(2155)

(2155)

ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்

நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், – கூற்றொருபால்

மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்

கங்கையான் நீள்கழலான் காப்பு.

 

பதவுரை

ஏற்றான்

ரிஷபத்தை வாஹனமாகவுடையவனும்

எயில் எரித்தான்

த்ரிபுரஸம்ஹாரம் பண்ணினவனும்

நீற்றான்

சாம்பலைப் பூசிகொண்டிருப்பவனும்

கூறு ஒருபால் மங்கையான்

தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும்

வார் சடையான்

நீண்ட ஜடையைத்தரித்துள்ளவனும்.

கங்கையான்

(அச்சடைமுடியில்) கங்கையைத் தாங்கிக்கொண்டிருப்பவனுமான ருத்ரன்.

புள் ஊர்ந்தான்

கருடனை வாஹநமாகவுடையவனும்

மார்வு இடந்தான்

இரணியனது மார்வைப்பிளந்தொழித்தவனும்

நிழல் மணி வண்ணத்தான்

நீலரத்நம்போலே குளிர்ந்தவடிவையுடையவனும்

பூ மகளான்

பெரிய பிராட்டியைத்திவ்ய மஹிஷியாகவுடையவனும்

நீள் முடியான்

நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்

நீள் கழலான்

நீண்ட திருவடிகளையுடையவனுமான சர்வேச்வரனுடைய

காப்பு

ரக்ஷணத்தில் அடங்கினவன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எல்லாப் பதார்த்தங்களையும் தரிப்பவன் ஸ்ரீமந்நாராயண னென்றார் கீழ்ப்பாட்டில்: ருத்ரனை அப்படிப்பட்டவனாகச் சிலர் சொல்லுகின்றார்களே! அஃது என்ன? என்று கேள்வி பிறக்க, ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தையும் சிவனுடைய அபரத்வத்தையுஞ் சொல்லி, சிவனும் எம்பெருமானுடைய ஆளுகையிலே அடங்கினவனே யென்றார்.

ஏற்றானாயும் எயிலெரித்தானாயும் நீற்றனாயும் கூற்றொருபால் மங்கையானாயும் வார்சடையானாயும் கங்கையானாயு மிருக்கிறரு ருத்ரன் – புள்ளூர்ந்தானாயும் பார்விடந்தானாயும் நிழல்மணி வண்ணத்தானாயும் பூமகளானாயும் நீண்முடியானாயும் நீள்கழலானாயு மிருக்கிற எம்பெருமானுடைய, காப்பு என்று அந்வயிப்பது. காப்பு- ரக்ஷ்யவர்க்கத்திற் சேர்ந்தவன் என்றபடி.

சிவனுடைய விசேஷணங்களை வரிசையாக இட்டு, பிறகு எம்பெருமானுடைய, விசேஷணங்களை வரிசையாக இட்டு, இன்னான் இன்னானுடைய காப்பு- என்று அடைவுபடச் சொல்லலாமாயிருக்க , அப்படிச் சொல்லாமல் விஷ்ணு ருத்ரர்களை மாறிமாறித் தொடுத்திருப்பது இருவர்க்குமுள்ள வாசி உடனுக்குடனே தெரியவேணுமென்பதற்காக. தமோகுணமே வடிவெடுத்ததாயும் மூடர்களுக்கு உவமையாக எடுக்கக்கூடியதாயு முள்ள ரிஷபத்தை வாஹநமாக வுடையவன் அவன்; வேதஸ்வரூபியான பெரிய திருவடியை வாஹநமாகவுடையவன் இவன்; தன்னை ஆச்ரயித்தவர்களின் குடியிருப்பான திரிபுரத்தைச் சுட்டெரித்தவன் அவன்; ஆச்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு விரோதியான இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனிவன்; தான் ப்ராயச்சித்தியென்று தோற்றும்படி நீறுபூசின ஸர்வாங்கத்தையு முடையான் அவன்; ச்ரமஹரமான நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவை யுடையவன் இவன். தன் உடலின் பாதி பாகத்தை ஸ்த்ரீரூபமாக ஆக்கிக்கொண்டவன் அவன்; உலகுக்கெல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாகவுடையவன் இவன்; தன் குறையைத் தீர்த்துக்கொள்ளும் வண்ணம் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவது எல்லர்க்குந் தெரியும்படி சடை புனைந்தவன் அவன்;  ஸர்வேச்வரத்வ ஸூசகமான திருவபிஷேகத்தையுடையவன் இவன்; தான் பரிசுத்தனாவதற்குக் கங்கையைத்தரிப்பவன் அவன்; அந்தக் கங்கைக்கு உத்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் இவன் – என்று சொல்லுமழகு காண்மின்.

எயில் – மதிள்; த்ரிபுரத்துக்கு இலக்கணை.

 

English Translation

The Lord, -whose mount is the Garuda bird, who tore Hiranya’s chest, who has a dark gem-hue, who keeps the lotus dame on his chest,  who wears a tall crown, and who raised his foot high that Brahma washed, -protects Siva, who rides the bull, destroyed the three cities, wears ash, is woman-by-half, wears mat-hair, and took the Ganga waters on his head.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top