2693

(2693)

……    ……   ……..அன்றியும் பேர்வாம னாகிய காலத்து மூவடி மண் தாரா யெனக்கென்று வேண்டிச் சலத்தினால் நீரேற் றுலகெல்லாம் நின்றளந்தான்         மாவலியை—–

 

பதவுரை

அன்றியும்

அது தவிரவும்,

பேர் வாமன் ஆகிய காலத்து

மிகச்சிறிய வாமானானாகத் திருவவதரித்த காலத்தில்

மா வலியை

மஹாபலியினிடத்து

மூ அடி மண் எனக்கு தாராய் என்று வேண்டி

‘மூவடி நிலம் எனக்குக் கொடு’ என்று யாசித்து

நீர் ஏற்று

அவன் தாரை வார்த்து தததம் பண்ண அதனைப் பெற்று

சலத்தினால்

சிறிய அடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளப் பதாகிய கபடத் தினாலே

நின்று

நிமிர்ந்து

உலகு எல்லாம் அளந்தான்

லோகங்களை யெல்லாம் அளந்து ஸ்வா தீனப் படுத்திக் கொண்டவன் ;

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *- மஹாபலி யென்னும் அஸுரராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையும் வென்று மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாட்சி செய்துகொண்டு செருக்குற்றிருந்தபொழுது அரசிழந்த தேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அப்பெருமான் குள்ள வடிவான வாமநாவதாரங்கொண்டு

காச்யபமாமுனிவனுக்கு அதிதி தேவியினிடந் தோன்றிய ப்ராஹ்மணப்ரஹ்மசாரியாகி,- வேள்வி யியற்றி யாவர்க்கும் வேண்டிய அனைத்தையுங் கொடுத்து வந்த அந்த மாவலியிடஞ் சென்று, தவஞ் செய்தற்குத் தன் காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன் தாரை வார்த்துத் தத்தஞ் செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவி வளர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும் மற்றோாடியால் மேலுலகத்தையு மளந்து, தானமாகப் பெற்ற மற்றோரடிநிலத்திற்கு இட. மில்லையாகவே அதற்காக அவன் வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியை வைத்து அவனைப் பாதாளத்தி லழுத்தி அடக்கின வரலாறு அறியத்தக்கது.

“பேர் வாமனனாகிய காலத்து” என்ற பாடம் வெண்டளைக்குச் சேராதாகையாலும் ப்ராசீன பாடமன்றாகையாலும் மறுக்கத் தக்கது. வாமனாகிய என்பதே பாடம். வாமன்- வாமநன்; சிதைவு. சீராற் பிறந்து சிறப்பால் வளராது, பேர் வாமனாகாக் கால் பேராளா” என்ற பெரிய திருவந்தாதியும் நோக்கத்தக்கது. பேர் வாமன் = வாமநர்களுக்குள்ளே பெருமை பெற்றவன் என்றாய், மிகச்சிறிய வாமநனென்ற தாயிற்று.

சலத்தினால் = “ఛలమ్” என்ற வடசொல் க்ருத்ரிம மெனப் பொருள்படும்; கபடமாக என்றபடி..

 

 

 

……….    ………    ……….ஆராத போரி லசுரர்களுந் தானுமாய்க் காரார் வரைநட்டு நாகங் கயிறாகப் பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத்துழாய்த் தாரார்ந்த மார்வன் தடமால் வரைபோலும் போர் ஆனை……

 

பதவுரை

ஆராத போரில்

தேவாஸுர யுத்தத்திலே (தத்திலே

அசுரர்களும் தானும் ஆய்

அசுரர்களும் தானுமாக

கார் ஆர் வரை நட்டு

மேகம் படிந்த மந்தர மலையைக் கொண்டுவந்து (மத்தாக) நாட்டி

நாகம் கயிறு ஆக

வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி

பேராமல் தாங்கி

அம்மலையானது பேராமல் மேலே கிளம்பாதபடி முதுகில் தரித்துக்கொண்டு

திரு துழாய் தார் ஆர்ந்த மார்வன் கடைந்தான்

திருத்துழாய் மாலையணிந்த திருமார்பையுடையனாய்க் கொண்டு கடைந்தவன்;

தடமால் வரைபோலும் போர் ஆனை

மிகப் பெரிய மலை போன்ற மத்தகஜமானது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *- முன் ஒரு காலத்தில், இவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணு லோகத்துச் சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப் பெற்ற ஒரு வித்தியாதர மகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கை வீணையில் தரித்துக்கொண்டு ப்ரஹ்மலோக வழியாய் மீண்டு வருகையில், துர்வாஸ மஹாமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க அவ்விஞ்சை மங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன் பெருமையை யுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம் முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஐராவத யானையின்மேற் பவனி வந்து கொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கை நீட்டிக்கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்த யானையின் பிடரியின் மேல் வைத்த வளவில் அம் மதவிலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது; அதுகண்டு முநிவரன் கடுங்கோபங் கொண்டு இந்திரனை நோக்கி இவ்வாறு செல்வச் செருக்குற்ற நினது ஐச்வரியங்களெல்லாம் கடலில் ஒளிந்து விடக் கடவன’ என்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன ; ஒழியவே, அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர்; பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி, அசுரர்களையுந் துணைக்கொண்டு மந்தர மலையை மத்தாக நாட்டி வாஸுகி யென்னும் மஹா நாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடைய லாயினர். அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமை வடிவமெடுத்து அம்மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்தி விடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன் என்ற வரலாறு அறியத் தக்கது.

கடலைக் கடைகிற போது தோளுந் தோள் மாலையுமாய் நின்று கடைந்தருளினனாதலால் அதனை அநுபவித்துச் சொல்லுகிறாள் திருத்துழாய்த் தாரார்ந்த மார்வன் என்று. கடைகிற போது தேவர்கள் அமுதம் எப்போது கிளரப்போகிறது!’ என்று அதில் நோக்காகக் கவிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்களேயன்றி எம்பெருமானது தோளுந் தோள் மாலையுமான திவ்யாலங்காரத்திலே கண் வைத்து ஸேவிக்கப் பெற்றிலர் என்ற குறை தீர, தான் அதில் ஈடு பட்டுப் பேசுகிறாள் போலும். ….. ……’

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top