(2424)

(2424)

மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை

கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், – திங்கள்

சடையேற வைத்தானும் தாமரைமே லானும்

குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.

 

பதவுரை

மங்குல் தோய் சென்னி

மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான

வடவேங் கடத்தானை

வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு

காப்பு அணிவான்

திருவந்திக் காப்பிடுவதற்காக

திங்கள் சடை ஏற வைத்தானும்

சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்

தாமரை மேலானும்

தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்

தாம்

ஆகிய இவர்கள்

குடை ஏற குவித்துக் கொண்டு

திருமுத்துக்குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு

கங்குல்

ஸந்த்யா காலந்தோறும்

புகுந்தார்கள்

திருமலைக்குச் செல்லுவர்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட ப்ரஹ்மருத்ரர்கள் திருமலையில் எதோவொருகால் வந்து ஆச்ரயித்துப் போமவர்களல்லர், அந்திதோறும் புகுந்து திருவந்திக்காப்பிடுவ ரென்கிறார். கங்குல் என்ற சொல் இரவுக்கு வாசகமாயினும் இரவின் முகமான அந்திப்பொழுதைச் சொல்லக்கடவ திங்கு.

திங்கள் சடையேற வைத்தாணும் – தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்த சரணமடைந்த சந்திரனை முடியின்மீது கொண்டு வரமளித்துப் பாதுகாத்ததனால் சிவன் “நளிர் மதிச் சடையன்“ என்றும் “சந்த்ரமௌலி“ என்றும் பெயர் பெற்றனனென்க.

ஈற்றடியில், திருவாராதனத்திற்கு உபகரணமான குடையொன்றைச் சொன்னது – மற்றும் சாமரம் முதலிய உபகரணங்கட்கும் உபலக்ஷணெமென்க.

இரண்டாமடியில் ‘புகுந்தார்கள்‘ என்று இறந்தகாலமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ‘நித்யமாகப் புகுந்துகொண்டிருக்கின்றனர்‘ என்று நிகழ்காலப் பொருள் கொள்ளக் குறையில்லை “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉ முக் காலமுமேற்புழி“ என்ற நன்னூற் சூத்திரமுணர்க.

 

English Translation

The Lord residing amid clouds in the Northern hills of venkatam is served by the crescent-wearing Siva and the lotus-seated Brahma who enter the abode of night, houling parasols and other paraphernalla for wroship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top