ஸ்ரீ:

பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாந் திருவந்தாதி


இது, மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்களுள் மூன்றாமவரான பேயாழ்வாரருளிச்செய்ததும், நாலாயிரப்பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாக ஸ்ரீமந்நாதமுனிகளால் வகுக்கப்பட்ட இயற்பாவில் மூன்றாவது பிரபந்தமுமாகும். பொய்கையாழ்வாருடைய திருவந்தாதிப் பிரபந்தத்திற்கு அடுத்ததான (இரண்டாந் திருவந்தாதிப் பிரபந்தத்திற்கு அடுத்தபடியாக இத் திருவந்தாதி அவதரித்தது பற்றி மூன்றாந் திருவந்தாதி யென்று இதற்குத் திரு நாமமிட்டு வழங்கலாயினர் முன்னோர்

இப்பிரபந்த மருளிச்செய்த பேயாழ்வாருடைய திருவவதார வரலாறு முதலியன முதற்றிருவந்தாதியுரைத் தொடக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளன; அங்கே கண்டுகொள்க

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியிலே ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளை நிர்ஹேதுகமான எம்பெருமானருளாலே தோன்றிய பரபக்திதசையை அடைந்துள்ள ஜ்ஞாநவிசேஷத்தாலே ஸாக்ஷாத்கரித்த நுபவித்து அத்திருமாலுக்கு சேஷமான விபூதியை ஸ்வதந்த்ரமென்றும் அந்ய சேஷமென்றும் பிரமிக்கிற அஜ்ஞாந விருள் நீங்கும்படி பூமிமுதலிய பதார்த்தங்களைத் தகளி முதலியனவாக உருவகப்படுத்திக்காட்டி, உபய விபூதியுக்தனான எம்பெருமானே சேஷியென்றும் அவனுக்கு சேஷமாயிருப்பதே ஆத்மஸ்வரூபமென்றும் அவனது திருவடிகளிற் செய்யுங் கைங்கரியமே புருஷார்த்தமென்றும் அதனைக் கைப்படுத்தித் தரும் உபாயமும் அவன் திருவடிகளே யென்றும் நிஷ்கர்ஷித்துப் பேசினார்.

பூதக்காழ்வார் இரண்டாந் திருவந்தாதியில்-கீழே பொய்கையாழ்வாரோடு கூடவிருந்து எம்பெருமானது திருக்குணங்களை யநுபவித்ததனால் அவனது அருளாலே வந்த தமது பரபக்தி யானது பரஜ்ஞாநதசையை அடையும்படி பரிபக்வமாகி வளர, பாஜ்ஞாந தசையையடைந்த அந்த ப்ரேமவிசேஷத்தாலே எம்பெருமானுடைய தன்மைகளை முழுவதும் ஸாக்ஷாத்கரித்த நுபவித்தார்.

இத் திருவந்தாதியில் பேயாழ்வார் – கீழ் இரண்டு ஆழ்வார்களோடு கூடவிருந்து எம்பெருமானுடைய திருக்குணங்களை யநுபவித்ததனால் அவனது இன்னருளாலே பரமபக்தி தலையெடுத்து வளரப்பெற்று, கடலைக்கண்டவன் அதனுள் உண்டான முத்துமணி மாணிக்கம் முதலியவற்றைத் தனித்தனி கண்டு உகக்குமாபோலே, லக்ஷ்மி சங்கு கௌஸ்துபம் முதலியவற்றுக்கு இருப்பிடமாய் அவயவஸௌந்தர்யாதிகள் அலையெறிகிற பெரும்புறக்கடலாகிய எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்து ‘ இன்னது கண்டேன் இன்னது கண்டேன்’ என்று வகுத்துரைத்து, அக்காட்சியினாலே தமக்குண்டான ஜ்ஞாநவைசத்யத்தினால் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களுக்கு உரிய அர்த்த விசேஷங்களையும் பன்னியுரைக்கிறார்.

கீழ் இரண்டு ஆழ்வார்கள் வையந்தகளி யென்றும் அன்பே தகளி யென்றும் இரண்டு திருவிளக்கு ஏற்றிக்காட்ட, இவர் கண்டேன் கண்டேன் என்கிறார் காணும். ”மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடு மாயனைக்கண்டமை காட்டுத் தமிழ்த்தலைவ ” ரிறே இவர்.

எம்பெருமானை உபயவிபூதியுக்த னென்றார் பொய்கையார்; அவன் நாராயண சப்தவாச்யனென்றார் பூதத்தார் ; நாராயண சப்தத்தோடே ஸ்ரீமத்பதத்தையுங் கூட்டிக்கொள்ள வேணுமென்கிறாரிவ்வாழ்வார் என்று பூருவர்கள் ரஸமாக நிர்வஹிக்கும்படி. இது- ஒவ்வொரு திருவந்தாதியிலும் முகற்பாசுரத்திற்கு உள்ளீடான பொருளை உபஜீவித்து அருளிச்செய்யும்படியாம்.


ஆழ்வார் திருவடிகளே சரணம்.


மூன்றாந் திருவந்தாதி தனியன் உரை.


குருகைகாவலப்பனருளிச்செய்த தனியன்

இருவிகற்ப நேரிசை வெண்பா


சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்

காரார் கருமுகிலைக் காணப்புக்கு – ஓராத்

திருக்கண்டே னென்றுரைத்த சீரான் கழலே

உரைக்கண்டாய் நெஞ்சே யுகந்து.பதவுரை.

சீர் ஆரும் மாடம் அழகு பொருந்திய மாடங்களையுடைய
திருக்கோவலூர் அதனுள் திருக்கோவிலூரில்
கார் ஆர் கருமுகிலை கார்காலத்துக் காளமேகம்போன்ற எம்பெருமானை
காண புக்கு ஸேவிக்கப் புகுந்து
ஓரா நெஞ்சேன்னும் உட்கண்ணாலே அநுசந்தித்து
திருக்கண்டேன் என்று உரைத்த ‘திருக்கண்டேன்’ என்று தொடங்கி நூறு பாசுரமருளிச் செய்த
சீரான் சீர்மை பொருந்திய பேயாழ்வாருடைய
கழலே திருவடிகளையே
நெஞ்சே எனது நெஞ்சமே!
உகந்து உரை மகிழ்ந்து பேசு;
(கண்டாய் – முன்னிலையசை.)

* * * – பேயாழ்வாருடைய திருவடிகளே சரணமென்று உறுதிகொண்டிருக்குமாறு தமது நெஞ்சுக்கு உபதேசிப்பதாம். ஓடித்திரியும் யோகிகளாய்ப் பதியே பரவித்தொழுந் தொண்டரா யிருந்த முதலாழ்வார்கள் மூவரும் ஒருநாளிரவு ஒன்று கூடினது திருக்கோவலூரிலேயாதலால் “சீராருமாடத்திருக்கோவலூரதனுள்” எனப்பட்டது. திருக்கோவலூராயனாரைக் கவிபாடுகின்ற திருமங் கையாழ்வார் ”மழைமுகிலேபோல்வான் தன்னை” என்றருளிச் செய்ததை உட்கொண்டு ‘காரார் கருமுகிலை’ எனப்பட்டது. மழைக்காகத் திருக்கோவலிடைகழியிலே ஒதுங்கி அங்கே யொரு மழைமுகிலைக் கண்டுகளித்த பேயாழ்வாருடைய திருவடிகளையே அநுஸந்திக்கவேணுமென்ற தாயிற்று.


தனியன் உரை முற்றிற்று.

Dravidaveda

back to top