(2146)

(2146)

வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,

தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற்

கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்

கரியானைக் கைதொழுதக் கால்.

 

பதவுரை

நினைதற்கு அரியானை

(ஸ்வப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்

சேயானை

(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்

ஆயிரம் பேர்

ஆயிரம் திருநாமங்களையுடையவனும்

செம் கண் கரியானை

சிவந்த திருக்கண்களையும் கறுத்த வடிவையுமுடையனுமான பெருமானைக் குறித்து

கை தொழுதக்கால்

அஞ்சலி பண்ணினால்

(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)

வினையால்

நல்வினை தீவினைகளால்

அடர்ப்படார்

நெருக்குபடமாட்டார்கள்;

வெம் நரகில்

கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்

சேரார்

(மீண்டும்) சென்று கிட்டமாட்டார்கள்;

தினையேனும்

சிறிதளவும்

தீ கதிக்கண்

கெட்டவழிகளில்

செல்லார்

போகமாட்டார்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தாம் ஒழுங்குபட நிற்கும் நிலைமையை யருளிச்செய்தார். இப்படிப்பட்ட நிலைமை மற்று எல்லார்க்கும் உண்டாகவில்லையே, அஃது ஏன்? என்று ஒரு கேள்வி பிறக்க; இந்த நிலைமை எல்லார்க்கும் உண்டாகக்குடியதே ; எம்பெருமானைக் கைதொழுதால் இஃது எல்லார்க்கும் தன்னடையே உண்டாகும் என்கிறார் இப்பாட்டில்.

வினையால் அடர்ப்படார்= ‘வினை’ என்னும் பொதுச்சொல்லானது நல்வினை தீவினை என்ற இருவினைகளையும் இங்குக் குறிக்கும்; உபநிஷத்தில் [முமுக்ஷு மோக்ஷத்துக்குப் போம் போது புண்யம் பாபம் என்ற இருவினைகளையும் உதறி விட்டுக் கல்மஷமற்றவனாய்ப் பரமஸாம்யத்தை அடைகின்றான்] என்று ஓதிவைத்திருக்கையாலே மோக்ஷமார்க்கத்திற்குப் பாபம் எப்படி இடையூறோ அப்படி புண்யமும் இடையூறென்பது நூற்கொள்கை. பாபம் நரகத்திலே கொண்டு தள்ளும்; புண்யம் ஸ்வர்க்காதி லோகங்களில் கொண்டு தள்ளும்; ஆகவே, பாபம் இரும்பு விலங்கு போன்றதென்றும் புண்யம் பொன்விலங்கு போன்ற தென்றும் சமத்காரமாகச் சொல்லுவதுமுண்டு. இனி, “வினையாலடர்ப்படார்” என்றவிதற்கு- இங்கே யநுபவிக்க நேரும் பாப பலன்களினால் துன்பப்படமாட்டார்கள் என்று பொருள்கொள்வதும் பொருந்தும்.

வெம் நரகில் சேரார்=[ எம்பெருமானோடு கூடியிருத்தல் ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருத்தல் நரகம் ] என்று ஸ்ரீராமயணத்திற் சொன்னபடியே எம்பெருமானைப் பிரிந்து வருந்துகையாகிற நரகாநுபவம் பண்ணமாட்டார்களென்கை.

 

English Translation

Karmas will not accrue on them, hell will not be their destiny, not the slightest pain will attend on them, -who worship with  folded hands, the dark-hued lotus-eyed Lord afar.  The Lord beyond the comprehension of the world.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top