தேன், கைவளைகள் கழன்றொழியப் பெற்றேன், ப்ரிய ஹிதபரர்ள் சொல்லுமதைக் காதுக்கொடுத்தும் கேட்கமாட்டாத நிலைமையளாயினேன், அறிவென்பது அடியோடே போயிற்று, சரீரம் ஒழிந்தால் ஆறியிருக்கலாமே, அதுவும் ஒழிந்ததில்லை, பேதமை மிக்கது, இங்ஙனேயான என்னை என்தாய் கண்டு வருந்தி எப்படியாகிலுமென்னைத் தெளிவிக்கவேண்டி பாகவத ஸ்ரீ பாததுளியைக்கொண்டு காப்பிட்டாள், செங்குறிஞ்சி மாலையை நிரூபகமாகவுடைய சாஸ்தா என்னும் தேவதாந்தரத்திற்கு ஓர் அஞ்சலியும் செய்தாள், அத்தனை செய்தும் என் மனோ வியாதி தீரவில்லை, பிடித்த பைத்தியம் கழியவில்லை, போன மேனி நிறம் மீண்டதில்லை.

இங்ஙனமாக நான் தளர்வுற்றிருக்கும்படியைக் கண்ட சில பழங்கதை யுணர்ந்த பாட்டிமார்கள் வந்துசேர்ந்து ‘ஐயோ, குறிசொல்லுங் குறத்தியை வரவரழைத்துக் குறிக்கேட்கலாமே நோய்க்கு நிதானம் வெளிப்படுமே, இது கைகண்ட உபாயமாயிற்றே!‘ என்று சொல்ல; அவ்வளவிலே ஒரு குறத்தி தானாகவே வந்து சேர்ந்து தைவாவிஷ்டையாகி ஒரு சிறு முறத்திலிருந்து சில நெற்களை யெடுத்துக் குறிபார்த்து வேர்வையடைந்து விதிர்விதிர்த்து மயிர்க்கூச்செறிந்து கையை மோந்துபார்த்து நாமமாயிரமேத்த நின்ற நாராயணனைச் சிந்தித்து அவனது காளமேகத் திருவுருவையும் வலங்கையாழி யிடங்கைச் சங்கையும், தோளிணை மேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையையும் அபிநயித்துக்காட்டி, பிறகு வாய்திறந்து “அம்மனைமீர்! நீங்கள் சிறிதும் அஞ்சவேண்டா, ஏதோவொரு புதுத்தெய்வம் உங்கள் பெண்ணைத்தீண்டி நோய் செய்யவில்லை, நோய்செய்த தெய்வத்தை நானறிந்தேன், உங்கட்குந் தெரியச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

இவ்வுலகத்தை அளந்தவனும், இலங்கையைப் பாழ்படுத்தினவனும், குன்றமெடுத்துக் கல்மழை காத்தவனும், அமரர் அமுத முண்ணக் கடல் கடைந்தவனும் எவனோ அவன் ஊரிலுள்ள பசுக்களையெல்லாம் மேய்த்தும் உலகங்களையெல்லாம் பிரளயங் கொள்ளாதபடி ஒருகால் திருவயிற்றிலே வைத்து நோக்கியும் பின்பு வெளியிட்டும் இத்தனை செய்தும் திருப்திபெறாதவனாய் இன்னும் தனது குணங்களை விளங்கச்செய்யவேண்டித் திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் களவு கண்டு அக்குற்றத்திற்காகக் கண்ணிக் குறுங்கயிற்றால் உரலோடே கட்டுண்டவனாயும், காளியநாகத்தின் கொழுப்பையடக்கினவனாயும், சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் அறுத்து அவளது தமையனான கரனைப் போர்க்களத்திலே நரகவேதனையனுபவிக்குமாறு பங்கப்படுத்திக் கொன்றொழித்தவனாயும், பிராட்டிக்காக இராவணனது தலைகளை யறுத்தொழித்தவனாயும், நரசிங்கவுருக்கொண்டு இரணியனுடலைப் பிளந்தவனாயும், மாவலிகையில் நீரேற்று மூவுலகளந்தவனாயும், கூர்மரூபியாக மந்தரகிரியைத் தாங்கி வாசுகியினால் கடலைக் கடைந்தவனாயும், திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனாயும், ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு முதலையால் நேர்ந்த இடரைக் களைந்தவனாயும், ஆயிரந்திருநாமமுடையனாயும் பரஸித்தனயிரா நின்றானன்றோ, அப்பெருமான்தான் உங்கள் பெண்ணை இப்பாடுபடுத்தினவன் என்று கூறினள்.

அங்ஙன் சொல்லக்கேட்ட என் தாய் ‘அம்மா! வேறு தேவதாந்தரமொன்றுமன்றே இந்நோய் செய்தது, அவ்வெம்பெருமான்தானே, அவனேயாகில் தன்னடியாளான இவளுக்குத் திருத்துழாய்ப் பிரசாதம் தந்தருளாதொழிவனோ, தந்தே தீருவன்‘ என்று சொல்லிவிட்டு விசாரமற்று ஸ்வகார்ய பரையாயொழிந்தாள்.

அவன் கூத்தாடும்போது அவனது காரரர்ந்த திருமேனியைக் கண்ணாற் கண்டது முதல் நான்நிலைதடுமாறி வாய்பிதற்றி விகாரமுற்றேன், இந்நிலைமையிலே வாடை தானும் வந்து வீசி விரஹத்தால் மெலிந்து கிடக்குமென்னுடலைத் துன்பப்படுத்துந் திறம் சொல்லிமுடியாது, கையிலே மடலைக்கொண்டு தெருவேறப் புறப்படத் துணிவுடையேனாயினும் யாரேனுஞ் சிலர் நிறக்கேடான வார்த்தைகளைச் சொல்லிப்பழிப்பார்களே யென்றிட்டு அங்ஙன் புறப்படாது வாளாஇருந்திட்டேன்,

இனி அவனுக்குத் தூது விடுவோமென்று பார்த்து வேறொரு அநுகூலரையுங் காணாமையாலே நெஞ்சுதன்னையே அழைத்து ‘நெஞ்சே! நீ எனக்காக மணிவண்ணன் பக்கலிலே சென்று திருத்துழாய் பிரசாதம் கேள், தருகிறேன் தரமாட்டேன் என்பதில் ஏதாவது ஒரு பதில் வார்த்தையை அவன் சொல்லும்படி நான் சொல்லியனுப்புகிற சொல்லை அயலாருடைய காதில் படாதபடி ரஹஸ்யமாக நீ சொல்லி, அதுகேட்டு அவன் அன்பு தோற்ற விசாரித்தாலும் சரி, அந்த சங்கதியே நமக்குத் தெரியாதென்று திரஸ்கரித்தாலும் சரி, ஏதோ ஒரு பதிலைத் தெரிந்துகொண்டு அவ்விடத்தில் தாமதித்து நில்லாமல் கடுகவந்து சேர்ந்திடு’ என்று சொல்லிப் போகவிட்டேன். போன அந்நெஞ்சு என்னை மறந்து அக்கடல்வண்ணரிடத்தே ஆழ்ந்தொழிந்தது. என்னிடத்துப் பொறாமையுடையரான ஊராருடைய எண்ணமே பலித்ததாயிற்று. என் நெஞ்சே எனக்கு உதவாதிருக்க வேறு யார் எனக்குத் துணையாவார்? என்னைப்பற்றிக் கவலை கொள்வாரே கிடையாது. நெருப்பினருகில் வைத்த மெழுகுபோலே இற்றுப் போகாநின்றது என் ஆத்மவஸ்து. ஊரெல்லாம் துஞ்சினாலும் இக்கண்கள் உறங்குகின்றில. அவனை மறந்தாகிலும் பிழைக்கலாமே நான், அப்படி மறக்கவும்மாட்டாதே அவனது நாமங்களையே வாய்வெருவிக் கொண்டிராநின்றேன்.

“நாயகன் தானே வந்து சேருகிறான், சிறிது ஆறியிருக்க வேண்டாவோ? இப்படியும் பதறலாமோ?” என்கிறீர்களோ? நன்று சொன்னீர்கள், கடல் போல வளர்ந்து காமத்தை யுடையவர்கள் நன்மை தீமைகளை யுணர்ந்து அடங்கியிருக்கக் கடவர்களோ? வாஸவதத்தையென்று ப்ரஸித்தையான ஒருத்தி தனது தோழிமார்களையெல்லாம் விட்டொழிந்து விலங்கிட்டிருந்த வத்ஸராயன் பின்னே தெருவேறப் புறப்பட்டுப்போனாளே, அவளை இகழ்ந்தார் ஆரேனுமுண்டோ? அவளைப் போன்ற துணிவு உடையளான எனக்கு இத்துணிவுக்கு ப்ரதி கோடியாக ஸ்வரூபசிக்ஷை பண்ணுகிறவர்கள் எனக்குத் தலைவரல்லர், அவர்களது சொல்லை நான் பேணமாட்டேன், பின்னே என் செய்யவேனென்றால்.

அவனுடைய திருமேனியை ஸேவித்துக் காதல் தீரவேண்டித் திருவேங்கடம் முதலிய திருப்பதிகள்தோறும் நுழைந்து அவனுடைய குணக்கேட்டை விளக்கவல்ல நூதன ஸஹஸ்ர நாமங்களைப் பேசிக்கொண்டு, இகழ்வாருடைய பேச்சுக்களை மதியாமல் தெருவேற மடலூர்ந்து செல்வேனத்தனை என்று தலைக்கட்டிற்றாயிற்று.

—-

Dravidaveda

back to top